கீழ் முதுகு வலி..>Spinealgia

வலியை ஏன் வாழ்க்கைத் துணை ஆக்க வேண்டும்?

முதுகு விறைப்பு, தசைப்பிடிப்பு, நாள்பட்ட வலி ஆகியன வயது ஆக ஆக நம்மைத் தொற்றிக் கொள்கின்றன. கீழ்முதுகை பாதித்த வலியானது அப்படியே பிட்டம், கால்கள், பாதம் வழியே பயணிக்கிறது. உடலில் ஏற்படும் கடினத்தன்மை / விறைப்புத் தன்மை நம் உடல் உறுப்புகளின் சுதந்திரமான இயக்கங்களுக்கு ஊறு விளைவிக்கிறது. பலஹீனமான உணர்வை உருவாக்குகிறது. சிலவேளைகளில் கால்கள், பாதங்கள், கால் விரல்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வினை ஏற்படுத்துகிறது.

கீழ்முதுகு என்றழைக்கப்படும் இடுப்பு முதுகெலும்பு ஆகிய முதுகெலும்புப் பகுதி உடலின் மேற்பகுதி எடையைத் தாங்கும் அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான முதுகெலும்புகளைக் கொண்டுள்ளது. எடை தூக்குதல், வளைதல், திரும்புதல் போன்ற செயல்களின்போது இடுப்பு முதுகெலும்போடு இணைக்கப்பட்டுள்ள கீழ் முதுகு தசையிலிருந்து செல்லும் பலமான விசையை எலும்புகளால் தாங்க முடியும்.

பொதுவாக தசை, தசைநார், நரம்பு, முதுகெலும்பில் ஏற்படும் காயங்களால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. அமர்தல் / நிற்கும்போது நம் உடலை வைத்துக் கொள்ளும் தவறான நிலை மற்றும் தேய்மானங்களால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. ஆர்த்ரிடிஸ் எனும் கீல்வாதமாகிய சிதைவு நோயால் முதுகெலும்பு அமைப்பில் பிளவு ஏற்பட்டு, முதுகுத் தண்டுவடம் அல்லது நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது.

ஆயினும் ஓர் நற்செய்தி !. கீழ் முதுகு வலிக்கு பெரும்பாலான நேரங்களில் அறுவை சிகிச்சை அற்ற முறையிலும், சிலவேளைகளில் அறுவை சிகிச்சையின் மூலமும் சிகிச்சை அளிக்க முடியும். ஆம்! “ALL THE WORLD IS FULL OF SUFFERING. BUT IT IS ALSO FULL OF OVERCOMING” எனும் ஹெலன் கெல்லரின் கூற்று நினைவுக்கு வருகிறது

காரணங்கள் :

மென்மையான திசுக்கள், முதுகெலும்பு வட்டுகள் (DISCS), இடுப்பு எலும்பு ஆகியனவற்றில் ஏற்படும் சில அசாதாரண நிலையும் கீழ் முதுகு வலிக்கான சில காரணங்களாகும். அதீத உழைப்பு, தவறான அமரும் / நிற்கும் நிலை, அதிக பளுவைத் தூக்கும்போது கையாளும் தவறான முறைகள், உடல் சார்ந்த அழுத்தம், மற்றும் காயங்கள், தசைகள் மற்றும் வட்டுகளில் பாதிப்பை உண்டாக்கி, அதனால் வலி மிகுந்த தசை இழுப்பு மற்றும் கீழ் முதுகு தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது.

முதுகெலும்பில் அமைப்பு ரீதியான மாற்றங்களை உருவாக்கும் முதுமை மூட்டழற்சி (OSTEOARTHRITIS) காரணமாக, சுருக்கப்பட்ட, பாதிப்புக்குஉள்ளாக்கப்பட்ட, எரிச்சலூட்டப்பட்ட முதுகெலும்பு நரம்புகளால் கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. இதனால் எலும்பு துருத்தல்கள் (BONE SPURS)அல்லது முதுகெலும்பு கால்வாய் (SPINAL CANAL) அல்லது நரம்புகளின் வேர்களில், எலும்புகளின் அசாதாரண அதீத வளர்ச்சி ஏற்பட்டு,முதுகெலும்பு கால்வாய் குறுகி முதுகெலும்பு குறுக்கம் (SPINAL STENOSIS) எனும் நிலை ஏற்படுகிறது. LIGAMENTUM FLAVUM எனும்முதுகெலும்பு அமைப்பு தடிமனாகி சில சிதைவு நோய்களால் காலப்போக்கில் முதுகெலும்பு கால்வாய் வரை நீண்டு முதுகுத் தண்டுவடம் மற்றும்நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

கீழ்முதுகிலிருந்து பாதம் வரை செல்லும் சியாடிக் (SCIATIC) நரம்பில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வீக்கம் காரணமாகவும் கடுமையான வலிஏற்படுகிறது. அதிர்ச்சி, முதுகெலும்பு பிரச்சனைகள் மற்றும் பிற உடல் நலப் பிரச்சனைகள் சியாடிக் நரம்பில் பாதிப்புகளைத் தூண்டலாம்.

வயது ஆக ஆக தண்டுவட எலும்பு இடைவட்டுகள் (INTER VERTEBRAE DISC) மாறலாம். அல்லது நீர் சத்தினை இழந்து அவை சிறிதாகவும், நெகிழ்வுத் தன்மை குறைவானதாகவும் மாறுகின்றன. வட்டுகளில் ஏற்படும் சிதைவு நோயால் வட்டுகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. ஆகவே அவை தங்களைத் தாங்களே பழுது பார்க்க இயலாமல் வேகமாக மோசமடைகின்றன.

வட்டுகள் (DISCS) முதுகெலும்புகளுக்கிடையே அதிர்ச்சி உறிஞ்சிகளாகச் (SHOCK ABSORBERS) செயல்படுகின்றன. முதுமை மூட்டழற்சி (OSTEOARTHRITIS), முடக்கு வாதம் (RHEUMATOID ARTHRITIS) போன்ற வட்டு சிதைவு நோய்களால் வட்டுகளால் அவற்றின் பணிகளைச்சரிவர செய்ய இயல்வதில்லை. இதனால் வலி ஏற்படுகிறது. இதனால் வட்டுகளின் இறக்கம் (HERNIATED DISC) ஏற்படலாம்.

வட்டுகளின் இறக்கத்தால் அன்னுலஸ் (ANNULUS) எனப்படும் வட்டுகளின் வெளி அடுக்கு பாதிக்கப்பட்டு, அவற்றின் உள்ளே இருக்கும் நியூக்ளியஸ்புல்போஸஸ் (NUCLEUS PULPOSUS) வெளிவந்து, நரம்பு திசுக்களின் மீது அழுத்தத்தை உண்டாக்குகிறது. வேதியியல் எதிர்வினை நிகழ்ந்துஎரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.

ஆஸ்டியோபொராஸிஸ் எனும் எலும்புச் சிதைவு நோய் காரணமாக மாற்றீட்டை (REPLACEMENT) விட அதிக அளவு கால்சியம் கிரகிக்கப்படுகிறது (ABSORPTION). இதனால் முதுகெலும்புகளில் முறிவு மற்றும் பாதிப்பு ஏற்படுகின்றன. ஸ்பான்டிலோலிஸ்தீஸிஸ் (SPONDYLOLISTHESIS) எனும் நிலையில் பலஹீனமான முதுகெலும்புகள் சீரற்ற முறையில் வரிசைப்படுத்தப்படும் நிலை உருவாகிறது.  ஸ்பான்டிலோஸிஸ் (SPONDYLOSIS) எனும் நிலையில் மூட்டுகள் இறுக்கமாகவும் வலி மிகுந்ததாகவும் மாறுகின்றன.

தடுக்கும் முறைகளும் சிகிச்சைகளும் :

பல வகை கீழ் முதுகு வலி அறிகுறிகளை வலி நிவாரணிகள், ஓய்வு, உடற்பயிற்சியால் சரி செய்ய இயலும்.

கை, கால்களை மெதுவாக நீட்டி மடக்குதல், குறைவான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்பாடுகளான நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளைத்தொடர்ந்து செய்வதன் மூலம் தசைகள் வலுப் பெறுகின்றன. இறுக்கமாவது தடுக்கப்படுகிறது. சரியான ஆரோக்கியமான உடல் எடையைப்பராமரித்தல் முக்கியமானது. உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தலும் முக்கியமானது. மூன்றாவதாக பணி மற்றும் வாழ்க்கை முறையால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பது மற்றும் நிற்பதாலும் கீழ் மூட்டு வலி ஏற்படுகிறது. ஆகவே கை கால்களை சீரான இடைவெளியில்நீட்டி மடக்கி முதுகுக்கு ஓய்வு கொடுக்கவும்.

தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள, எடை தூக்குதல், உட்காருதல், உடலை நகர்த்துதல் போன்ற செயல்களின்போது சரியான உடல்இயக்கவியலைப் (BODY MECHANICS) பின்பற்றவும்.

வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். கடினமான மற்றும் முடிச்சு ஏற்பட்ட முதுகுத் தசைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மசாஜ் செய்யவும்.

கீழ் முதுகு வலியால் அவதிப்படும்போது மல்லாந்து படுப்பதில் ஒருவித அசௌகரியம் ஏற்படுவதால் முழங்காலை சற்று மடக்கி, ஒருபக்கமாக சரிந்துபடுக்கவும்.  இரு கால்களுக்கு இடையே தலையணை வைக்கவும். மல்லாந்து படுப்பதானால், தொடைகளின் கீழ் தலையணை அல்லதுசுருட்டப்பட்ட துண்டினை (TOWEL) வைப்பதன் மூலம் கீழ் முதுகின் மீது ஏற்படும் அழுத்தம் குறைகிறது. நிலையான உறுதியான மேற்பரப்பின் மீதுபடுக்கவும்.

குதிகால் உயரமான செருப்புகள், ஷூக்கள் அணிவது, நிகோட்டின் உபயோகம் போன்றவை முதுகெலும்பு வட்டுகளில் சிதைவை ஏற்படுத்தி இரத்தஓட்டத்தைக் குறைப்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.

கீழ் முதுகின் நல்ல ஆரோக்கியத்துக்கு அமரும் / நிற்கும் முறையில் (POSTURE) செய்யப்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகும். முதுகுக்குத் தாங்கலாக (BACK SUPPORT) இருக்கும் நாற்காலியை பயன்படுத்தவும். அல்லது இடுப்பு பகுதிக்கான தலையணையைபயன்படுத்தவும். உங்களது பாதங்கள் தரையின் மேல் தட்டையாக இருக்கவும். முழங்கால் இடுப்புக்கு சமமான மட்டத்தில் இருக்கவும். நீங்கள்அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் உங்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதனால் கைகளை அடிக்கடிநீட்டி மடக்குதலைத் தவிர்க்கலாம். உங்களது கணினியின் திரை கிட்டத்தட்ட கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கட்டும். கணினி திரை கண்களின்மட்டத்திற்கு சற்று குறைவான உயரத்தில் இருக்கட்டும். ஆம்! COMPUTER MONITOR ஐ MONITOR செய்யும் அதேவேளை, உங்கள் முதுகின்பாதுகாப்பையும் சற்று MONITOR செய்து கொள்ளுங்களேன்.

எலும்புகளின் நல்ல ஆரோக்கியத்துக்கு உணவு முறை முக்கியமான ஒன்றாகும், போதுமான கால்சியம், பாஸ்பரஸ் சத்துள்ள உணவை சரியானஅளவில் உண்ணவும். மீன், இறைச்சி, பால் பொருட்கள், கோதுமை, பார்லி, சோளம் போன்ற தானியங்கள், ஓட்ஸ், பரட்டைக் கீரை (KALE),பருப்பு வகைகள் (LEGUMES) கரும் பச்சை நிற இலைகளுடன் கூடிய காய்கறிகள், சிவப்பு முள்ளங்கி, போன்றவை கால்சியம், பாஸ்பரஸ் ஆகியஇரு கனிமங்கள் நிறைந்த உணவுகளாகும். வைட்டமின் D க்கு உடம்பில் சூரிய ஒளி படுவது இன்றியமையாததாகும். மேலும் அதுவே உணவாகவும்கிரகிக்கப்படுகிறது.

கீழ்முதுகு தசைகளின் நல்ல ஆரோக்கியத்துக்கு இரவில் நன்றாக ஓய்வெடுப்பது அவசியமானது.

வலி தொடர்ந்தால் எலும்பியல் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். அவர் கீழ்க்காணும் மருந்துகளை உங்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

வலி தொடர்ந்தால் எலும்பியல் நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். அவர் கீழ்க்காணும் மருந்துகளை உங்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

  • தசை தளர்த்திகள் (MUSCLE RELAXANT)
  • அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லா மருந்துகள் (NONSTEROIDAL ANTI-INFLAMMATORY DRUGS – NSAIDS)
  • வலி நிவாரணியாக கொடீய்ன் (CODEINE) போன்ற போதை மருந்துகள்
  • அழற்சியைக் (INFLAMMATION) குறைக்கும் ஊக்க மருந்துகள்
  • கார்டிகோஸ்டிராய்டு (CORTICOSTEROID) ஊசிகள்

கீழ்க்காணும் உடற்பயிற்சி சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்.

  • மசாஜ்
  • கை கால்களை நீட்டி மடக்குதல்
  • வலுவூட்டும் உடற்பயிற்சிகள்
  • முதுகு மற்றும் முதுகெலும்புகளைத் திறமையாகக் கையாளுதல்
உடல்நிலையின் தேவைக்கேற்ப அறுவை சிகிச்சை கூட பரிந்துரைக்கப்படலாம்.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியுடன் கூடிய சத்தான உணவு முறை ஆகியன எலும்புகளின் தேய்மானத்தால் ஏற்படும் விளைவுகளைக்குறைத்து முதுகின் வலிமையைக் கூட்ட உதவுகின்றன.

நாம் முதுகில் பாரம் சுமக்கலாம். ஆனால் முதுகையே பாரமாக சுமக்கலாமா? வேண்டாம்!. போர்க்களத்தில் வேண்டுமானால் “புறமுதுகுகாட்டுவது” கோழைத்தனமாக இருக்கலாம். முதுகு வலியோடு எலும்பியல் நிபுணர்களிடம் “புறமுதுகு காட்ட” தயக்கம் தேவையில்லை.

எலும்பியல்நிபுணரைத் தொடர்பு கொள்வோம். வலிகளைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் துரத்துவோம்.

Loading