மைக்ரோவேவ்(micro wave)அடுப்பு :இது எப்படி வேலை செய்கின்றது??

இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு ! உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது! விந்தையாக இருக்கிறது அல்லவா! இவ்வாறு நேரடியாக உணவு சூடு படுத்தப்படுவதால் , உணவின் சுவை மாறுவதில்லை. அது போக, நாம் சூடு படுத்த உபயோகித்த பாத்திரத்தில், உணவு பிடித்த தடயம் எதுவும் இருக்காது! அதனால், அந்த பாத்திரத்தை சுத்தம் பண்ணுவது மிக சுலபமாக இருக்கும்.

சரி , எப்படி இது சாத்தியம்??

இந்த மைக்ரோவேவ் நமக்கு எந்த தீங்கும் விளைவிக்காதா??

எல்லா வித பாத்திரங்களையும் உபயோகிக்கலாமா??

இது எப்படி வேலை செய்கின்றது??

இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால் மட்டும் மேலே படியுங்கள்!

இந்த அடுப்பானது , மைக்ரோவேவ் கதிர்வீச்சின் உதவியோடு உணவை சமைக்கின்றது! இந்த கதிர்வீச்சு உணவை துளைத்து அதன் உள் செல்கிறது.. பின் அது போலவே உணவை துளைத்து வெளியேறி, அடுப்பின் சுவர்கள் , தரை எல்லாவற்றிலும் பட்டு , மீண்டும் குதித்து , உணவை துளைத்து , வெளியேறி , பின் மீண்டும் குதித்து… இவ்வாறாக  உணவை சூடு படுத்தவோ , சமைக்கவோ செய்து விடுகிறது!

சரி, இந்த கதிர் வீச்சினால் எந்த பிரச்சனையும் இல்லையா ?

மைக்ரோவேவ் கதிர்வீச்சு எப்படி உண்டாகிறது ??அது எப்படி உணவை சமைக்கின்றது??

என்பதை , விரிவாக பார்க்கலாம்..

மைக்ரோவேவ் அடுப்பின் பாகங்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

micro5

இந்த அடுப்பில், சமையல் அறை ஒன்று உண்டு. அதிலே, ஒரு சுழலும் மேஜை உண்டு. அதன் மேலே தான், சமையல் செய்வதற்கு பாத்திரம் வைக்கப்படும். அடுப்பின் உள்ளே , மாக்னற்றான்(Magnetron ) என்று ஒன்று உண்டு ! இந்த மாக்னற்றான் மூலமாக தான் மைக்ரோவேவ் கதிர்வீச்சு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாக்னற்றானை வேலை செய்ய வைக்க, அதிக மின்னழுத்தம்(Voltage ) தேவை! அத்தகைய மின்னழுத்தத்தை பெறுவதற்காக , அடுப்பின் உள்ளே ஒரு மின்மாற்றி(Step Up Transformer) உண்டு. அதன் பின்னே , உற்பத்தி செய்த மைக்ரோவேவ் கதிர்வீச்சை , சமைப்பதற்காக காத்திருக்கும் உணவு மேலே திருப்பி விடுவதற்காக ஒரு அலை வழிக்காட்டி(Wave Guide ) உண்டு ! அடுத்து , இந்த மாக்னற்றான் எப்படி மைக்ரோவேவ் கதிர்வீச்சை உற்பத்தி செய்கிறது என்று பார்த்து விடலாம்

micro6
micro7

அடுப்பை ஆன் செய்தவுடன் , மின்மாற்றி(Transformer ) மாக்னற்றானுக்கு தேவையான மின்னழுத்தத்தை கொடுக்க , மாக்னற்றான் ஆன் ஆகி விடும்.

micro1
magnetronop

1. மாக்னற்றானின் நட்ட நடுவில்(படத்தில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளது) ஒரு எதிர்மின் முனை ( Cathode)  உண்டு.

2. மற்றும் ஒரு நேர்மின்  முனை (Anode ) உண்டு(படத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் குறிக்கப்பட்டு உள்ளது ). இந்த நேர்மின்முனை அடியில் ஒரு சக்தி வாய்ந்த காந்தம் பொருத்தப்பட்டிருக்கும்.

3.  மாக்னற்றானை ஆன் செய்த உடன் , எதிர்மின் முனையில்(Cathode )  இருந்து மின் அணுக்கள் (Electrons ), நேர்மின்  முனையை நோக்கி பயணிக்கும். சாதாரணமாக இவ்வாறு, எதிர் மின் முனையில் இருந்து நேர் மின் முனையை நோக்கி மின்புலத்தில்(Electric  Field )பயணிக்கும் போது , படத்தில் காட்டியதை போல , நேர் கோடில்(படத்தில் கருப்பு  அம்புக்குறியால் குறிக்கப்பட்டு உள்ளது )  பயணிக்க வேண்டும்! ஆனால் , ஒரு சக்தி வாய்ந்த காந்தம் , நேர்மின் அடியில் போருத்தப்பட்டிருப்பதனால் , இந்த மின் புலத்தோடு , காந்த புலமும் சேர்ந்து விடுகிறது. ஆகையால், இந்த மின் அணுக்கள் ,மின் காந்த புலத்தின் வலிமையால்  படத்தில் காட்டியதைப் போல , நேரான பாதையை எடுக்காமல் , சுற்று வட்ட பாதையை (நீல வண்ண அம்பு குறியால் குறிக்கப்பட்டிருக்கும் ) தேர்ந்தெடுத்து கொள்கிறது!

4.நேர்மின் முனையில், பல துவாரங்கள்(Slots or Cavities) இடப்பட்டிருக்கும். அவற்றை அதிரும் துவாரங்கள் என்று அழைப்பர்!

5.சுற்றுவட்ட பாதை எதிர்மின் முனைக்கும் , நேர்மின் முனைக்கும் இடையே உள்ள இடம். அத்தகைய பாதையில் மின் அணுக்கள் , நேர்மின் முனையில் உள்ள துவாரங்களை கடந்து செல்லும் போது அத்துவாரங்கள் அதிர்வு(Resonate ) அடைய ஆரம்பிக்கும்.

6.அவ்வாறு அத்துவாரங்கள் அதிர்வு(Resonance) அடையும் பொழுது , அவை மைக்ரோவேவ் கதிர்வீச்சை வெளிப்படுத்தி விடுகின்றன! ஏன் , எதற்காக , எப்படி இந்த துவாரங்கள் அதிர்வடைகின்றன என்பதையும் இங்கே , இப்பொழுது பார்த்து விடலாம்..

micro2
fig-5

மின் அணுக்கள் , நேர்மின் முனையில் உள்ள துவாரங்களை கடந்து செல்வதனால் , அத்துவாரங்களின் அடிப்பகுதியில் மின்விசை சேர்வி உண்டாகிறது. அதனால், அந்த இடம் ஒரு மின் தேக்கியை(Capacitor ) போலவும் , துவாரங்களை சுற்றி செல்லும் மின்சாரத்தினால் , அந்த இடம் ,ஒரு மின் தூண்டியை(Inductor )போலவும் செயல்பட ஆரம்பிக்கிறது.
Capacitor – மின்தேக்கி (C )
இது மின்கலம்(Battery) அல்ல ஆனால் மின்கலம் (Battery)மாதிரி.. ஆமாம், மின்தேக்கியிலும்(capacitor) மின்கலம் (Battery) போன்று சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்று தான்!மின்கலம்(Battery) உபயோகம் செய்ய செய்ய காலி ஆகும். மின்தேக்கியோ (Capacitor) உபயோகித்த மறுநொடியே தான் சேமித்து வைத்த அத்தனை மின்விசை சேர்வியையும்(Charge ) காலி செய்து விடும் இயல்புடையது !

Inductor – மின்தூண்டி (L )
இது பார்ப்பதற்கு ஒரு சுருள் கம்பி போன்று இருக்கும். இதன் வழியாக , மின்னோட்டம் (Current ) செல்லும் போது , சக்தியானது, தற்காலிகமாக , அந்த சுருள் கம்பியை சுற்றி ஏற்படும் காந்த புலத்தில் சேமித்து வைக்க படும்! இந்த சுருள் கம்பியின் வழியே செல்லும் மின்னோட்டத்தில் மாறுதல் உண்டாகும் போது , அதை எதிர்க்கும்(Resist ) தன்மையை உடையது இந்த மின்தூண்டி!

சரி , இனி , இந்த மின் தேக்கியும் , மின் தூண்டியும் எவ்வாறு , மைக்ரோவேவை வெளிப்படுத்துகிறது  என்று அடுத்து பார்க்கலாம்.

Tuned_circuit_animation_3 (1)

மேலே,  படத்தில் ஒரு மின்தூண்டியும் , மின்தேக்கியும் , எதிர் எதிரே இணைக்கப்பட்டுள்ளன.  முழுதும் , சார்ஜ்  ஆகி இருக்கும் மின் தேக்கியை , மின்தூண்டியுடன் இணைக்கும் பொழுது , மின்தேக்கியில்  இருந்து புறப்படும் மின்னோட்டம் , மின்தூண்டி வழியாக செல்லும் போது , அதன் மேலே ஒரு காந்த புலத்தை தூண்டி விடும். அவ்வாறு நடக்கும் போது , படிப்படியாக தன் சார்ஜை மின்தேக்கியானது இழக்க ஆரம்பிக்கும் . அவ்வாறு சார்ஜை இழக்கும் போது , கூடவே மின்தேக்கியில் காணப்பட்ட மின் அழுத்தமும் குறைந்து போகும். ஆனால் , மின்னோட்டம், மின் தூண்டி வழியாக  தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் .அவ்வாறு தொடரும்  மின்னோட்டம் , மின்தேக்கியை திரும்பவும் சார்ஜ் ஆக்கி விடும் , ஆனால்  தலை கீழாக (Reverse Polarity ). அவ்வாறு , தலை கீழாக , சார்ஜ் ஆனதால் , மின்தேக்கியில் , திரும்பவும் மின் அழுத்தம் உண்டாகும். அந்த தலைகீழாக உருவான மின் அழுத்தம் , மின் தூண்டி வழியாக செல்லும் மின்னோட்டத்தை எதிர்க்கும். அதனால் , மின் தூண்டியில் உள்ள மின்னோட்டம் படிப் படியாக குறைந்து போகும்! இப்படி மின்தூண்டியில் உள்ள மின்னோட்டம் படிப்படியாக குறைவதும் , மின் தேக்கியின் மின் அழுத்தம் படிப்படியாக உயர்வதும் , மின் தூண்டியில் இருந்து மொத்த சக்தியும் மின் தேக்கிக்கு வந்ததை குறிக்கிறது!

மின்தூண்டியின் மொத்த , காந்த புலமும் விரயம் ஆனவுடன் , மின்னோட்டம் நின்று விடும்.. சார்ஜ் மொத்தமும் திரும்பவும் மின் தேக்கியில் சேமிக்கப்படும். ஆனால் , முதலில் இருந்தது போல் அல்லாமல் , தலை கீழாக சேமிக்கப்படும் .இது தாங்க ஊசலாட்டத்தின்(Oscillation) அரை சுழற்சி(Half Cycle )! இனி அடுத்த அரை சுழற்சிக்கு ,திரும்பி , முதலில் இருந்து ஆரம்பிக்கும் , ஆனால்  தலைகீழாக .. அதாவது , மின் தேக்கியில் இருந்து , மின்தூண்டி வழியாக செல்லும் மின்னோட்டத்தின் திசை மாறி இருக்கும்!  இவ்வாறு சக்தியானது , மின் தேக்கிக்கும் , மின் துண்டிக்கும் நடுவில் ஊசலாடுகிறது(Oscillate)! இந்த ஊசலாட்டம் , ரொம்ப வேகமாக இருக்கும்!  கொஞ்ச நஞ்ச வேகம் அல்ல , ஒரு செக்கனுக்கு(Second ) , 2.5 பில்லியன் தடவைகள் உண்டாகும்! இந்த ஊசலாட்டத்தினால் , துவாரங்கள் அதிர்வு அடைய ஆரம்பிக்கும்.

ஆக, அத்துவாரங்கள் அதிர்வு(Resonance) அடையும் பொழுது , அவை மைக்ரோவேவ் கதிர்வீச்சை வெளிப்படுத்தி விடுகின்றன!

7. வெளிப்படுத்தப்படும் மைக்ரோவேவ் கதிர்வீச்சை தொகுத்து , அடுப்பின் சமையலறையின் உள்ளே கொடுப்பது , அலை வழிக்காட்டியின்(Waveguide ) வேலை!

அப்பாடா.. ஒரு வழியாக , மைக்ரோவேவ் கதிர்வீச்சை , அடுப்பின் சமையலறையின் உள்ளே அனுப்பியாச்சு! இனி , எப்படி உணவு சமைக்கப்படுகிறது , இல்லை சூடு படுத்தப்படுகிறது என்று பார்த்து விடலாம்!

electromagneticjavafigure1

மைக்ரோவேவ் அடுப்பின் கதவின் உள்ளே ஒரு , உலோக கண்ணி (metal  mesh ) இருக்கும். அது , மைக்ரோவேவை , கதவின் வழியாக , வெளியே கசிந்து விடாமல் பாதுகாக்கும். அடுப்பின் உள்ளே இருக்கும் சுழலும் மேஜை , உணவை  சீராக சமைக்க உதவும்.

மைக்ரோவேவ் அடுப்பு , நிமிடங்களில் உணவை சூடு படுத்தும் மர்மம் என்னவென்றால் , உணவில் உள்ள , தண்ணீர் தான் அதற்கு உதவுகிறது! தண்ணீர் எளிதாக , மைக்ரோவேவை உறிந்து கொள்ளும் இயல்புடையது . ஆதலால் , தண்ணீர் உள்ள உணவு பொருட்களை மைக்ரோவேவ் எளிதாக ஊடுருவி சமைத்து விடுகிறது ! தண்ணீர் ஒரு இருமுனை மூலக்கூறு! தண்ணீரின் மூலக்கூறை ஒரு மிக்கி மவுசின் முகத்தை போல கற்பனை செய்து கொள்ளுங்கள்! எதிர்மின்முனை கொண்ட ஆக்சிஜன் அணுவை , மிக்கியின் முகமாகவும் , நேர்மின்முனை கொண்ட ஹைட்ரஜன் அணுக்களை , மிக்கியின் இரு காதுகளை போலவும் , கற்பனை செய்து கொள்ளுங்கள்!

micro10
micro9

மைக்ரோவேவ் என்பது என்ன , ஒரு ஊசலாட்ட மின்காந்த அலை! அதனுடைய ஊசலாட்டத்தின் வேகம் செக்கனுக்கு(செகண்ட்), 2.5 பில்லியன் தடவை! இந்த மைக்ரோவேவ் , தண்ணீரின் மூலக்கூறில் உள்ள நேர்மின்முனை , மைக்ரோவேவின் மின்புலத்துக்கு தக்கவாறு தன்னை ஒரே சீராக வரிசைப்படுத்தி கொள்கிறது . அதே போல் , எதிர்மின்முனை , அதற்கு நேரெதிராக தன்னை வரிசைப்படுத்தி கொள்கிறது! மைக்ரோவேவின் , அதிவேகமான ஊசலாட்டத்தை தாங்க முடியாது , தண்ணீரின் மூலக்கூறுகள் , முன்னும் பின்னும் ஊசலாட , அவை ஒன்றோடு ஒன்று , உரசி கொள்கின்றன! அவ்வாறு , உரசும் போது , உராய்வினால் வெப்பம் உண்டாகி விடுகிறது! அவ்வாறு உருவாகும் வெப்பம் , உணவை எளிதாக சூடு படுத்தி விடுகிறது!

micro9
micro11

மைக்ரோவேவ் அடுப்பில் , தண்ணீர் தன்னுள் கொண்ட உணவுகள் எளிதில் சூடு படுத்த படுகின்றன!  நுண்ணலை பாதுகாப்பான(Microwave  Safe ) பாத்திரங்கள் மட்டுமே அடுப்பினுள்ளே  உபயோகம் செய்வது நலம் பயக்கும்.

உலோக பாத்திரங்களை , மைக்ரோவேவ் அடுப்பில் கண்டிப்பாக உபயோகிக்கவே கூடாது! மீறி உபயோகம் செய்தால் , படத்தில் காட்டுவது போல் தீ பிடித்து விடும் அபாயம் உண்டு!

white-microwave-on-fire
19gzxsebrdslcjpg

மைக்ரோவேவ் அடுப்பில் பிளாஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கும் போது , அதன் மேலே , நுண்ணலை பாதுகாப்பானது என்ற முத்திரை இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்!

symbolfortableware-300x86

இந்த முத்திரை இல்லாத பிளாஸ்டிக் பாத்திரங்களை உபயோகித்தால் , உணவோடு  , நச்சு இரசாயனங்களை அப்பாத்திரங்கள் கசிய விட்டு விடும்!

மைக்ரோவேவ் கதிர்வீச்சு , அடுப்பை திறந்த மறுநொடி நின்று விடும்! இதனால் இதை உபயோகிக்கும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. மேலும் அடிக்கடி , அடுப்பின் கதவை சரி பார்த்து கொள்வது , மைக்ரோவேவ் கசிவு ஏற்படுவதை தவிர்க்கும்! இத்தகைய அருமையான தொழில்நுட்பத்தை நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்தும் பொழுது , யாருக்கும் எந்த பாதகமும் இல்லை!

படங்கள் உதவி :கூகிள்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *