T.சௌந்தர் எழுதிய அதிக வாசகர்களை கவர்ந்த காலமும் படைப்புலகமும் என்ற ஆராய்வு கட்டுரையை தொடர்ந்து இசை பற்றிய இத்தொடர் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது.
இயற்கை – நிலம் – இசை : 01 – T.சௌந்தர்
இயற்கை என்றால் என்ன என்று ஒருவரிடம் கேட்டால் மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதி, மனித நடமாற்றமற்ற அல்லது கண்ணில் படுகின்ற அழகான காட்சிகளான மலை, கடல், காடு போன்ற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்வதை காணலாம். இது போன்ற கருத்துக்கள் மிக இயல்பாக மக்களிடமிருந்து வரும் கருத்துக்களாகும். சாமானிய மனிதர்களை பொறுத்தவரையில் இயற்கை என்றாலே முதலில் தென்படுகின்ற நிலப்பகுதியும் அதனுடன் இணைந்த காட்சிகளுமே பிரதானப்படுவதுடன் மனிதரின் கைபடாத இடங்களும் இயற்கை என பொருள் கொள்கின்றனர். சிலர் இயற்கையை இறைவனுடனும் ஒப்பிட்டு பேசுவர்.
இயற்கை என்பது என்னவென்று விஞ்ஞானிகளிடம் கேட்டால் வேறு விளக்கம் கிடைக்கும். பருப்பொருள் [ Matter ], ஆற்றல் [ Energy ], காலம் [ Time ], வெளி [Space ] என இயற்கையை அறிவியல் ரீதியாக விளக்குவர். அறிவியல் என்பது இயற்கையை அறிவது என்பதும் இயற்கையை மேலும் மேலும் அறிவதே விஞ்ஞான வளர்ச்சியாகவும் கருதப்படுகிறது.
இயற்கை என்பது இயல்பாய் இருப்பது என்றும் பொருள்படும். அதனால் இயல்பு என்பதை இயற்கை என்றும் தமிழில் வழங்குவர்.
மனிதனை உள்ளிருந்தும் இயக்கும் மாபெரும் சக்தியாகவும், எல்லாக் கலைகளிலும் மறைந்தும் மறையாமலும் ஆழமான உணர்வுநிலைகளின் பின்புலமாகவும், மர்மமானதாகவும், நம்மை நாமே உணர்ந்து கொள்ள தூண்டும் அறிவுக்கருவூலமாகவும் , எந்தவகையிலும் பிரிக்க முடியாத வண்ணமும் பின்னிக்கிடக்கிறது இயற்கை எனும் மாபெரும் சக்தி! உயிர்களின் சரணாலயமாக விளங்கும் இப்பூமி இயற்கையின் சொல்லுதற்கரிய பெருங் கொடையாகும்.
பொதுவாக மனிதர்களின் ஆழ்மனத்திலும், உளவியலிலும் பெருந்தாக்கத்தை விளைவிப்பது இயற்கை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அவன் வாழும் பிரதேசம் மட்டுமல்ல அதையும் தாண்டிய அழகான நிலஅமைப்பு மற்றும் காட்சிகளும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
தன்னைச் சுற்றியிருக்கும் இயற்கையை உன்னிப்பாக அவதானித்த ஆதிமனிதன் மிருகங்களையும், பறவைகளையும் பார்த்துக் கற்றுக்கொண்டதுடன், தனது வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் இயற்கையையும், காலமாற்றங்களையும் உற்று நோக்கி தனது அறிவையும் வளர்த்துக் கொண்டான்.
மனிதன் வாழும் நிலப்பரப்பும் [ Landscape ] அல்லது பிரதேசமும் மட்டுமல்ல காலநிலையையும் சார்ந்தே அவனது எண்ணங்களும், தேடல்களும் இருக்கும். மாறுகின்ற காலநிலை பற்றிய சிந்தனை முதலிடம் பெறுவதை நாம் ஐரோப்பிய நாடுகளில் காண்கிறோம். விடியப்போகும் புதிய நாளின் காலநிலை எப்படியிருக்கும் என்பதே ஐரோப்பியரின் முதன்மையான சிந்தனையாகவும், அதற்கான தயாரிப்புகள் இருப்பதையும் காண்கிறோம். செய்தி ஊடகங்களில் நடைமுறை செய்திகளின் முக்கியத்துவதற்கிணையாக காலநிலை பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன.
ஆங்கிலத்தில் Land என்ற சொல் தமிழில் பல சொற்களுக்கு நிகராக உள்ளது. அதை பூமி, நிலம், நிலப்பரப்பு, நிலவுலகின் கூறு, கரை, தரை, உலகு, தேசம், நாடு, அரசுப்பகுதி, மாவட்டம், வட்டாரப்பகுதி, நில உடைமை, விளைநிலம் , வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு என பல கோணங்களில் பயன்படுத்துகிறோம்.
Landscape : என்பதை இயற்கை நிலக்காட்சி , இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம் , இயற்கைக்காட்சி ஓவியம்- நாட்டுப்புறம், கிராமம், இயற்கைக்காட்சி, நிலத் தோற்றம் , நிலப்பகுதி என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். ஐரோப்பிய சூழ்நிலையில் நிலத்தோற்றம் [ Landscape ] என்ற பதம் சூழல், தோட்ட வடிவமைப்பு, ஓவியம், இசை சார்ந்ததாக பொதுவாகக் கருதப்படுகிறது. பரவலாக, மனிதரால், தங்கள் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்ற நிலஅமைப்பு Landscape என கருதப்படுகிறது. ஆனாலும் நிலப்பரப்புடனான [ பூமி ] தொடர்பு என்பது ஒலியின் ஊடாகவும், அதைவிட இசையினூடாகவும் உணரப்படுகிறது என்ற கருத்தாக்கமும் நிலவுகிறது.
நிலத்திலிருந்து மனிதனை பிரிக்க முடியாது. அவனது வாழ்வும், சாவும் அதில் தான் நிகழ்கிறது. அது அவனைப் பலவகைகளில் பாதிக்கிறது. நிலமின்றி மனிதனில்லை. உணவளிக்கும் உழவும், தொழிலும் அவனது ஆதாரங்கள். அதனால்தான் மனிதன் மண்ணை / நிலத்தை அதிகம் நேசிக்கிறான். ஆண்டாண்டுகாலமாக, சந்ததி சந்ததியாக நிலத்தை/ மண்ணைப் போற்றுகின்றான். நிலத்தின் மீதான பற்று, நாட்டுப்பற்றாக, தாய்மண் பற்றாக வளர்கிறது. மனிதனது சிந்தையில் ஆழப் பொதிந்துள்ள நிலம் / மண் வாழ்வின் அனைத்திலும் இன்றியமையாது ஊடுருவி நிற்கிறது. அது அவனது உணர்ச்சி, அறிவு போன்றவற்றிலும் அதிக தாக்கமும் செலுத்துகிறது.
நிலம் என்பது செல்வத்தின் அடையாளமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது. உலகெங்கும் நடைபெற்ற, நடைபெறுகின்ற போராட்டங்கள், புரட்சிகள் அனைத்திலும் நிலத்திற்கான போராட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக விவசாயிகளின் போராட்டம் என்பது மறுக்கப்பட்ட நிலவுரிமை சார்ந்ததாக இருந்தது. இப்போதும் இருந்து வருகிறது. உலகை உலுக்கிய ரஷ்யப்புரட்சியில் லெனின் நிலத்தையும் மையக்கோரிக்கையாக வைத்ததை நாம் மறுக்க முடியுமா ?
புகழ்பெற்ற தெலுங்கானா, நக்சல்பாரி போராட்டங்கள் நிலமீட்பு போராட்டங்களாகவும் இருந்தன. வறுமை ஒழிப்பு கோரும் கம்யூனிச இயக்கம் உலகெங்கும் நில சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நிலம் என்பது அதிகாரத்தின் மைய பொருளாக இருக்கிறது. விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் கூலிகளாக்கப்பட்ட வரலாறும் நாம் காண்பவையே. அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்ந்த வண்ணமும் இருக்கின்றன.
உலகெங்கும் நடக்கும் தேசிய இனப்போராட்டங்களிலும் நிலவுரிமை முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது.தேசியக் கோட்பாடு பற்றிய ஜோசப் ஸ்டாலின் கோட்பாட்டில் முதல் வருவது நிலம் என்பதே! நிலம்,மொழி,பண்பாடு அதனுடனான உளவியல் என்கிறார் ஸ்டாலின்!
நிலம் மீதான மனிதனது ஆழ்ந்த பிணைப்பு, உளவியலில் ஆழ்ந்த தாக்கத்தை விளைவிப்பதுடன் அதன் விளைவாக உருவாகும் செயல்கள் கலைகளாகவும், பண்பாடாகவும் வளர்கின்றன. அதில் பிரதானமானவையாக இருப்பவை அவனது மண் சார்ந்த கலைகள். அவை, வாழ்வனுபவங்களிலிருந்து ஊறி, ஆழப்பதிந்து நிற்பவை. ஒவ்வொரு நிலப்பகுதி மக்களும் தங்கள், தங்கள் வாழ்வனுபவங்களிலிருந்து பெறும், தங்கள் மண் சார்ந்த கலைகளை போற்றி கொண்டாடுகிறார்கள். அவை அவர்களது மண்சார் நாட்டுப்புறக்கலைகளாவதுடன், பண்பாடுகளின் அடையாளமாகவும் திகழ்கின்றன.
அவற்றுள் சில அது உருவான காலத்தையும், அதன் தேவையையும் தாண்டி சென்றாலும் பின், அதுவே மதநம்பிக்கையாகவும் வளர்ந்து, நவீன காலத்திலும் மறக்க முடியாத ஒரு போலி நம்பிக்கையாகவும், பாமரத்தனத்தையும் வளர்த்துவிடுவதையும் காண்கிறோம்.
மேலோட்டமாக நாம் இப்படி சில கருத்துக்களைக் கூறினாலும், இயற்கை பற்றிய ஆய்வு என்பது, மிகவும் பரந்த பொருளில் பேசக்கூடிய, மிகப்பெரியதோர் அறிவுத்துறையாக இன்று வளர்ந்துள்ளது. இயற்கை விதியின் அறிவியல் என்பது இயந்திரவியல், இயற்பியல் போன்றே நீண்ட காலமாக ஓர் அறிவியலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவியல் என்பது தத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
இயற்கை ஆய்வில் மனிதரின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, வாழ்வு போன்றவற்றை விஞ்ஞானரீதியாக அணுகும் ஓர் துறையாக மானிடவியல் [ Anthropology ]என்ற ஓர் துறையும் மிக முக்கிய ஒன்றாகவிளங்குவதுடன், மனித பழக்க, வழக்கங்கள், பண்பாடு போன்றவற்றையும் , இயற்கை வரலாறு, இயற்கையில் மனிதனின் தன்மையும், இயல்பையும் ஆராயும் ஒரு துறையாகவும் விளங்குகிறது.
இயற்கை குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகளும், தத்துவவாதிகளும் மிக ஆழமான ஆய்வுகளை வளர்த்தெடுத்திருக்கின்றனர். கடந்த நூற்றாண்டுகளில் இயற்கைக்கும், மனிதனுக்குமுள்ள தொடர்புகள், இயற்கை சூழலுடன் இணைக்கப்பட்டுள்ள நிலைகள், இயற்கையில் ஈடுபடுவதால் உண்டாகும் ஆரோக்கியத் தன்மைகள், அதில் நில அமைப்பு காட்சிகள் உருவாக்கும் மனிதர்களின் விருப்பு நிலைகள், இயற்கை வளங்களின் நிலைத்தன்மை போன்ற பலதுறைகளில் கோட்பாடுகள் உருவாகி வளர்ந்துள்ளன.
இயற்கை சூழல்கள், மனிதர்களின் பணிகளில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், மனஅழுத்தங்களைப் போக்குவதற்கும், அழுத்தம் நிறைந்த வாழ்வு நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கும் உதவுகின்றன என நவீன உளவியல் மருத்துவநிபுணர்கள் கூறுகின்றனர்.
முதியோர் பராமரிப்பு [ Care Homes ] இல்லங்களில் வாழும் முதியவர்களில் நோய்வாய்ப்பட்டிருப்பவர்களில், அதிகளவில் மருந்துகளை எடுப்பவர்கள் தங்கள் ஜன்னல் வழியே காட்சிகளைப் பார்ப்பதன் மூலம் விரைவாகக் குணமடைகிறார்கள் என்பதுடன், வீடியோக்கள் மூலம் காணும் காட்சிகளாலும் மன அழுத்தங்கள் குறைகின்றன எனவும், பாதுகாப்பு இல்லங்களில் வாழும் வயோதிபர்கள் கிழமையில் ஒரு மணி இயற்கைக் காட்சிகளைக் காண்பதன் மூலம், வெளியே போகாதவர்களைவிட மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மனித ஆற்றல்களை வளர்க்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பலவிதமான சிகிச்சை முறைகள் விஞ்ஞானத்தின் உதவி கொண்டும், இயற்கை சார்ந்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் Ecotherapy என்பது ஓர் முறையாகக் கருதப்படுகிறது. இயற்கையில் அதிக நேரம் செலவளித்தல் என்ற பொருள்படும் இந்த முறையை பழங்கால கிரேக்கர்கள் கண்டறிந்தனர். Paracelsus என்ற அறிஞர், ” குணப்படுத்தும் கலை என்பது இயற்கையில் இருக்கிறது: மருத்துவரிடமிருந்து அல்ல “ . [ The art of healing comes from nature, not from the physician.] என்பார். Ecotherapy என்பது இயற்கை சிகிச்சை என்ற பொருளில் இன்று பயன்படுத்தப்படுகிறது.
இயற்கையில் தமக்கான அகத்தூண்டுதலை பெறுவதை பல கலைஞர்கள் உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இன்று இது நவீனமானதாக வெளிப்படுகின்ற ஓர் சொல்லாடல் [ Inspiration } எனினும் ஆழ்ந்து சிந்தித்தால், வெளியே ஒரு வகைமைப்படுத்தலுக்கப்பால், தமது கலை ஆர்வத்தால் இயற்கையாகவே தம்மை மறந்து அதிக நேரம் அதிலேயே ஒன்றித்திருப்பதை நாம் காண முடியும்.
இயற்கைக்காட்சிகளைத் தாண்டி தம்மை மறந்து இயல்பாக / இயற்கையாக மனம் ஒன்றுபட்டு நிற்கும் நிலை என்பது இன்று மதவாதிகளால், ஒருவகையாக மிகைப்படுத்தி பேசப்படும் தியானம் என்பதற்கு ஒப்பாகக் கொள்ளலாம். பொதுவாக கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள், அதில் தங்களை அறியாமலேயே, தம் ஆர்வமேலீட்டால் பல மணிநேரம், ஏன் பல நாட்களாகக் கூட தம்மை மறந்து ஈடுபடுத்திக் கொள்வர்.
மனதை வசீகரிக்கும் இயற்கை நிலக்காட்சிகள் புது,புது உணர்வுகளைத் தந்து மனத்தைத் தாக்குகின்றன. மன இறுக்கங்களைத் தளர்த்துகின்றன. ரயில், பஸ், கார்,சைக்கிள் போன்றவற்றில் கொஞ்சம் சுற்றி வந்தாலே மனது லேசாகிவிடுகிறது. அதனால்தான் மனிதன் சுற்றுலாவை கண்டுபிடித்தான் போலும்! அதை இன்றைய மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
பயணங்கள் புதிய அனுபவங்களையும், புதிய சிந்தனைகளையும், மனதுக்கு ஆறுதலையும் வழங்குகின்றன. தனித்து பயணம் செய்யும் போதும், ஒரு குழுவாகப் பயணம் செய்யும் போதும் வேவ்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. பொதுவாக நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில், விட்டு விடுதலையாக நிற்க பயணங்கள் பெரிதும் உதவுகின்றன. மக்கள் நெரிசல் அதிகமிருக்கும் நகரங்களை விட, இயற்கை எழில் நிறைந்த வெளிகளில் பயணிப்பது நுண்புலன் இயக்கத்தின் வலுவை அதிகரிக்கவும், மனஒருமைப்பாடும், ஒழுங்கமைப்பும் உறுதிபட உதவி செய்கிறது.
பயணம் என்று சொன்னாலே எல்லோர் மனதில் உற்சாகம் பொங்கி வரும். இயற்கையை சுற்றி பார்ப்பது ரசனைக்கு மட்டுமல்ல உடல் நோய்களிலிருந்தும் சுகம் பெறவும் பேருதவி செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அந்தவகையில் கவலைகளைத் தீர்க்கும் மருந்துகளில் பயணங்களும், இயற்கையை சுற்றி பார்ப்பதும் பயனளிக்கும் என்று மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.. கடுமையான மன அழுத்தங்களிலிருந்து விடுபட இன்றைய மனிதன் இயற்கையை நோக்கி செல்கிறான்.
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்.”
என, இன்று உளவியலாளர்கள் சொல்வதை கண்ணதாசன் அறிந்து சொல்லியிருக்கிறார் என எண்ணத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு இயற்கை மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
நிலம் விரித்த அழகிய இயற்கைக் காட்சிகளைக் காணும் போது ஏற்படும் உற்சாகத்தால் தானாகப் பூ மலர்வது போல உடனடியாகப் பிறப்பது பாட்டு தான்! அதனால்தான் பயணங்களுடன் இசையை ரசிப்பது மனதுக்கு இன்பமளிக்கக்கூடிய தனிப்பண்பாக உள்ளது.
எமது நாடுகளில் இயற்கையை ரசிப்பதற்கு பெரும்பாலும் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை, அல்லது இயற்கையை ரசிப்பதை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்றே கூறலாம். ஆனால், தனிப்பட்டரீதியில், தங்கள் இயற்கை ரசிப்பின் அனுபவங்களை கிடைக்கும் சந்தர்ப்பங்களில், ஆங்காங்கே உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தவும் தவறுவதில்லை என்பதையும் காணமுடியும்!
தமிழரின் இயற்கை ரசிப்பு பற்றி பாரதியார் ” கர்மயோகி “என்ற பத்திரிகையில் பின்வருமாறு எழுதுகிறார்.
” உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடைக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந் தோறும் குளக்கரைகளிற் போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டங் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரியாஸ்தமய
காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போவதில்லை.
நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் சௌந்தர்யங்களைக் கண்டு மோகித்துப் பரமானந்த மெய்தியவர்களாய்ப் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்திக் காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்தில் தான் இந்த துரதிருஷ்ட நிலை கொண்ட நாட்டில் வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள். “
பொதுவாக இயற்கையின் மீதான நமது கவனக்குறைவை பாரதி சுட்டிக்காட்டினாலும் நாம் நம்மை சுற்றியுள்ள இயற்கையால் ஈர்க்கப்படுகிறோம் என்பதை முழுமையாக மறுக்க முடியாது.
முழு நிலவில் காய்வது, மழையில் நனைவது – தோய்வது, காலை பனியை ரசிப்பது, காலை இளம் வெயிலில் காய்வது, தென்றலின் சுகத்தில் திளைப்பது, மலர் வாசத்தில் மயங்குவது என இயற்கையின் வெவ்வேறு நிலைகளில் நம்மை சுற்றியுள்ள இயற்கையிலிருந்தும் நாம் ஈர்க்கப்படும் அனுபவங்களை பெற்றிருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல, மழையில் தோய்ந்து தொங்கும் பசுங்குழைகள், குளிரில் ஒடுங்கி நிற்கும் பறவைகள், மழையால் நீர் தழும்பி நிற்கும் நீலநிறம் காட்டும் கிணறுகள், நீரில் மழைத்துளிகள் இடும் வளையங்கள், பாலத்தில் கரைபுரண்டோடும் மழை வெள்ளம் போன்றவை நம்மை ஈர்ப்பதுடன், அதன் அழகுகளையும் நாம் ரசிக்கின்றோம்.
ஆனாலும் இவை பற்றி நாம் அதிகம் பேசிக்கொள்வதில்லை என்பதையும் மறுக்க முடியாது.
இயற்கையை ரசிப்பது என்பது பொதுவான மனிதனின் குணம் எனினும், இயற்கை பற்றிய வியப்பும் அது குறித்த ரசனை சார்ந்த குறிப்புகள் பழங்காலத்திலும் உலகெங்கும் ஆங்காங்கே காணப்படினும் , இயற்கை சார்ந்த நவீன எழுத்துக்கள் தோன்றியது ஐரோப்பிய மரபிலே என்பது முக்கியமானதாகும்.
குறிப்பாக கி.பி. 15ம் நூற்றாண்டுக்குப் பின்னரான காலத்தில் ஏற்பட்ட வியாபார நோக்கத்துடனான செல்வ தேடலும், பிற உலகை அறியும் பேராவலும் மிகப்பெரிய இயக்குசக்தியாய் அமைந்தது. இதன் மூலம் பயணம்பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தன. இதன் பெறுபேறாய் இயற்கை குறித்து ஏராளமான எழுத்துக்களும்,குறிப்புகளும், ஆய்வுகளும் வெளியாயின.
நவீன காலத்தில் இயற்கை ரசிப்பு என்பதை ஒரு இயக்கமாக கலைகளில் வெளிப்படுத்தியதில் ஐரோப்பியரின் மரபு மற்றும் அவர்களது கல்வி சார்ந்தது என்பதும், இன்று எல்லோரது இயற்கை பற்றிய விழிப்புணர்வுக்கும், ரசனைக்கும் அவர்களே முன்மாதிரியாக இருந்ததுடன் பிற சமூகங்கள் உந்துதல் பெறவும் காரணமாய் இருந்தனர் என்பது மறுக்க முடியாததாகும்.
இயற்கை வளங்கள் அதிதீவிரமாக அழிக்கப்படும் இன்றைய நவீன காலத்தில் இயற்கை பற்றி பலவிதமான ஆய்வுகளும் நடைபெற்றுவருவதுடன் சுற்று சூழலியல் [ Ecology ] பற்றிய இயக்கங்களும் வளர்ந்து வருகின்றன. இயற்கை பற்றிய ஆய்வு என்பது, மிகவும் பரந்த பொருளில் பேசக்கூடிய, மிகப்பெரியதோர் அறிவுத்துறையாக இன்று வளர்ந்துள்ளது.
“Our imagination is stuck only by what is great, but the lover of natural philosophy should reflect on little things ” – Alexander Von Humboldt.
ஜெர்மனியின் புகழ் பெற்ற புவியியலாளரும், இயற்கைவாதியுமான Alexander Von Humboldt ன் கூற்று படைப்பூக்கத்திற்கு மிகவும் முக்கியமான கருத்தாகும். நம்மை சுற்றியுள்ள இயற்கையில் உள்ள மரம், கொடி, செடிகள் மற்றும் புறச்சூழலில் உள்ள சிறிய விஷயங்களை எல்லாம் நுட்பமாக உற்று நோக்கி பார்ப்பதே படைப்பூக்கத்திற்கு உற்சாகம் தரும்.
இயற்கையானது சுவையின் விதைகளை மட்டுமே தருகிறது, கலாச்சாரம் அவற்றை வளர்த்தெடுத்துச் செல்லும். இக்கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்தது போல பண்டைத்தமிழ் இலக்கியங்கள் சாதாரணமக்களுக்கு அற்பமாகத் தோன்றும் விஷயங்களையெல்லாம் கூர்மையுடன் அவதானித்து எழுதி வைத்துள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இயற்கை, நிலம் இசையுடன் மிகுந்த தொடர்புள்ளது என்பதையும், பல பரிமாணங்களிலும் மனித மனங்களில் ஆழமான தாக்கம் விளைவிப்பதையும், இயற்கையுடன் இசைவான நீண்ட மரபைக்கொண்ட தமிழ் இலக்கியப்பரப்பிலே, முக்கிய ஆவணமாக கருதப்படும் தொல்காப்பியத்தில், இன்று முக்கியத்துவம் பெறும் சூழலியல் [ Ecology], அறிதல்சார் மானிடவியல் [,Cognitive anthropology], இனக்குழுவிலங்கியல் [ Ethnography], தாவரவியல் [ Ethnobotany ] போன்ற துறைகளில் மட்டுமல்ல, இசையிலும் ஆய்வு செய்யத்தகுந்த ஏராளமான செய்திகள் இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பாவில் 17ம் நூற்றாண்டில் எழுந்த நவசெவ்வியல்வாதம் [ Neoclassicism ] என்ற புதிய கலை இயக்கம் இயற்கையை கலைகளுடன் பிணைத்துப் பார்க்கும் புதிய பார்வைகளை முன்வைத்தது. அது இயற்கைக்கு நெருக்கமாக இருத்தல், அதற்கிசைவாக ஒழுகுதல் போன்றவைகளை விஞ்ஞானரீதியிலும், கலைரீதியிலும் தெளிவுபடுத்தலாம் என்ற கருத்து நிலையை முன்வைத்தது.
பல பரிமாணங்களிலும் மனித மனங்களில் ஆழமான தாக்கம் விளைவிக்கும் இயற்கை, நிலம் மீதான மனித அனுபவங்களை புரிந்து கொள்வதற்கும், அதனுடன் தன்னையும் இணைத்து பார்ப்பதற்கும் இசை மிகவும் பயனுள்ள வழியாகும் என்பதை அந்த இயக்கம் முன் வைத்தது.
[ தொடரும் ]