Arthritis – Symptoms and causes/ கீல்வாதம் -Arthritis -என்றால் என்ன?

நிற்க, நடக்க, அமர, எழுத, படிக்க, திரும்ப எனப் பல்வேறு செயல்களுக்கும் மூட்டுகள் மிகவும் அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்முடைய வேலைகள் எல்லாமே முடங்கி விடும். மூட்டுவாதப் பாதிப்பு என்பது பொ.மு.4500 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களுக்குக்கூட இருந்திருக்கிறது.

உலகெங்கும் பல கோடி மக்கள் பல்வேறு மூட்டழற்சி, மூட்டுவாத நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வீக்கம், வலி, வேதனை, அவற்றை நீட்ட, மடக்க இயலாமை ஆகியவையே இந்த நோய்களின் தொந்தரவுகளாக இருக்கும். இந்தத் தொந்தரவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வரும். இவை முடக்கு வாதம், கீல் வாதம், மூட்டு வாதம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வயதாக, வயதாக மூட்டு வாத நோய்கள் அதிகரிக்கும்.

முக்கிய வகைகள்

# கீல்வாதம்
# முடக்கு வாதம்
# பல்வேறு துகள்கள் / பொருட்கள் படிவதால் ஏற்படும் மூட்டழற்சி,
# சோரியாசிஸ் மூட்டு வாதம்.
# தொற்று நோய்க்கிருமிகளால் ஏற்படும் மூட்டழற்சி,
# மூட்டு வாத நோய்களில் மூட்டு மட்டுமல்ல, பல்வேறு தசை, தசைநார், மூட்டுகளின் சவ்வு, இணைப்பு திசு நோய்களும் அடங்கும்.

கீல்வாதம் (Osteoarthritis)

கீல்வாதம் (OA) | Mundewadi Ayurvedic

இது முதியவர்களைப் பெரிதும் பாதிக்கும். மூட்டுகள் அமைந்திருக்கும் இடத்திலுள்ள குருத்தெலும்புகள் சிதைவதால் அங்குள்ள எலும்புப் பகுதிகளில் உராய்வு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய எலும்பு தோன்றும். இதனால் இரண்டு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி குறுகிவிடும். இந்த வகை மூட்டுப்பாதிப்பு பெரும்பாலும் கை, முழங்கால், இடுப்பு, முதுகெலும்பு ஆகியவற்றைப் பாதிக்கும். மூட்டுகளின் உட்பகுதி நலிவடைவதால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டுத் தேய்மான பாதிப்பால் ஏற்படும் மூட்டு வாதம்.

அறுவை சிகிச்சையினாலோ அடிபடுவதாலோகூட இத்தகையப் பாதிப்பு ஏற்படலாம். உடல் பருமனாலும் நீரிழிவு, பிற ஹார்மோன் நோய்களினாலும், பிறவி மூட்டு நோய்களினாலும் இத்தகைய மூட்டுப் பாதிப்பு ஏற்படலாம். எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் மூட்டுப் பாதிப்பை உணர்ந்து கொள்ளலாம்.
சில வலி குறைப்பான் மருந்துகளோடு குளுக்கோசமைன், காண்ட்ராய்டின் போன்ற குருத்தெலும்பு கூறு மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவச் சிகிச்சையினால் நிவாரணம் கிடைக்காதவர்கள், மூட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்துகிறார்கள்.

முடக்கு வாதம் (Rheumatoid arthritis)

உடல் எதிர்ப்பாற்றல் புரதங்களால் மூட்டு பாதிக்கப்படுவதால் இத்தகைய வாதம் ஏற்படுகிறது. இந்த நோய் மூட்டுகளை மட்டும் பாதிப்பதில்லை. நுரையீரல், கண், சருமம், இதயம், ரத்த நாளங்கள், நரம்பு என உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கும். வலது, இடது என இரண்டு கை, மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் ஒரே நேரத்தில் இதனால் பாதிக்கப்படலாம். வலி குறிப்பாக, காலை வேளைகளில் அதிகமாக இருக்கும். மூட்டிலுள்ள சவ்வும் பாதிக்கப்படும்.

சி-ரியாக்டிவ் புரதப் பரிசோதனை, ஆன்டி நியூக்ளியர் ஆன்டிபாடி பரிசோதனை, ஆன்டி-சைக்ளிக் சிட்ரல்லினேட்டட் பெப்டைடு பரிசோதனை, முடக்குக் காரணி ஆகிய பரிசோதனைகள் மூலம் இந்த மூட்டு வாத பாதிப்பைக் கண்டுபிடிக்கலாம். வலி குறைப்பான் மருந்துகளோடு, ஸ்டீராய்டு, நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள், புதிய உயிரியல் மருந்துகள் ஆகிய சிகிச்சைகள் இவர்களுக்கு உதவுகின்றன. வலி அதிகமாக இருக்கும் போது ஓய்வும் மற்ற நேரத்தில் உடற்பயிற்சியும் இவர்களுக்குப் பயன் தரும்.

துகள்கள் படிவதால் ஏற்படும் மூட்டு அழற்சி

யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரித்து அது உடலிலுள்ள மூட்டுகளில் படிய ஆரம்பிக்கும். குறிப்பாக,பெருவிரல் காலுடன் சேருமிடத்தில் இந்த படிவுகள் அதிகமாக இருக்கும். யூரிக் அமில வளர்சிதை மாற்றம் அடையும் போது ஏற்படும் சில நொதிகளின் செயல் மாறுதல்களினால் யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரித்துவிடும். குறிப்பாக, யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக உற்பத்தியானாலோ முறையாக வெளியேற்றப்படாமல் போனாலோ, யூரிக் அமிலம் ரத்தத்தில் அதிகரித்து மூட்டுகளில் படிய ஆரம்பித்து விடும். இந்த நோயாளிகளுக்கு மூட்டுப் பாதிப்புடன், சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். இவர்களுக்கு யூரேட் கற்கள் சிறுநீரகத்திலும் சிறுநீர் வெளிச் செல்லும் குழாய்களிலும் படியும். இதனால், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

இவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்து இருப்பதுடன், மூட்டு நீரை உறிஞ்சிப் பரிசோதனை செய்தால், அதில் மோனோசோடியம் படிவங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். இவர்களுக்குத் தற்காலிகமாக வலி குறைப்பான் மருந்துகளைப் பயன்படுத்தலாம். யூரிக் அமிலத்தை ரத்தத்தில் குறைக்கும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஒயின் போன்ற மது வகைகள், இறைச்சி ஆகியவற்றை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிலருக்குக் கால்சியம் பைரோபாஸ்பேட் படிவங்களும் மூட்டுகளில் படிந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சோரியாசிஸ் மூட்டு வாதம்

சோரியாசிஸ் என்ற தோல் நோய் தோலோடு முடிவதில்லை. அது கை, கால் நகங்களைப் பாதிப்பதுடன் மூட்டுகளையும் பாதிக்கும். எதிர்ப்பாற்றல் புரதங்களின் பாதிப்பினால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து, நோயின் தன்மையை மாற்றும் மருந்துகள், எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகள், புதிய புரதத் தடை மருந்துகள், நொதித் தடுப்பு மருந்துகள், புற ஊதா கதிர் சிகிச்சை, லேசர் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சை முறைகள் தோல் பாதிப்புக்கும், மூட்டுப் பாதிப்புக்கும் செய்யப்படுகின்றன.

நுண்கிருமி மூட்டு அழற்சி பாதிப்பு (infectious arthritis)

பல்வேறு நுண்கிருமிகள் நேரடியாகவோ ரத்த ஓட்டத்தின் மூலமாகவோ மூட்டுகளை அடைந்து அங்கு அழற்சி பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்த மூட்டுப் பாதிப்பு. சில வேளைகளில் மூட்டுகளை அடையாமல் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நைசீரியா கோனோரியே, ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் ஆகிய நுண்கிருமிகள் இந்த வகை அழற்சிக்கு முக்கியமாக அமைகின்றன. பிற பாக்டீரியா வகைகள், வைரஸ் தொற்று போன்றவற்றா லும் இந்தப் பாதிப்பு ஏற்படும். மூட்டு வலி, காய்ச்சல், மூட்டுகளை அசைக்க இயலாமை ஆகிய தொந்தரவுகள் இதனால் ஏற்படும்.

இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, மூட்டு நீர் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் நோயைக் கண்டறியலாம். பல வாரங்கள் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும். இன்று உலக மூட்டழற்சி நாள். ‘தாமதிக்காதீர்கள், இன்றே இணையுங்கள்’ என்பதுதான் இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு முழக்கம். மூட்டுப் பாதிப்புகள் இருந்தால் அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், மூட்டு வலிக்குப் போட்டுவிடலாம் பூட்டு.

மூட்டு பாதிப்புகளுக்கான ஆலோசனைகள்

( நன்றி டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார்)

பாட்டி வைத்தியம்

1) அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.


2) அவுரி இலையை, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி குணமாகும்.


3) உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து தடவினால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாகும்.


4) ஊமத்தை இலை, அரிசி மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதிக்க வைத்து பற்றுப் போட்டால் வீக்கம் குணமாகும்.


5) கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குணமாகும்.


6)  கடுகு 30 கிராம், கோதுமை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம். மூன்றையும் அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பூசினால் வலி குணமாகும்.


7) கடுகு கீரையை அரைத்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி கை, கால்களில் பூசிக் கொண்டால் மூட்டு பிரச்னை தீரும்.


8)  கருவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.


9) குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வலி குணமாகும்.


எலும்பின் வலிமைக்கு அவசியமாக இருப்பது கால்சியம், பாஸ்பரஸ். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் தேவையான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இல்லாதபோது மூட்டுத் தேய்மானப் பிரச்னை தோன்றும்.பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம் வெளியேறுவதால் மூட்டுப் பிரச்னைகள் வரலாம். மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. வயது மூப்பின் காரணமாக 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டுப் பிரச்னை இருக்கும். வயது அதிகம் ஆகும்போது உடலில் ரத்த உற்பத்தி குறைகிறது. இதனால் எலும்புகள் சத்துக் குறைபாட்டின் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறது. சிறு வயதினர் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு 450 மில்லி கிராம் கால்சியம் கிடைக்க வேண்டும். டீன் ஏஜ் பருவத்தில் 550 மில்லிகிராம் கால்சியம் அவசியம்.
சிறு வயதினருக்கு 800 மில்லிகிராம் பாஸ்பரஸ் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு 1200 மில்லிகிராம் பாஸ்பரஸ் அவசியம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சத்துகள் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் 30 வயதுக்கு மேல் மூட்டுத் தேய்மானப் பிரச்னைக்கு ஆளாக நேரிடும். ராகி, இறால், மீன், சோயாபீன்ஸ், அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பால், பாலாடைக் கட்டி, வெல்லம், சிவப்பு பீன்ஸ், பாசிப்பருப்பு, கேரட், பாதாம், முந்திரி ஆகியவற்றில் இருந்து அதிகளவு கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது 

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *