சென்னையே போய்வருகிறேன்……..சிறுகதை

காமாட்சி மேன்சன். திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையிலிருந்து செல்லும் ஒரு சந்தில் உள்ளே போய் இரண்டு மூன்று குறுக்கு சந்துகள் கடந்து சென்றால் வரும்.

அதிகாலை சத்தம். அது சேவல் கூவுவதோ, காகம் கரைவதோ, சிட்டுக்குருவி கீச் கீச்சிடுவதோ அல்ல. தெருக்குழாயில் தண்ணி அடிக்க முந்துவதில் சண்டை, தேநீர்க்கடையில் அலறும் பாட்டு, நெரிசலான சந்தில் வேகமாகச் செல்ல முயலும் டூ வீலர் ஹாரன், யாரோ யாரையோ அடிக்க அழுகை. பலவிதமான சத்தங்கள், தங்கராசுவை எழுப்பி விட்டது.

பக்கத்தில் படுத்திருந்த குமாரின் கைலி விலகி யிருந்தது. நெரிசலான வீடுகள், காற்று வசதி போதாமை. இரவிலும் அனலடிக்கும். உடம்பை மறைக்கப் பேருக்கு ஏதோ உடை, குமாரின் கைலியை இழுத்து விட்டு தங்கராஜ் எழுந்தான். இன்னொரு நண்பன்செல்வம் கிளம்பிவிட்டான். அவன் காலை 8 மணிக்கு அச்சகத்துக்குச் செல்ல வேண்டும்.

முதல் மாடி. பல் விளக்கிக் கொண்டே கீழே பார்த்தான். காலைக் கடனுக்காக டாய்லெட்க்கு வரிசை. அடுத்த பிரச்சனை. அப்பாடா இன்றோடு இவற்றுக்கு முற்றுப்புள்ளி. ஆம். தங்கராசு இன்று சென்னையை விட்டுக் கிளம்புகிறான்.

தொங்கிக் கொண்டிருந்த தன் சட்டைகளில் காசு தேடினான், ஒன்றும் அகப்படவில்லை . குமார் எழுந்து விட்டான்.

‘என்ன ப்ரோ தேட்ற’.

‘ப்ரோ’ எரிச்சலா இருக்குதுன்னு சொன்னாலும் குமார் அதை விடத் தயாராக இல்லை .

‘டீக்கு காசு இருக்குதான்னு பார்த்தேன்டா மாப்ள’.

தொங்கிக்கொண்டிருந்த தன் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

‘அப்படியே எனக்கு ஒரு டீ வாங்கியாந்துரு’.

‘சரி’,

தெருவில் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிறது. முகக் கவசம் அணியச் சொல்லி. யாரும் அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை . நுரையில்லாத டீ கொடுங்க. நுரையோடு டீ அழகென்றாலும் பாதி கிளாஸ் தான் டீ கிடைக்கும். சென்னைக்கு வந்தவுடன் பழகிக் கொண்ட முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

அதேமாதிரி ஜூஸ் குடிக்கும் போது ஐஸ் போடக்கூடாது. பாதி கிளாஸ்ல ஐஸ்தான் இருக்கும். மெதுவாக உறிஞ்சினான். ஆகா, புத்துணர்ச்சி, தொங்கிக்கொண்டிருந்த முக்கிய செய்திகளைப் படித்தான்.

வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பு.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல்ஸை விழுத்தியது.

ஆக்சிஜன் பெற மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். பிரதமர் வேண்டுகோள்.

ஒரு டீ வாங்கிக் கொண்டு திரும்பினான். இப்ப வரிசை குறைவாக இருந்தது. உள்ளே சென்ற டீ சீக்கிரம் என்று அவசரப்படுத்தியது. குமார் குளித்துவிட்டு தயாராகி இருந்தான்.

‘எப்படிடா மாப்பிள அதுக்குள்ள? அம்புட்டு வரிசை நிக்குது’.

‘குளிச்சிட்டேன். மிச்சம் மீதி எல்லாம் பிரஸ்ல. நான் வரட்டா’

டீயை பறித்துக் கொண்டு விரைந்தான்

“டிபன்டா மாப்ள?’

‘முதலாளி வாங்கி கொடுப்பாரு’.

தங்கராசுக்கு ஏமாற்றம். அவன் கூட சாப்பிடப் போயிருந்தால் நாமும் ஏதாவது சாப்பிட்டு இருக்கலாம். காசு கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. ஏற்கனவே 300 ரூபாய்க் கடன்.

குளித்துவிட்டு மேன்ஷனை விட்டு வெளியே வந்தான். எங்கே போவது?

இராயப்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் அலுவலக பணியாளராக வேலை செய்கிறான். இதுதான் வேலை என்று இல்லை. டீ வாங்கி வருவதிலிருந்து வங்கிகளுக்குச் செல்வதுவரை சகல விதமானவற்றைச் செய்வான். அவ்வப்போது கரஸ்பான்டென்ட் வீட்டில் சில்லறை வேலைகள், பள்ளிக்கூடம் ஓராண்டாக இணைய வழியாகச் சென்றதால் தங்கராசுக்கு பெரிதாக வேலை இல்லை. ஏதோ பேருக்குச் சம்பளம் கொடுத்தார்கள். அதுவும் ஒழுங்காக இல்லை . மேன்ஷனில் அந்த சிறிய அறையில் மூன்று பேர் தங்கி வாடகையைப் பகிர்ந்து கொண்டனர். சம்பளத்தின் பெரும்பகுதி அதற்கே போய்விடுகிறது.

எங்கே போவது என்று யோசித்து இறுதியாகத் தங்கம் அக்கா தட்டுக்கடைக்குப் போவது எனத் தீர்மானித்தான். அக்கா கடையில் ஏற்கனவே 500 ரூபாய்க்கு மேலே பாக்கி, அக்கா கேட்காது. இதுவரை கேட்டதே இல்லை.

‘வாடா தங்கராசு. இன்னா இத்தினி நாளா காணோம்?

” ஒன்றும் சொல்லாமல் படிக்கட்டில் அமர்ந்தான். ஒரு இரும்பு கடையின் பக்கத்தில் இருக்கும் சின்ன இடத்தில் அக்காவின் தள்ளுவண்டி, 10 மணிக்கு மேல் தான் கடை திறப்பார்கள். காலை 6.30 மணியிலிருந்து 10 மணிவரை அக்கா ராஜ்யம்தான். கடையின் விஸ்தாரமான படிக்கட்டுகள் உட்கார்ந்து சாப்பிடத் தோதாக அமைந்தது.

தங்கராசு எத்தனையோ இடத்தில் சாப்பிட்டிருந்தாலும் அக்கா கடை இட்லி மாதிரி எங்கேயும் சாப்பிட்டதில்லை. மல்லிப்பூ மாதிரி வெண்மையாகவும், பொதி பஞ்சு மாதிரி மெத்து மெத்தென்றும் இருக்கும். சுடச் சுட ஆவி பறக்கும் ஐந்தாறு இட்லிகளைச் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் கூட வயிற்றுக்கு காணாது.

ஒரு தட்டில் மூன்று இட்லிகளை வைத்து சட்னியை ஊற்றிக் கொடுத்தார். வரண்ட பூமி தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் வேகத்தை விடக் காய்ந்து போ யிருந்த வயிறு இட்லியைக் கபளீகரம் செய்தது.

வேண்டுமா என்றெல்லாம் அக்கா கேட்கமாட்டார். இன்னும் மூன்று இட்லியை எடுத்து வைத்து சட்னி ஊற்றினார்.

“போதுங்கா’ என்றான் பலவீனமான குரலில், கைகழுவ முயலும் போது “இன்னாடா… அதுக்குள்ள கயிவிட்ட?’

“வயிறு ஃபுல் ஆயிடுச்சி……….அக்கா ?”

“சொல்டா’.

‘வந்து இன்னைக்குதான் ஸ்கூல்க்கு போறேன், சம்பளம் வாங்குனவுடன காசு கொடுத்துட்றேன்’,

‘டேய் உங்கிட்ட எப்பவாது துட்டு கேட்டிருக்கனா?”

“இல்லக்கா எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சி. அதனால்தான் இங்க வரதுக்கு யோசிச்சன்’.

“நீ என்னிகினாலும் துட்டு கொடுத்துடுவேன்னு தெரியும். அப்படியே கொடுக்கலைன்னா இன்னடா?”

‘அப்படி இல்லக்கா’.

‘என் புருஷன் சாவும் போது எனக்கு 25 வயசு, எங்க அம்மா ஒண்டியாளா தாங்கிக்கினா’,

‘என் சின்ன வயசுல அப்பா பூட்டாரு’.

‘எங்க போய்ட்டாரு?’

“செத்து பூட்டாருடா. மூஞ்சி கூட ஒயிங்கா ஞாபகம் இல்ல “.

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கடையைக் கட்டிக் கொண்டே பேசினார். அக்காவைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலோடு படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான். – தன்னைப்பற்றியும் ஒருத்தன் அக்கறையோடு கேட்கிறானே என்று தங்கம் தொடர்ந்தார்.

‘எங்க அம்மா ஒரு சாய்பு வூட்ல வேலை செஞ்சது. அவுங்கதான் ஸ்கூல்ல படிக்க வச்சாங்க. ஆறாங்களாசுக்கு மேலப் படிப்பு ஏறல. பார்த்தசாரதி கோயிலாண்ட பூ விப்பன். அப்பால பீச்சாண்ட போய் விப்பேன்.

‘அங்க ரெகுலரா ஐஸ் விக்கிறவரு என் மேல் இஷ்டப்பட்டாரு. எவன் கையிலாவது கட்டிக் கொடுக்கனுமே. அம்மா சரின்னுடுச்சி’.

‘எனக்கும் அவர புடிச்சுது. சினிமா ஹீரோ கணக்கா வளத்தி, என்னவுட கொஞ்சம் கலர் கம்மிதான். நான்கூட அப்ப ஷோக்கா இருப்பேன்டா. இப்பதான் ஒடம்பு ஊதி பெர்த்துச்சு’

தங்கராசு மனசுல கற்பனை பண்ணிப் பார்த்தான். புடிபடல.

‘கொஞ்ச நாள் கூட வாய்ந்திருக்க மாட்டேன்டா. எவ பொல்லாத கண்ணுன்னுதெரியல”.

‘என்னாச்சு?’

அக்கா அவனை எந்திரிக்கச் சொல்லி படிக்கட்டைப் பெருக்கிக் கொண்டே,

‘பீச் ரோட்ல எந்த பொறம்போக்கு நாயி எதுல வந்து இடிச்சான்னு தெரியல. அடிச்சு போட்டுட்டு பூட்டான். என் மவராசன் அல்பாயுசுல பூட்டாரு’.

‘அய்யோ ‘.

‘அநியாயத்துக்கு பறிகொடுத்துட்டேன்.’ பெருக்குவதை நிறுத்தி கண்ணைக் கசக்கினாள்.

‘அப்புறம் என்ன பண்ணிங்கக்கா?”

‘முண்டச்சியா எங்க அம்மாகிட்ட வந்து சேர்ந்தேன்,

அக்கா அழுதுகொண்டே. மூக்கை சிந்தித் தூரப் போட்டுவிட்டு ஏற்கெனவே மங்கிப் போயிருந்த புடவையில் துடைத்துக் கொண்டாள்

‘சாய்பு வூட்ல காலி பண்ணிக்கினு போகேலே இத வச்சி பொழச்சிக்கோன்னு இந்த வண்டியை வாங்கி குட்தாங்க’.

‘எங்க அம்மா கேட்டுச்சு. இன்னொரு கல்யாணம் கட்டிக்கிறாயாடின்னு?

வாழ்ந்தது கொஞ்ச நாள்தான். ஆனா அந்தப் பாவியை மறக்க முடியல. அதெல்லாம் வானான்டன்’,

*ஆனா ஒன்னு பாத்துட்டன்டா தங்கராசு, தாலி அறுத்த பொம்பள நிம்மதியா வாயவே முடியாது’.

‘ஏன்கா ?’

‘அவன் அவனுக்கு அரிப்பு எடுத்தா எவளாவது கிடைக்க மாட்டாளான்னு தெருநாய் கணக்கா தேடுவானுங்க’.

‘ரொம்பப் பொல்லாத்துடா உலகம். இங்க இருக்கிறவனுங்க தவிக்கற வாய்க்கு பச்சத் தண்ணி கொடுக்க மாட்டானுங்க. ஊட்டுக்குள்ள வராதனுவானுங்க. ஆனா பொம்பளையாண்ட வேலை செய்யறதுக்கு மட்டும் எதுவும் ஒட்டிக்காது”.

‘எவ்வளவோ பாத்துட்டேன். தூ. நாய் பொழப்புடா’. சலிப்புடன் பேசினாள், “தனியாருக்கற பொம்பளிங்க அசிங்கமா கலீஜா இருந்தாதாண்டா நிம்மதி. எவனும் சீந்த மாட்டான்’.

தங்கராசு புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘என் கதைய வுடு, நீ இன்னா பண்ண போற?*

‘ஊருக்கு போகலாம்து இருக்கேன்.

‘ஏன்டா ?’

‘வேலையும் இல்லை. சம்பளம் இல்லாம என்னக்கா பண்றது?”

‘கார்ப்ரேஷன்ல ஆளு எடுக்கிறாங்களாமே’.

‘எங்கக்கா ?’

‘திர்லகேனி ஆபிஸ்லதான். சத்தினம் புள்ள மகேஷ் தெரியுமா?

‘தெரியாதுகா.

‘என்னடாது. உன் வயசு பையன தெர்லங்கற”.

‘சத்தியமா தெரியாதுகா.

‘அவன் கார்ப்பரேஷன்ல குரானா கணக்கு எடுக்கற வேலை பாக்கறானாம். மாசம் 15 ஆயிரம் சம்பளம். அரைநாள் தான் வேலையாம்’.

‘அது எல்லாருக்கும் ஈசியா கிடைக்காததுக்கா’.

‘பழைய கவுன்சிலர் டில்லின்னு இருக்காரு. அவராண்ட போனா சுளுவா நடந்துடும். நல்ல மனசன். கானக்குன்னா துட்டுல்லாம் வாங்க மாட்டாரு’.

‘ஸ்கோல்ல உனக்கு எவ்ளோடா சம்பளம் ?’

‘கொரானாக்கு முன்னப் பத்தாயிரம். இப்ப அஞ்சாயிரம். அதுவும் எல்லா மாசமும் இல்ல.

‘தூ. இந்தப் பிஸ்கோத்து சம்பளத்துக்கா வேல செஞ்ச?’

‘டேய் இந்த வண்டில வெறும் இட்லி வித்தே, அதுவும் பாதி கம்முனாட்டிங்க துட்டு குடுக்காமலயே மாசம் பத்தாயிரம் ரூபா நிக்குது.

‘அக்கா இன்னைக்கு ஸ்கூல்ல பணம் வாங்கனவுடன்ன கொண்டாந்து கொடுத்துடறேன்”.

‘அட சீ பொறம்போக்கு, உன்ன சொல்லலடா’.

‘அதுவும் வேபாரம் 2 மண்நேரந்தானேடா’.

‘ஏன்கா நீ சாயந்திரத்தில் கடை போடறதில்ல?”

“இப்ப சம்பாரிக்கர்தே ஜாஸ்திடா. ஒத்த ஆளு.கொட கூலி கிடையாது. மிச்ச மீதி மாவுலியே வவுத்த கழுவிக்குவேன்.

‘ஆனா பொயுதன்னிக்கும் வேல செரியா இருக்கும். மாவாட்றவது சட்னி அரைக்கிறதுன்னு’.

‘தினம் மாவாட்டுவீங்களா?”

‘பின்ன? நம்ப கஷ்டமருங்க ஏழ பாழங்கடா, கூலி காரங்கான்னாலும் வவுத்துக்கு நல்ல இட்லி துன்னட்டும்னுதான்.

அக்கா கடை இட்டிலி சூப்பரா இருக்குற இரகசியம் இதுதான் போலும்.

‘இந்த வண்டியச் சாயங்காலம் பஜார்ல நிர்த்தி கண்டலு, முட்டை ஆம்புளேட், கவுச்சின்னு போட்டு வித்தா மாசம் ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கலாம்”. ‘உண்மையாவா அக்கா?

“மெய்யாலுமேடா. நீ ஓனா எடுத்து நடத்திபாரு

சமைச்சுக் கொடுக்கிறதெல்லாம் நான் பாத்துக்குறன். கூட வந்து வேலை செய்யுங்கடின்னா செய்யறதுக்கு ஆளுங்க இருக்குது. நாம் போடறத தின்னுட்டு செய்வாளுங்க”.

‘ஓ’.

‘இதில் இன்னான்னா போலீஸ்காரனுங்களுக்கு மாமுலுக்குன்னு 2000- 3000ன்னு எடுத்து வச்சிடனும். அப்பதான் பொறுக்கிப் பசங்கள டீலிங் பண்ணமுடியும்.’

‘அதெல்லாம் நீ பயப்படாதே.எங்கடைன்னாலே மெர்சல் ஆவானுங்க’.

‘சரிக்கா ,

“தெனம் பத்து மணிக்கு மேல் வண்டி சும்மாதானே கீது. மத்தியானத்தில் ஏதாவது ஒரு சோறு, புளி சோறு, சாம்பார் சோறு எலும்பிச்சை சோறு ஏதாவது ஒன்னு. கூட தயிர் சோறு. இது போதும். கூட ஏதாவது கவுச்சி அய்ட்டம் போட்டுக்கலாம். இதுல ஒரு பத்துப் பாஞ்சு ரூபா பாக்கலாம்.

‘மத்தியானம் சாயந்தரம் இரண்டும் சேர்த்து எவ்வளவு சம்பாதிக்கலாம்னு பாத்துக்க, உனக்கு வயசு கீது. உடம்பில் சக்தியும் கீது. நல்லாவே சம்பாதிப்ப. எனக்கு ஏதாவது உன் இஷ்டம் போல் ஒரு பங்கு குடு.’

‘அட இன்னடா கம்முனுக்கிற?”

‘ஒன்னு இல்லக்கா’

“சொல்றத சொல்லிட்டேன். அப்பாலைக்கு உன் இஷ்டம்’.

“சரிக்கா .

“என் பங்குன்னு உன் கிட்ட கேக்றது இன்னாத்துக்கு? பங்களா கட்டினு வாயத்துக்கா?

‘என் லைன்ல யாராவது இரண்டு புள்ளைங்களுக்கு காலேஜ் பீஸ் கட்டுவேன். எங்க காலம் மாதிரி இல்ல. பொட்டப்பசங்கல்லாம் இப்ப நல்லா படிக்குதுங்க. இஸ்கோலு முஷ்ட்டு காலேஜ்க்கு பீஸ் கட்ட துட்டு இல்லனு வூட்ல ஆத்தா அப்பா நிறுத்திறாங்க’,

‘அக்கா நா கிளம்பட்டா? கரஸ்பான்டட் மேடம் வந்துடுவாங்க. போய் காசு வாங்கிட்டு வந்துடறேன்.’

“ஏதோ என் மனஸ்ல பட்டதச் சொன்னேன். என்னடா அக்கா சோத்துக் கடை வக்க சொல்லுதேன்னு மிஷ்டேக் பண்ணிக்காதே’.

‘அப்படிலாம் இல்ல அக்கா’.

‘உன்ன மாதிரி பட்ச பசங்க கவுர்மென்டு வேலைன்னா குப்ப அல்டறதுக்கு கூட ரெடியா இருக்கறீங்க. ஆனா இந்த மாதிரி கடன்னா கவருத இல்லைன்னு நெனைக்கறீங்க”.

‘அக்கா சாரிக்கா. டயமாச்சு வரேன்’,

பள்ளிக்கூடத்திற்குள் நுழையும்போது.. கேட்டிலிருந்த வாட்ச்மேன் துரை,

‘எங்கடா போன? லேட்டா வர்ற. ஓவியா மேடம் வந்தவுடனே கேட்டாங்க. ‘என்னத்துக்கு அண்ணே ?”

‘பிரின்ஸ்பால் வேலை காலியா இருக்காம். உனக்கு குடுக்க தேட்னாங்க. ‘அண்ணா கிண்டலா’,

“இன்னா சொல்ல சொல்ற. பாதிப்பேருக்கு மேல ஊட்டுக்கு அம்சுட்டாங்க.’ ‘நானும் ஊருக்கு போலாம்…………

‘ஏய் தங்கராசு மேடம் உன்ன தேடிட்டு இருக்காங்க. சீக்கிரம் ஒடியா..

அலுவலகத்தின் வாசலிலிருந்து கணக்காளர் சரோஜா கூப்பிட்டார்

பள்ளி கரஸ்பாண்டன்ட் பன்னீர்செல்வம் கொரானாக்கு முன்னால், வாரத்திற்கு ஓரிரு நாள் வருவார். மகள் ஒவியா தினம் வருவார். இப்ப ரெண்டு பேருமே எப்போதோ ஒரு தடவைதான்.

குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தவுடன் உன்னதமான ஒரு வாசனை. மேடம் வரும்போது மட்டும் தான் இந்த வாசனாயை கூட்டிட்டு வருவாங்க போல. தங்கராக நினைத்துக் கொண்டான்.

‘எங்க சார் உங்கள் காலையிலிருந்து காணோம்?”

தங்கராக நெளிந்தான். எல்லோரும் மேடம் என்று அழைத்தாலும் இவனும் வேறு சிலரும் மட்டும் அக்கா என்று அழைப்பார்கள்.

“லேட்டாயிடுச்சுங்கா.

“அதான் தெரியுதே லேட்டுன்னு. ஏன்?”

‘இன்னைக்கு ஊருக்கு போறதுனால கொஞ்சம் வேலை இருந்தது’,

‘ஊருக்கா எதுக்கு?’

‘நீங்க வேலய விட்டு நிறுத்த போறீங்க. அதான் போலாம்து’.

‘அப்படியா? யார் சொன்னாங்க?

‘ஸ்டாப்புங்க”.

“இப்போ கஷ்டத்தில் இருக்குறதால கொஞ்சம் போர நிறுத்த வேண்டி இருக்கு. ஆனால் உன்ன நிறுத்தறதா திட்டமே இல்லையே’.

‘இல்லைங்கா சம்பளம் கட்ட மாட்டேங்குது. மேன்ஷன் வாடகையே முக்காவாசி போய்டுது’.

“நல்லா தெரியும் தங்கராசு. அதனால் அப்பாவும் நானும் உனக்கு வேற ஒரு வழி வச்சிருக்கோம். வீட்ல தோட்டக்காரர், உதவியாளு எல்லாரையும் நிறுத்திட்டோம். நீ இனிமே ஸ்கூலு வீடு ரெண்டையும் பாத்துக்க. மேன்ஷன காலி பண்ணிட்டு அவுட் ஹவுஸ்ல தங்கிடு. சாப்பாடு எங்க வீட்டிலேயே சாப்பிட்டுக்க. உனக்கு சம்பளம் ஐயாயிரம். நிலமை சரியாச்சனா பழைய சம்பளமே கொடுக்கறோம்.

தங்கறத்துக்கு இடம், சாப்பாடு. இதுதவிர உனக்கு வேற என்ன செலவு?

“வேற ஒன்னும் இல்லைங்கா’.

‘பீடி சிகரெட் தண்ணி ஏதாவது?”

“ஐயோ சத்தியமா எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லைங்க’.

அப்புறம் என்ன ரூம் காலி பண்ணிட்டு சாயந்தரம் வந்து சேரு’.

‘அக்கா ‘

‘என்ன ?

‘கொஞ்சம் கடன் இருக்கு’

‘எவ்வளவு வேணும்?’

‘ஆயிர ரூபா இருந்தா போதும். இப்ப சமாளிச்சுக்குவேன்.

அழைப்பு மணியை அமுக்க சரோஜா வந்தார்.

“தங்கராசுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க. சம்பள கணக்குல எழுதிக்கங்க. சரி நீ போய் வாங்கிக்க’.

பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வர, வாட்ச்மேன் துரை.

“எப்படா ஊருக்கு போற?”

“நான் எதுக்குண்ணே போகனும்”

“நீதானேடா போலாம்னு இருக்கேன்னு சொன்னே’

“நான் போகனும்னு நினைச்சா கூட சென்னை விட மாட்டேங்குது. என்ன செய்யறது பாஸ்’.

அவன் குரலிலிருந்த உற்சாகத்தினைக் கண்டு துரை திகைத்தார்.

மாலையில் தன்னுடைய அறையை காலி செய்துவிட்டு கரஸ்பாண்டன்ட் வீட்டிற்கு வந்துவிட்டான். அவுட் ஹவுஸ் என்பது சிறிய அறை. போதுமானதாக இருந்தது. மேன்ஷன் பகுதியிலிருந்த இரைச்சலுக்கு மாறாக அமைதி,

நண்பர்கள் இருவருக்கும் வருத்தம். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விட்டான். ஞாயிற்றுக்கிழமை சந்திப்பதாகக் கூறி கிளம்பினான்.

ஓவியா அக்கா அவனுக்கு என்னென்ன வேலைகள் என்று ஓரளவுக்குக் கூறிவிட்டார்.

காலை ஆறு மணிக்குப் பால் வாங்கி வரவேண்டும். தொடர்ந்து நாய்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். பிறகு செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். காய்கறிகள் மற்றும் வேறு ஏதேனும் பொருட்கள் வாங்கி வந்து தர வேண்டும். 10 மணிக்குப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று விடவேண்டும். 3 மணி வரை அங்கு வேலை. அதற்குப் பிறகு மீண்டும் வீடு,

அடுத்த நாள் காலை பள்ளிக்குப் போவதற்கு முன்னால் தங்கம் அக்காவைப் போய் பார்த்தான்,

‘வாடா தங்கராசு. நேத்தே வருவேன்னு பார்த்தேன்’.

“எங்க வந்து பார்க்கறுதுன்னு தெரியல. கடையைத் தவிர வேற இடம் தெரியாதே’.

‘பண்டரு தோட்டத்தாண்ட வந்து என் பேர சொன்னா கொயந்தைங்க கூட கூட்டியாந்து வுட்ரும்”.

‘இந்தாங்க பேலன்ஸ் பணம். அப்புறம் நான் மோன்ஷன காலி பண்ணிட்டு எங்க கரஸ்பாண்டன்ட் வீட்டுக்கு போய்ட்டேன். இனி அங்கேயே தங்கிக்குவேன். எனக்கு அங்கேயே மூனு வேளை சாப்பாடு’,

தங்கம் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும்கூட கதாரித்துக்கொண்டு, “செரி ஏதோ நல்லது நடந்தா ஓகேதான்’.

“அப்புறம் சாயந்தரம் நாலு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் எனக்கு வேலை எதுவும் கிடையாது’,

‘அதனால்?

அங்கு நின்று கொண்டிருந்த சாப்பாட்டு வண்டியை வாஞ்சையோடு பிடித்தான்.

தங்கம் அகம் மலர்ந்தார்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *