மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-  மு. நித்தியானந்தன்-பாகம் 3

மு. நித்தியானந்தன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்திற்கான ஆய்வுகளுடன் கூடிய முன்னுரையை தொடராக பதிவிடுவதில் பெருமை கொள்கிறோம்.

பாகம் 3

1941 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி.

 ஸ்டெலென்பேர்க் தோட்டத்துரை போப் ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில்  அமைந்திருந்த பக்கத்துத் தோட்டமான லெவலோன் தோட்டத்துத் துரை பிளெக்மோர் அழைப்பின்பேரில் இரவு விருந்துண்ண இரவு ஏழுமணிக்குத் தனது காரில் புறப்பட்டுச் செல்கிறார். விருந்துமுடிந்து போப் துரை  ஸ்டெலென்பேர்க் தோட்டத்து ஸ்டோருக்கு தனது காரில் திரும்பிவரும்போது இரவு  11.30 என்கிறார் ஸ்டோர் காவல்காரர் காசிம். துரை ஸ்டோருக்கு வந்ததும்,  துரை பங்களாவின் கராஜ் கதவைத் திறந்துவைக்குமாறு பங்களா அப்பு செபஸ்டியானுக்கு போன்மூலம் தகவல் அனுப்புகிறார் காசிம். இது மாமூலான விஷயம்தான். பங்களா கராஜ் கதவைத் திறந்துவைத்துவிட்டுக்  காத்திருக்கிறார் அப்பு செபஸ்தியான்.

 ஸ்டோரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்தது துரை பங்களா. வளைந்து, ஏற்றமாய்ச் செல்லும் பாதை. இடையில் மூன்று பெரிய முடக்குகள். ஸ்டோரிலிருந்து 300 யார் தொலைவில் பாதையை ஊடறுத்து, சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும்  சிற்றோடை. அன்று முழுநிலவு. வளைந்துவளைந்து செல்லும் காரின் முன்விளக்கு அந்த மலைப்பிரதேசத்தை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது.

மூன்றாவது முடக்கில் போப் துரைக்காக மரணதேவன் காத்திருக்கிறான் என்று அவரால் கற்பனையும் செய்திருக்கமுடியாது.

பாதைக்குக் குறுக்கே இரண்டு முருங்கை மரக்குற்றிகள் போடப்பட்டிருந்தன. காரை நிறுத்திவிட்டு, மரக்குற்றிகளை அப்புறப்படுத்தக் காரிலிருந்து இறங்கினார் போப். இறங்கிய இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. மறைந்திருந்த நான்கு, ஐந்து பேர் குண்டாந்தடிகளாலும், கம்புகளாலும் சரமாரியாக அவரைத்  தாக்கத் தொடங்கினர். போப் துரை ஒரு மாமிச மலை. தனி ஒரு ஆளால் அவரை எதிர்கொண்டிருக்க முடியாது. ஒரு அக்கிரமக்காரனை எதிர்க்கும் வேகம், தாக்கியவர்களை ஆக்கிரமித்திருந்தது. வர்க்க உணர்வுடன் நடந்த போராட்டத்தை போப் துரையால் எதிர்கொள்ள முடியவில்லை. ‘அடே! அப்பா!’ என்று துரை அலறி இருக்கிறார். சிற்றோடையின் சத்தத்தில் துரையின் சத்தம் வெளியில் கேட்கவில்லை. துரை தரையில் வீழ்ந்தபின்னரும் தாக்குதல் தொடர்ந்தது. பின்னர் தாக்கியவர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர். தாக்குதலை நேரே கண்ட சாட்சியங்கள் யாருமில்லை.

துரைக்காக கார் கராஜைத் திறந்துவைத்திருந்த அப்பு செபஸ்தியான், நேரம் ஆகியும் துரை வரவில்லை என்று ஸ்டோர் காவல்காரர் காசிமுக்கு போனில் அறிவிக்கிறார். என்ன நடந்ததென்று பார்க்க, துரையின் கார் சென்ற பாதைவழியே சென்ற காசிம், ரத்த வெள்ளத்தில் துரை வீழ்ந்துகிடப்பதைப் பார்க்கிறார். பதைபதைத்து ஸ்டோருக்குத் திரும்பிய காசிம், அங்கிருந்த உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் போப் துரையை, பங்களாவிற்குத் தூக்கிக்கொண்டு செல்கிறார். 

பொலிஸாரோ, டாக்டரோ வருவதற்கிடையில் நள்ளிரவு கடந்து 1.55 மணியளவில் போப் துரையின் உயிர் பிரிந்தது.

மறுநாள் காலை, மே 10 ஆம் திகதி டாக்டர். ஸ்டீபன் டி சில்வா நடத்திய பிண ஆய்வின் பின் போப் துரையின் உடலில் 28 காயங்கள் காணப்பட்டன என்றும், அவற்றில்  17 காயங்கள்  தலையிலும் முகத்திலும் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. மண்டை ஓட்டில் விழுந்த ஆழமான காயங்களும், மூளையின் இடதுபக்கத்தில் ஏற்பட்டிருந்த ரத்தக் கசிவும் மரணத்தைத் துரிதப்படுத்திவிட்டிருந்தன.

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு 250 ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று சந்தேகநபர்களின் புகைப்படங்களுடன் ஆங்கிலத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. வீரகேசரிப் பத்திரிகையில் செய்திகள் வெளியாகின. இந்த வழக்கில் சாட்சியம் அளித்த ஒருவர், தான் கிரமமாக வீரகேசரிப் பத்திரிகையை வாங்கி வாசித்துவருவதாகத் தெரிவிக்கிறார். கண்டி தொழிற்சங்க அலுவலகத்தில் வீரகேசரிப் பத்திரிகை ஒழுங்காக வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலப் பத்திரிகைகளுக்குச் சமமான அளவில் வீரகேசரிப் பத்திரிகை விற்பனையில் இருந்ததாகவும் வழக்கு விசாரணைக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவிலேயே  கொலையாளிகள் என ஆறு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு:

1. வீராசாமி 2. வேலாயுதம் 3. ஐயன் பெருமாள்4. ரெங்கசாமி 5. சின்ன முனியாண்டி 6. மாரிமுத்து வேலு 

இந்தக் கொலைவழக்கில் 55 சாட்சியங்கள். தோட்டத்துரைமார், உயர் பொலிஸ் அதிகாரிகள், டாக்டர்கள், டீமேக்கர்கள், கண்டக்டர்மார், தொழிற்சங்கவாதிகள், தோட்டக்கங்காணிமார், கணக்கப்பிள்ளைமார், தொழிலாளர்கள், சிங்களக்கடை வியாபாரிகள்,  நகை அடவுபிடிப்போர், தையற்காரர், முடிதிருத்துவோர் என்று சாட்சிக்கூண்டில் மிகப்பலர் ஏறுகிறார்கள்.

இந்தக் கொலைவழக்கில் நீதிபதியாக அமர்ந்த ஸொயர்ஸ் அவர்கள் செவ்வியல் இலக்கியத்தில் புலமைமிக்கவர்; ஆங்கிலத்தில் அநாயாசமாக எழுதவல்லவர். குற்றவியல் சட்டத்தில் ஆழங்கால் பட்டவர்.  நீதித்துறையில் பழுத்த அனுபவம் கொண்டவர். காட்டமாகவும் அங்கதத்துடனும் பேசும் ஆற்றல் அவருடையது. இந்த வழக்கில் ஜூரிகளுக்கான சட்டமுறை விளக்கத்திற்கு அவர் எடுத்துக்கொண்டுள்ள 76 பக்கங்கள் இந்த நாட்டின் அசைஸ் நீதிமன்றங்களில் ஒருபோதும் கேட்டிராத சட்டவிளக்கம் என்றும் ஒரு சட்டவிளக்கம் எவ்வாறு அமையவேண்டும் என்று நீதிபதிகளுக்கு அறிவுறுத்தவல்ல ஓர் உரை என்றும் நீதிபதி ஏ.சி. அலஸ் இந்த வழக்குபற்றிய தனது குறிப்பில் எழுதுகிறார். பின்னாளில், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் சட்டத்துறைப் பேராசிரியராகத் திகழ்ந்த சேர். பிரான்சிஸ் சொயர்ஸ், கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் ஒருமணிநேரம் குற்றவியல் சட்டம்பற்றி செழுமையான ஆங்கிலத்தில் ஆற்றொழுக்காக விரிவுரையாற்ற வல்லவர். சட்ட அறிக்கைகளிலிருந்தோ குற்றவழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்திலிருந்தோ அவர் மேற்கோள் காட்டுவதில்லை. தான் எதிர்கொண்ட பிரபல்யமான குற்றவியல் வழக்கு விசாரணைகளிலிருந்து சான்றுகளை வாரி இறைப்பார்.  தனது வகுப்பறையை ஒரு கிரிமினல் உலகமாக மாற்றிக்கொண்டுவிடுவார்,  தனது விரிவுரைகளை ஓர் அரங்க நிகழ்வாக்கும் திறன் கொண்டவர் என்று அவரிடம் சட்டம் பயின்ற லக்ஸ்மன் கதிர்காமர் நினைவுகூர்கிறார்.    

இலங்கையின் புகழ்மிக்க வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் எதிரிகளுக்காக ஆஜராகி இருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் இலங்கையில் மிகப்பிரபலமான, முன்னணி கிரிமினல் வழக்கறிஞரான ஆர்.எல்.பெரேரா கே.சி. (King’s Council) எதிரிகளுக்காக வாதாடினார். 1936ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் நெருங்கிய உறவுக்காரரான ஸ்டீபன் செனவிரத்ன என்ற பாரிஸ்டர், கொழும்பில் தனது மனைவியான ரொஸ்லினை குளோரபோம் மூலம் கொலைசெய்ததான குற்றச்சாட்டின் பேரில் நடைபெற்ற  வழக்கில், ஸ்டீபனுக்காக   வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா ஆஜரானார். கொழும்பு உயர்நீதி மன்றத்தில் ஸ்டீபனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சிலில் தொடரப்பட்ட மேன்முறையீட்டில் ஆர்.எல்.பெரேரா வாதாடி ஸ்டீபனுக்கு விடுதலைபெற்றுத் தந்தார்.

1949ஆம் ஆண்டில் இலங்கையைக் குலுக்கிய குதிரை ரேஸ் பந்தய டேர்ப் கிளப் கொள்ளை, கொலைவழக்கில் குற்றவாளிகளுக்காக ஆஜரான ஆர்.எல்.பெரேரா, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த டாக்டர்களிடம் மேற்கொண்ட குறுக்குவிசாரணையில் ஒரு டாக்டர் மயங்கிவிழுந்திருக்கிறார்.    

போப் துரை கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருவாளர்கள். வீராசாமி, வேலாயுதம், ஐயன் பெருமாள்,  சின்ன முனியாண்டி, மாரிமுத்து வேலு ஆகிய ஐந்துபேருக்கும் வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா தலைமையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பி.எச்.டபிள்யு.டி. சில்வா, ஆர்.என். இலங்ககோன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரான  ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் பின்னாளில் முழுநேர அரசியல்வாதியாக மாறி, இலங்கையின் ஜனாதிபதியானார். அவருடைய சகோதரர் எச்.டபிள்யு.ஜெயவர்த்தன அவர்கள், சிரேஷ்ட வழக்கறிஞர் பி.ஜி.எஸ். டேவிட் தலைமையில் நான்காவது சந்தேகநபரான ரெங்கசாமிக்காக ஆஜரானார்.  

கொலை நிகழ்ச்சியின் சந்தேகநபர்களுக்கு ஆதரவாகப் பின்னணியில் பணபலம்மிக்க சக்திகள் செயல்படுவதாக சார்ஜன்ட் குலதுங்க அளிக்கும் சாட்சியத்தை சிரேஷ்ட வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா கே.சி. அவர்கள் நீதிமன்றத்தில்  முற்றாக மறுதலிக்கிறார். தொழிற்சங்கங்கள் தமது சந்தாப்பணத்தை வசூலிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்பதையும் அந்தத் தொழிற்சங்கம் பணக்காரத் தொழிற்சங்கம் அல்ல என்றும் நீதிமன்றில் கூறுகிறார். தான் இந்த வழக்கில் ஆஜராவதற்கு மிதமான தொகையையே பெற்றுக்கொண்டேன் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

போப் துரையைத் தாக்குவதில் வீராசாமியும் வேலாயுதமுமே முழுப்பொறுப்பேற்றனர் என்றும் அதன் விளைவுகள் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு எடுத்துக்கொள்வதாக அவர்கள் தெரிவித்ததாகவும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

போப் துரைத் தாக்குதலில் நேரடிச் சாட்சியங்கள் இல்லையாயினும், அரசுதரப்பில் நேரடிச் சாட்சியமாக குப்புசாமி அப்ரூவராக மாறுகிறார். இவரே அரசுதரப்பிற்கு நட்சத்திர சாட்சியமாவார். மூன்று வாரங்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த குப்புசாமி அப்ரூவராக மாறியபின் விடுதலை செய்யப்படுகிறார்.

ஸ்டெலென்பேர்க் தோட்டத்துரை போப் 1941ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கொலைசெய்யப்படுகிறார். 

குப்புசாமியின் சாட்சியம் இது:

‘நான் 9ஆம் திகதி மாலை வேலையிலிருந்து வீடு திரும்பினேன். வீராசாமியும் வேலாயுதமும் ஐயன் பெருமாள் வீட்டிற்கு வந்து, பின்பு மூவருமாக லயத்திற்குப் பின்னாலிருந்த கான் பக்கமாகச் சென்றுவிட்டு, சற்றுநேரத்தில் மூவருமாகத் திரும்பிவந்தனர். வீராசாமி என்னிடம் வந்து, தான் துரைக்கு ஒரு வேலை செய்யப்போவதாகவும், வேலாயுதம் இல்லாதபடியால், தன்னால் அதனைச் செய்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். அம்மாதிரிப் பேச்சு எதனையும் எனக்கு முன்னால் பேச வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன். பின் வீராசாமி போய்விட்டார். நான் வீட்டிலேயே இருந்தேன். பிறகு கடைக்குப்போய் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தேன். கடையில் நான் சிறிது வேலைசெய்வதால் அங்கு எனக்குச் சாப்பாடு தருவார்கள். பிறகு வீராசாமியும் வேலாயுதமும் என் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார்கள். நான் கதவைத் திறந்தேன். தங்களோடு வேட்டைக்கு வருமாறு அவர்கள் என்னிடம் கேட்டார்கள். மறுநாள் வேலைக்குப்போக வேண்டியிருந்ததால்தான் அவர்களுடன் வரமுடியாது என்று சொன்னேன். பின்பும் அவர்கள் வற்புறுத்தியதால், அவர்களுடன் வேட்டைக்குப்போகச் சம்மதித்தேன். துரைபங்களாவிற்குக் கிட்டப்போனதும், துரைபங்களாவிலிருந்து  ஸ்டோருக்குப் போகும் டெலிபோன் வயரை அறுக்குமாறு கேட்டார்கள். வேட்டைக்குப்போவதாகக் கூப்பிட்டுவிட்டு, இப்போது ஏன் டெலிபோன் வயரை அறுக்கச்சொல்லிக் கேட்கிறீர்கள் என்று அதற்கு நான் மறுப்புத் தெரிவித்தேன். நான் மறுத்ததால், அவர்கள் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நான் வீட்டிற்குப் போக வேண்டுமென்றிருந்தேன். அப்போது பெரிய  சத்தம் எனக்குக் கேட்டது. நான் ஓடிப்போய்ப் பார்த்ததில் அங்கு சிலர் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரும் சத்தமாக இருந்தது. அங்கு ஒரு காரும் நின்றுகொண்டிருந்தது. பின் நான் வீட்டிற்குப் போய்விட்டேன். மறுநாள் காலை, எனக்குத் தெரிந்ததை பொலிஸ் சார்ஜனிடம் தெரிவித்தேன்.’

 ஸ்டெலென்பேர்க் தோட்டத்தில் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில், சாத்தன் (ஆங்கிலத்தில் தாட்டன்) கங்காணியும் செல்லையா கணக்கப்பிள்ளையும் சேர்ந்து வேறு நாசகார வேலை ஒன்றுக்கு அடிபோட்டுக் கொண்டிருந்தனர். அதுகாலவரை அந்தத் தோட்டத்துத் தொழிலாளர்கள் எல்லாருமே சாத்தன் கங்காணி பெரட்டிலேயே இருந்தார்கள். அதாவது சாத்தன் கங்காணிபேரில் ஒரு தொழிலாளி தோட்டத்தில் பதியப்பட்டிருந்தால், கங்காணிக்கு 4 பென்ஸ் காசு அவர் பேரில் விழும். சாத்தன் கங்காணி அத்தோட்டத்தில் விரும்பத்தக்கவராக இல்லாததால், பெரும்பாலான தொழிலாளர்கள் கங்காணி பெரட்டிலிருந்து மாறி, தோட்டத்துரை பெரட்டுக்கு மாறத் தயாராகவிருந்தார்கள். இப்படி தொழிலாளர்கள் துரை பெரட்டுக்கு மாறிப்போனால் சாத்தன் கங்காணிக்கு வரும்படி ஒன்றும் இல்லாமல்போகும். அதனால், சாத்தன் கங்காணி சாராயம், பணம் என்று கொடுத்து, தொழிற்சங்கத்தின் தோட்டக்கமிட்டி அங்கத்தவர்கள் அனைவரையுமே தன் பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டுவிட்டார். தோட்டக் கமிட்டித் தலைவர் மெய்யப்பனை மட்டும் அவரால் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. 

‘குப்புசாமி தனது வாக்குமூலத்தில் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திரு. டி சேரம் அவர்களிடம் குப்புசாமி முதலில் வாக்குமூலம் அளிக்கும்போது, தன்னை பொலிஸார் தாக்கியதாகத் தெரிவித்திருக்கிறார். பின் மஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளிக்கும்போது முதலில் தன்னை பொலிஸ் அடிக்கவில்லை என்றும், மீண்டும் வழக்கறிஞர் கேட்டபோது, பொலிஸார் தன்னை அடித்ததாகவும் கூறினார். இப்போது, குறுக்கு விசாரணை செய்தபோது, தான் பொலிஸிற்குப் பயந்தோ என்னவோ தன்னை பொலிஸார் தாக்கவில்லை என்கிறார். சாத்தன் கங்காணியும் செல்லையா கணக்கப்பிள்ளையும்தான் தனக்கு எப்படி நீதிமன்றத்தில் சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்’ என்று  குப்புசாமியின் வாக்குமூலம் நம்பகமற்றது என்று நிறுவுகிறார் ஆர்.எல்.பெரேரா அவர்கள்.  

‘இரவு 11.00 மணிக்கு துப்பாக்கியோ வேறெந்த ஆயுதமோ இல்லாமல் ‘வா, வேட்டைக்குப் போவோம்’ என்று வீராசாமியும் வேலாயுதமும் குப்புசாமியை அழைத்தார்கள் என்பதும், மிருகங்கள் தென்படக்கூடிய காட்டுப்பகுதி, தோட்டத்தின் கிழக்குப்பக்கமாக, லயத்தின் வலதுபுறமாக இருக்கும்போது, வேட்டைக்குப்போபவர்கள், அதற்கு எதிர்த் திசையில் ஸ்டோர் பக்கமாகப் போயிருக்கிறார்கள் என்றால் இது எவ்வளவு கேலிக்கூத்தான கதை’ என்று வாதம் வைக்கிறார் வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா அவர்கள். ‘டெலிபோன் வயரை அறுக்குமாறு வீராசாமியும் வேலாயுதமும் குப்புசாமியைக் கேட்டார்கள் என்றால், ‘எதைக்கொண்டு வயரை வெட்டுவீர்கள்?’ என்று தான் கேட்டதற்கு, ‘கையில் ஒன்றுமில்லை’ என்று குப்புசாமி பதில் சொல்கிறார். வயரை வெட்டுவதற்கு கத்தியையோ அல்லது வேறு ஏதாவது கருவியையோ கொடுக்காமல் வீராசாமியும் வேலாயுதமும் குப்புசாமியைக் கேட்டார்கள் என்பதற்கு  பொலிஸார்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எல்.பெரேரா அவர்கள். அரசுத்தரப்பு சாட்சியமாக மாறிய ஒருவரின் வாக்குமூலத்தை பெரும் ஆதாரமாக்கருத முடியாது என்கிறார் அவர்.

ஒரு சாட்சியின் ஒரு பகுதி வாக்குமூலம் பொய்யானது என்று நிறுவப்பட்டால்,  அந்த சாட்சியத்தின் ஏனைய அம்சங்களையும் நிராகரித்தேயாக வேண்டும் என்றும் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்ற பகுதியை ஏற்றுக்கொள்ளாமல் விடலாம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை என்றும் அழுத்தமான வாதத்தை முன்வைக்கிறார் வழக்கறிஞர்.

தொடரும்..

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *