மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 14 ]

பாடகர் விஸ்வநாதன்: புதுமையான ஆண்குரல்  ஹம்மிங்.

திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்த சிலர் பட இயக்குநர்களானதும் வசனம் எழுத வந்தவர்கள் பாடலாசியர்களானதும் ,நடிகராக வேண்டும் என வந்தவர்கள் இயக்குநர்களானதும் ,நல்ல பாடகர்களாக இருந்தவர்கள் திறமைமிக்க இசையமைப்பாளர்களானதும் தமிழ் திரையின் வரலாற்றுள் அடங்குவனவே.

அதே போலவே நல்ல இசையமைப்பாளர்களாக இருந்த சிலர் நல்ல பாடல்களை பாடியதையும் , பாடகர்கள் என்று பெயர் எடுக்காவிட்டாலும்,அருமையான பாடல்களைப் பாடிச் சென்றிருப்பதையும் காண்கிறோம். தமது பாடும் திறத்தால் ,சொல்லிக்கொடுக்கும் ஆற்றலால் பாடகர்களை புடம் போடும் இசையமைப்பாளர்கள் ,பாடகர்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் சொல்லிக் கொடுத்து பாட வைக்கின்றனர்.

இசையமைப்பாளர்களில் மூன்று  வகை உண்டு.

01 வாத்தியங்களில் வாசித்துக் காட்டும்  இசையமைப்பாளர்கள்.. 

02  உதவியாளர்களை வைத்து சொல்லிக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள்.

03  தாங்களே பாடிக்காட்டும் இசையமைப்பாளர்கள்.

வாத்தியக்கருவியில் வாசித்துக் காட்டும் இசையமைப்பாளர்களை விட,பாடும் ஆற்றல்மிக்க இசையமைப்பாளர்களிடம் பாடுவதே இலகுவானது என்பது பெரும்பாலான பாடகர்களின் கருத்தாகும்.பாடும் ஆற்றமிக்கவர்களால் தான் தாம் என்ன நினைக்கின்றோம் என்பதை துல்லியமாக சொல்லிக் கொடுக்க முடியும். 

இசையமைப்பாளர்களிடம்  பாடலுக்கு  அமரும் தயாரிப்பாளர்கள் ,இயக்குநர்கள் இசையமைப்பாளர்களின் பாடும் ஆற்றலில் மயங்கி இதை நீங்களே பாடி விடுங்கள் என்று சொல்லி அவர்களை பாட வைத்த சம்பவங்களும் உண்டு.அவர்களின் திருப்திக்காக சில பாடல்களை அவர்களே  பாடியுமுள்ளனர்.

நடிகராக வேண்டும் என்ற விருப்புடன் சினிமாவுக்கு வந்த விஸ்வநாதன் இசையமைப்பாளராக நுழைந்து , ஒரு பாடகராகவும்  ஒன்றாய் வார்ப்பாகி பரிணமித்தார்.அது கூட அவரது முன்னோர்களை பின்பற்றிய செயலாகவே அமைந்தது. 

பாடுவதும் ,இசையமைப்பதும் ,ஓவியம் வரைவதும் ,சிற்பம் செய்வதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கலைகளாகும்.இதில் ஈடுபடும் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் ஈடுபாடு இருப்பது இயல்பானதாகும். அந்த வகையில் இசையமைப்பாளர்கள் பாடுவது என்பதும் இயல்பான ஒன்றேயாகும்.


தாம் அமைக்கும் மெட்டுக்களை குழைத்து ,குழைத்து ,புதுப்புது சங்கதிகளை போட்டு மெருகேற்றி பாடகர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்  இசையமைப்பாளர்களின் இசையில்  மெய்மறந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அப்படிப்  பாடிக்காட்டும் இசையமைப்பாளர்களையே பாடவும் வைத்தனர்.

நான் கேட்ட வரையில் , ஜி.ராமநாதனின் பாடும் முறையில் இதை அனுபவித்திருக்கிறேன்.

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் சொல்லிக் கொடுக்கும் சங்கதிகளை உள்வாங்கி அவரளவுக்கு பாடமுடியால் ,சுசீலா அழுது கொண்டே ஸ்டுடியோவை விட்டு வெளியே போன பாடல் தான் ” ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை” [படம் : பணத்தோட்டம்].

இதை மெல்லிசை மன்னரே ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.அதுமட்டுமல்ல அவரிடம் உதவியாளராக இருந்த ஜி.எஸ்.மணி என்பவர்  “மெட்டு போடும் போதே கணம் தோறும் விதம்,விதமான சங்கதிகளைப் போட்டு நம்மை திகைக்க வைப்பார்: நமக்கு எதைத் தெரிவது திகைப்பு வரும். “ என்று பல நிகழ்சசிகளில் பதிவு செய்திருக்கின்றார்.

அந்தவகையில் பாடும் ஆற்றல்மிக்க முன்னோடி இசையமைப்பாளர்களில் எஸ்.ராஜேஸ்வரராவ்,ஜி.ராமநாதன்,

சி.ஆர்.சுப்பராமன், எஸ்.வி.வெங்கடராமன், எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி, கே.வி.மகாதேவன் போன்றோர் முக்கியமானவர்கள். 

தமிழ் திரை இசையமைப்பாளர்கள் வியந்து பார்த்த ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்கள் சிலரும் அருமையான பாடகர்களான விளங்கினார்கள். சி.ராமச்சந்திரா , ஹேமந்த்  குமார், எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் மதன் மோகன் திரையில்  பாடா விட்டாலும் பாடும் ஆற்றல் கொண்டவராகவே விளக்கியதும் ,பாடகரான கிஷோர்குமார் சில படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்ததும் நாம் அறிந்ததே!

பாடலின் ஜீவனாக இருக்க வேண்டிய உணர்வு நிலையை நன்கு பிரதிபலிக்கக்கூடிய, வகையில் தங்களின் பாடும் ஆற்றலால் அதற்கு நியாயம் செய்யும் வகையில் அற்புதமாகவே பாடியுமுள்ளனர். பின்னாளில் இனிய குரல்வளமிக்க பாடகர்கள் தோன்றியதும் ,தாம் பாடுவதைக் குறைத்து தொழில்முறைப் பாடகர்களையே  முதன்மையும் படுத்தினர்.

பாடும் ஆற்றல்மிக்க ஏ.எம்.ராஜா .கண்டசாலா போன்றவர்கள் இசையமைப்பாளர்களுக்கு நிகராக இசையமைக்கவும்    முடியும் என்று நிருபித்த  பெரும்  ஆற்றலாளர்காளாக விளங்கினார்.

இசையமைப்பில் மட்டுமல்ல பாடும் ஆற்றலுமிக்கவர் என்ற வரிசையிலும்  இடம் பெறுபவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

மெல்லிசைமன்னரைப் பொறுத்தவரையில் எடுத்த எடுப்பில் பாடாமல் ஹம்மிங்கில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். அதில் எத்தனை,எத்தனை அற்புதங்களை செய்து காட்டினார் என்பதை நாம் இன்றும் கேட்டு வியக்கின்றோம். பாடல் மெட்டுக்கு பாடலாசிரியர்கள் உயிர் கொடுத்தனர் என்றால்பாடகர்களோ சொற்களுக்குஉயிர்கொடுத்தனர்.  

ஆனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோ மெடுக்களின் ஜீவனுக்கு தனது ஹம்மிங்கால் ஜீவன் கொடுத்தார். ஹம்மிங்கில் புதிய மாஜிக் உருவாக்கிக் காட்டினார்கள் மெல்லிசைமன்னர்கள்!

Hamming  என்ற ஆங்கில சொல் தமிழில் பாடுவதற்கு முன்பாக,  ” ம் ..ம் .. ம்.. ” என்று குரலைத் தயார்படுத்திக் கொள்ள அல்லது பாடுவதற்கு தயாரிப்பு செய்வது என்ற ஓர் நிலையையும், சொற்கள் இல்லாமல் குறித்த ஒரு மெட்டுக்கான ராகத்தின் அல்லது அதற்கிசைந்த இசை அசைவுகளை ,அதன் சுவைகளுக்கேற்ப இழுத்துப்பாடும் ஓர் முறையாகவும், இன்னுமொரு வகையில் சொன்னால் ஒரு குறுகிய ஆனால் பலவிதங்களில் வரும் சிறிய ஆலாபனையாகவும் அமையும் ஒன்றாகும். 

செவ்வியலிசையில்  ஒரு குறிப்பிட்ட  ராகத்தினை சொற்களில்லாமல் அசைத்து ,அசைத்து நீண்ட நேரம் ஆலாபனை செய்வது வழமையாகும்.சினிமாப்பாடல்கள் மிகக்குறுகிய கால எல்லை கொண்டவையாக இருப்பதால் அதன் எல்லைக்குள் நின்று எளிமையாகவும் ,குறுகிய நேரத்திலும் இந்த ஹம்மிங் அல்லது “குட்டி ஆலாபனையை” நிகழ்த்த வேண்டிய நிர்பந்தம் இசையமைப்பாளர்களுக்கு உண்டாகிறது.

தமிழ் செவ்வியல் இசையில் மட்டுமல்ல நாட்டார் இசையிலும் அதிகமாகப் பயன்படும் முறையும் இதுவாகும். நாட்டார் இசையில் ” தென்னானே … தென்னானே ” அல்லது ” தன்னானே.. தன்னானே ” என்று தொடங்கும் முறை பழைய நாட்டுப்புற மரபாகும். செவ்வியலிசையில்  ” ம்…ம்… ம்..ம்.. ” என்று சுருதி மீட்டுவதையும் ஹம்மிங் என்று சொல்லலாம். இது நமது  இசைக்கு மட்டுமல்ல உலகெங்கும் உள்ள இசைக்கும் இது பொது முறையுமாகும்.

மேலைத்தேய இசையில் இந்த ஹம்மிங் பற்றிய வகைப்பாடுகள் உள்ளன. அவை Legato – Staccato – Vibrato என மூன்று விதமாக அழைக்கப்படுகிறது. 

Legato – என்பது ஒரு சுரத்தை கொஞ்சம் நீட்டி பாடுவது அல்லது இழுத்துப் பாடுவது. ” ஆ ………… ஆ ………… ஆ ………… ” என அசைத்துக் கொள்வது. 

Staccato – என்றால் மேல் சொன்னதையே கொஞ்சம் குறுக்கி பாடுவது. ” ஆ ….ஆ ….ஆ …. ”  என குறுக்கி இசைப்பது.

Vibrato – என்பது அதிர்வு எனப்படும். அசைவுகளில்லாமல் நீண்ட  அல்லது குறிப்பிட்ட அளவு தூரம் சுரத்தை இசைப்பது. பாடுபவரின் குரல் தன்மைக்கு ஏற்ப இது மாறுபடும்.

” ஆ …………………… ஆ ………… ”  என நேராக , அசைவுகளைத் தவிர்த்து தொடர்ச்சியாக ,விடாமல் இசைத்துச் செல்வது ஒன்று!  

இதையே ஒரு சுரத்தை நீண்ட நேரம்  ” ஆ ………… ” என்றே இசைத்துக் கொண்டு அதில் வித்தியாசமான ,பல்வகை அசைவுகளை இசைத்து ,அதிர்வுகளை ஏற்படுத்திக் காட்டும் முறையும் இருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் ” நெஞ்சம் மறப்பதில்லை  அது நினைவு இழப்பதில்லை ” என்ற  பாடலுக்கு முன்பாக வரும் ஹம்மிங்கை குறிப்பிடலாம்.

இந்த நுட்பங்களை எல்லாம் மெல்லிசைமன்னர்கள் மிக அற்புதமாகத் தங்கள் பாடலில் வைத்து பிரமிக்க வைத்தார்கள். மேலே குறிப்பிட்ட ஹம்மிங் இசை  நுட்பங்கள் எல்லாம் லத்தீன் அமெரிக்க   இசையில் 1950 ,1960 களில் ஒரு எழுச்சியாக எழுந்த போஸா நோவா  [ Bossa Nova ] என்ற புதிய இசையலை  வடிவமாகும்.போஸனோவா என்றால் New Trend என்ற அர்த்தமாகும்.இதை samba, ஜாஸ் இசைகளில் கேட்கலாம்.   

பாடல்களில் ஹம்மிங்கை மிக இயல்பாக வைத்து ,அதில் பல்வகை நுட்பங்களை மெல்லிசைமன்னர்கள் காட்டினார்கள். குறிப்பாக  பெண் பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரியை தனியே தெரியும்படி மிக அருமையாகப் பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் , பாடல்களின் போக்கிலேயே மிக இயல்பாகவும் ,அழகுணர்ச்சி மிக்கதாகவும் ,அது துருத்திக் கொண்டு வெளியே தெரியாத வண்ணமும்  ஹம்மிங்கை  பயன்படுத்தி   புதுமை செய்தார்கள்.

பெரும்பாலான ஹம்மிங்கை அவர்களின் ஆதர்ச இசையாக இருந்த லத்தீன் அமெரிக்க இசைக்கூறுகளிலிருந்து எடுத்தாண்டார்கள் என்பதை அவர்களது  பாடல்களில்  தெளிவாகக் காணலாம். எப்படி பொங்கஸ் தாள வாத்தியத்தை எழுச்சிக்காகக் கையாண்டார்களோ ,அதே போலவே ஹம்மிங்கையும் மிகமிக அருமையாகப் பயன்படுத்தி ஒரு சகாப்தத்தைப் படைத்தார்கள்.

பெண்பாடகிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி எவ்விதம் தனித்துவமான ஹம்மிங் நிகழ்த்திக்காட்டினாரோ ,அதே போல ஆண் குரல்களில் தனிச்சிறப்புமிக்க ஹம்மிங்கை துவக்கி வைத்தவர் இசையமைப்பாளரும் ,பாடகருமான விஸ்வநாதன் என்பது ஆச்சர்யம் தரும் உண்மையாகும். இதன் மூலம் தனக்குப்பின் வரக்கூடியவர்களுக்கு பலமான வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்று செல்லலாம்.

ஒரு இசையமைப்பாளர்களாக மெல்லிசைமன்னர்கள் உருவாக்கிய பாடல்களில் ஹம்மிங் எப்படி பின்னிப்பிணைந்து,நெருக்கமாக உறவு கொண்டிருப்பதை சில பாடல்கள் மூலம்  உதாரணம் காட்டலாம். இவற்றை நுனித்து நுட்பமாய்ப்  பார்த்தாலன்றி மெட்டுக்கள் தரும் மயக்கத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாமல் போகும்.

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பாடல்களில் மிக இயல்பாக ஹம்மிங் வருகின்ற பாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.

Legato – சற்று நீண்ட ஹம்மிங் :

01  பருவம் போன பாதையிலே      – தெய்வத் தாய்   1960 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இந்தப்பாடலில் ,பாடலின் நடுவில் எழுச்சியாக வைத்து உச்சம் தொடுகின்றார்கள்.அது அற்புதமாக இருக்கும்.பாடலில் ” இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல் என்னைக் கொடுத்துவிட்டேன்”  என்ற வரிகளைத்  தொடர்ந்து ..ஆகா ,, ஆகாகா என்று நெருடாத ஹம்மிங்கை கேட்கலாம்.

02  மீனே  மீனே  மீனம்மா  – என்கடமை    1964 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இந்தப்பாடலின் பல்லவி முடிந்து,” என்  பாட்டுக்கு ஒருவன் இசையானான் “என்ற  அனுபல்லவிக்கு முன்பாக வருகின்ற ஹம்மிங்.

03  தேனொடும் தண்ணீரின் மீது       – என்கடமை 1964 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இந்தப்பாடலில் இரண்டாவது நிமிடத்தில் ஆகா ,,,,ஆகா கா  என்ற ஹம்மிங்கைக் கேட்கலாம். 

04  பக்கத்து வீட்டு பருவ மச்சான்  – karbagam  1964 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
ம்….ம்….ம்  என்ற அருமையான ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் நான்காவது நிமிடத்தில் ஆகாகா…..ஓகோகோ ……. என்ற எழுச்சி ஹம்மிங்கைக் கேட்கலாம். 

05  அழகுக்கும்  மலருக்கும்    – நெஞ்சம் மறப்பதில்லை   1962 – பாடியவர் : ஸ்ரீனிவாஸ் + ஜானகி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இந்தப்பாடலில் பல்லவி ,அனுபல்லவி முடிவிலும் ஹம்மிங்கைகேட்கலாம்.

06  வாழ நினைத்தால் வாழலாம் – பலே பாண்டியா 1962 – பாடியவர் : டி. எம்.எஸ் + பி.சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இந்தப்பாடலின்  ஆரம்பத்திலேயே  ஹம்மிங்கை கேட்கலாம்.

Staccato – குறுகிய ஹம்மிங் :

01  பார்த்த  ஞாபகம்  இல்லையோ    – புதியபறவை   1963 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
02  என்ன  என்ன  வார்த்தைகளோ    -வெண்ணிற ஆடை   1964 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
03  இளமைக்கு கொலுவிருக்கும்   – ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்  1963 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
04  வா என்றது உருவம்  – காத்திருந்த கண்கள்   1962 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
05  கண்ணான கண்ணனுக்கு   – ஆலயமணி   1962 – பாடியவர் : சீர்காழி+பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
06  ஆயிரம் இரவுகள் வருவதுண்டு   – கற்பகம்   1964 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

Vibrato – அதிர்வு தரும் ஹம்மிங் :

ஆ…. …..ஆ ………… ஆ ….. என நீட்டி இசைக்கும் ஹம்சிங்கின் இடையை புதிய ,புதிய அசைவுகளைக் கொடுத்து பாடும் ஹம்மிங் !


01  நெஞ்சம்மறப்பதில்லை    -நெஞ்சம்மறப்பதில்லை 1963 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
தமிழ் சினிமாப்பாடல்களில் அமைக்கப்பட்ட அதிஉன்னதமான ஹம்மிங்கில்   ஒன்றாக  இந்தப்பாடல் திகழ்கிறது. பாடலின் ஜீவன் முழுவதும் அந்தக் ஹம்மிங்கிலேயே அமைந்திருக்கிறது என்று சொல்லிவிடலாம்.

02  பார்த்த ஞாபகம்இல்லையோ     -புதிய பறவை    1964 – பாடியவர் : பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

மெல்லிசைமன்னர் ஒரு பாடகராக  பாடிய சில பாடல்கள் .

மெட்டமைப்புகளில் மட்டற்ற ஆர்வம் மட்டும்மல்ல ஹம்மிங்கிலும் புரட்சி என்று சொல்லுமளவுக்கு மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் புத்தெழுச்சி தரும் ஹம்மிங்   அமைத்து பாடி வியக்கவைத்தார்.

01  தாழையாம்  பூ முடித்து     – பாகப்பிரிவினை   1960 – பாடியவர் : டி.எம்.எஸ் + லீலா  + எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
அபாரமான ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் இடையிடையேயும் அற்புதமான ஹம்மிங் நாட்டுப்பாங்காக அமைக்கப்பட்டுள்ளது. 

02  என்னை எடுத்து   – படகோட்டி  1964 – பாடியவர் :சுசீலா + எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 
முற்றுமுழுதாக ஹம்மிங்கின் ஆளுகைக்குட்பட்ட பாடல் இது. பாடிய சுசீலாவை சொல்வதா ஹம்மிங்கை பாடிய விஸ்வநாதனை சொல்வதா , புல்லாங்குழல் வாசித்த நஞ்சப்பாவைவைச் சொல்வதா ?

03  போனால் போகட்டும் போடா   – பாலும் பழமும் 1961 – பாடியவர் :டி.எம்.எஸ்  + எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

விஸ்வநாதனின் ஹம்மிங் திறமையை இந்தப்பாடல் துல்லியமாகக் காட்டும்.  

மெல்லிசைமன்னர்  பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு ஹம்மிங்கில் தன்னை மறைத்துக்கொண்டது போல  ம் ..ம்….ம்….ம். என்று அருமையாக, புதுதினுசாகப் பாடி அசத்திய பாடல்கள்.

01  பாலிருக்கும் பழமிருக்கும்  – பாவமன்னிப்பு 1961 – பாடியவர் :சுசீலா + எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   
02  வந்த நாள் முதல்    – பாவமன்னிப்பு 1961  – பாடியவர் :டி.எம்.எஸ் + எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  

03  அத்தை மகனே போய் வரவா   – பாதகாணிக்கை   1962 – பாடியவர் :சுசீலா-எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

04  நான் நன்றி சொல்வேன்  – குழந்தையும் தெய்வமும் 1965  – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன்

05  கொடுக்க கொடுக்க   – நான் ஆணையிட்டால் 1967 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன்

ஹம்மிங் மட்டுமல்ல பாடுவதிலும் தனது திறமையை காட்டிய எம்.எஸ்.விஸ்வநாதன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள் பலவுண்டு.    சில எடுத்துக்காட்டுகள்.

01  அன்பு மலர் ஆசைமலர்    – பாசமலர்  1961 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  நேரான நெடுஞ் சாலை   – காவியத்தலைவி  1970 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

03  அன்னை பூமி என்று   – சவாலே சமாளி  1971 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன்

04  தாய் பிறந்தாள்  – தாய்  1971 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன்

05  கார் மேகம் மனசு வச்சால்   – சொந்தம் 1973 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

06  யாருக்கும் வாழ்க்கை உண்டு   – தாய் வீட்டு  1971 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

07  இத்தனை மாந்தருக்கு    – உண்மையே உன் விலை என்ன  1976 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

08  எனக்கொரு காதலி   – முத்தான முத்தல்லவோ  1970 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + எஸ்.பி.பி – இசை : விஸ்வநாதன் 

09  திருப்பதி மலையில் ஏறுகிறாய்   – வாழ்வு என் பக்கம்   1976 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

09  உப்பை தின்னவன்    – ஒரு கோடியில் இரு மலர்கள்  1976 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன்

10  வசந்த கால நதிகளில் [ மண வினைகள் ]   – மூன்று முடிச்சு  1976 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

11  ஆயிரம் பொண்ணை பூமியில்   – அவன் ஒரு சரித்திரம்  1970 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

12  அல்லா அல்லா நீ இல்லாத   – முகம்மது பின் துக்ளக் 1972 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

13  எதற்கும் ஒரு காலம் உண்டு  – சிவகாமியின் செல்வன் 1974 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  – இசை : விஸ்வநாதன்

14  பயணம் பயணம் பயணம் – பயணம்   –  1976 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  – இசை : விஸ்வநாதன்

15  எனக்கொரு காதலி  – நிலவே நீ சாட்சி  1961 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் + எஸ்.பி.பி.  – இசை : விஸ்வநாதன் 

16 கண்டதைச் சொல்லுகிறேன் – சில நேரங்களில் சில மனிதர்கள்1976 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன்  – இசை : விஸ்வநாதன்.

17  பெண் என்றால் பெண்   – பெண் என்றால் பெண்  1967 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன் 

17  சம்போ சிவா சம்போ – நினைத்தாலே இனிக்கும்  1978 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : விஸ்வநாதன்.

சிறந்த குரல்வளம் இல்லையென்றாலும் உணர்ச்சி பாவத்துடன் அற்புதமாக பாடுவதில் தனித்தும் காட்டியதால் பிற இசையமைப்பாளர்களும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனைத் தமது படங்களில் பாட வைத்து தமக்குப் பெருமை சேர்த்துக்கொண்டனர்.

01  உனக்கென்ன குறைச்சல்    – வெள்ளிவிழா   1972 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : வி.குமார் . 

02  ஆண்டவனே உன்னை வந்து     – உருவங்கள் மாறலாம்  1983 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : இளையராஜா 

03  நல்ல காலம் பிறக்குது     – கருவேலம் பூக்கள்  1997 – பாடியவர் : எம்.எஸ்.விஸ்வநாதன் – இசை : இளையராஜா

[தொடரும் ] 

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *