பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள்

பண்டைய மருத்துவத்தின் மரபுச் செல்வங்கள்

 JUNE 13, 2021

பண்டைய கால மருத்துவ மரபுச் செல்வங்களை அறிய இலக்கிய இலக்கண நூல்களும், அவற்றின் உரைகளும் அவ்விலக்கியங்களுக்குத் துணையாகக் கல்வெட்டுக்களும், தொல்லியல் சான்றுகளும்துணை நிற்கின்றன. (எ. கா. ) தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களுடன் கணக்கதிகாரம், அகத்தியர் குழம்பு, போகர் வைத்தியம் , சித்தாராரூடச்சிந்து, சரபேந்திர வைத்திய நூல்கள்.

நம் மருத்துவ தொழில்நுட்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்வழியாகச் சொல்லப்பட்டுவந்தது. ஒரு நிறுவன வழி கற்றல் இல்லை. ஆகவே கற்பித்தல் பொதுமையை எய்தவில்லை .இத்தொழில்நுட்பம் வருவாய்க்குரியதாய் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலுக்குள்ளேயே சுழன்று வந்தது. ஆகவே தனியான மருத்துவ நூல்களைக் காண இயலவில்லை. ஆனாலும் தமிழரின் சிந்தனை மரபுகளை இந்தியப் பின்புலத்தில் வைத்து, பிறகுகிரேக்க, அரேபிய சிந்தனையோடு ஒப்புநோக்கும்போது நம் மரபுச் செல்வங்களின் உயர்வும், சிறப்பும் வெளிப்படுகிறது. இவைகள் அனைத்தும் சோதனைக்கு அதிகம் ஆளாகாது,அனுபவத்தாலும் கூர்ந்த நோக்காலுமே பதிவு செய்யப்பட்டவை.

சங்கப்புலவர் அறிவியலாளர்கள் அல்லர். ஆனால் அறிவியல் உண்மைகளைப் பாடல்களில்பொதிந்து வைத்துள்ளனர். பரிணாமக் கொள்கை கருவியல், உலகத் தோற்றம் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்து, உயிரினங்களின் உறுப்புகள், மருத்துவ உணவுகள் ஆகிய பல செய்திகளைப் புலவர்கள் பாடியுள்ளனர்.

இவ்விலக்கிய உரையாசிரியர்களும் செய்திச் சுரங்கங்களாக விளங்குகின்றனர். தமிழ் மக்களின்வாழ்வியலை அறியவும், ஆராயவும் பெரிதும் உதவும் முதல் நூல் தொல்காப் பியம். இந்நூலில்பொருளதிகாரத்தில் பல மருத்துவக் குறிப்புகள் காணப்படுகிறது. இதில் நோய், பிணி என இரண்டுசொற்கள் உடல்நலக் குறைவைச் சுட்டுகிறது. நோய் தீர்ந்துவிடும், பிணி நீங்காது பிணித்துக்கொள்ளும், பிறவி, காமம் பசியை தமிழ்ச் சான்றோர் பிணி என்றனர். “பையுளும் சிறுமையும் நோயின் பொருள்” (தொல்) இவைகள் ஒருவனுக்கு உள்ளத்தாலும்,உடலாலும் துயரங்கள் தருவன / நோய் வகைப்பாடு குறிப்புகள் இலக்கியத்தில் இல்லை எனினும் “வீவரு கடுநோய்”, “அரும் பிணி” என்ற சொல்லாட்சிகள் அமைந்துள்ளன. நோயில் இருவகைப்போக்கைக் காண முடிகிறது.

  1. இயற்கைக்கு அப்பாற்பட்டவை
  2. இயற்கை நிகழ்வே என்ற புறவய நோக்கு.

புறவயச் சிந்தனை: பசிப்பிணி “கடும்பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சம்” (புறம்) பிணி போக்கும்மருந்து =உணவு – இதைக் கொடுப்பவன் – பசிப்பிணி மருத்துவன். சிறுகுடி குடிக்கி ழான் மகன்பண்ணனைச் சோழன் நலங்கிள்ளி இவ்வாறு போற்றுவான். பசிப்பிணியை ‘வயிற்றுத்தீ’ என்றுபுறநானூறு செப்பும். மணிமேலை ‘யானைத்தீ’ என்கிறது. “ஆணைத்தீ நோய் அரும்பசி களைய”என்கின்றது மருந்து யாரேனும் தரமுடியுமா? காமப்பிணிக்கு வள்ளுவர்

“பிணிக்கு மருந்து பிரன்மன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து”

என்று ஒரு மருந்தைக் கூறுகின்றார்.

தலைவனைப் பிரிந்த தலைவி தலைவனை நினைத்து, குளிக்காமல் இருப்பதால் தேமல் என்றசுணங்கு தோன்றும். “பொன் என ஆகத் தரும்பிய சுணங்கும்” (அகம்) இது புறத்தூய்மை இல்லாதவர்க்குத் தோன்றும். சங்ககாலத்தில் தொழுநோயை, “காரக் குறைந்த கரைப்பட்ட நோய்” (கலித்தொகை) என்றனர். பிறகு குறைந்து முடமாக்கும் நோய் என்றதால் குட்டநோய், என்றனர். அதன் பிறகு வடுவினால் கருநிறத் தழும்பு ஆகி ‘கருங்குட்டம்’ ஆகியது. இது நாலடியாரில் தொழுநோய் என சுட்டப்படுகிறது. சூலைநோய் கூரிய ஆயுதத்தால் வயிற்றில் குத்துவது போன்ற கடும்வலி ஏற்படுத்தும் என்று திருநாவுக்கரசர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நோய் ஏயர் கோன் கலிக்காமர் நாயனார் புராணத்திலும் சுட்டப்பட்டுள்ளது.

மாரடைப்பு அதிர்ச்சி (Fear) ஆகும். அதிர்ச்சி உண்டாகும்போது பயம் ஏற்படும் “அதிர்வும்
விதிர்வும் நடுக்கச் செய்யும்” (தொல்).

இதேபோல குறளில்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை/ அதிரவருவதோர் நோய்” என்று கூறப்படுகிறது.
இன்னம் தெளிவாகத் திருமந்திரத்தில் “அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்/மடக்கொடி யாரோடு மந்தணங் கொண்டார் / இடப்பக்கமே இறை நொந்தது என்றார் / கிடக்கப் படுத்தார் கிடந் தொழிந்தாரே” என்று சொல்லப்படுகிறது.மருந்தின் இலக்கணம் என்ன? உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் நோய்களைத் தடுப்பதும் நீக்குவதுமான பொருளே மருந்து.

“வாயுரை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்” (தொல்)

நல்ல மருந்து: நோயை மட்டுப்படுத்தி நோயாளிக்குத் தீங்கு நேராது காக்க வேண்டும்.
“இன்னுயிர் செய்யும் மருந்தாகிப் பின்னிய ” (கலித்தொகை)

அம்மருந்து பொறுக்க முடியாத துன்பத்தைப் போக்கும்படி இருக்க வேண்டும்.

“அருந்துயிர் ஆரஞர் தீர்க்கும்
மருந்தாகிச் செல்வம் பெரும” – (கலித்தொகை)

பின் விளைவுகள், இன்றி விரைவாகத் தீர்க்க வேண்டும்.

என்னுள் இடும்பை தணிக்கும் மருந்தாக நன்னுதல்
ஈத்த இம்மா”. – (கலித்தொகை)

நல்லுடம்பில் மருந்து நல்லொழுக்கத்தால் பேணப்பட்ட உடம்பில் பலன் மிகுதி. நோய்
எதிர்ப்பு சக்தி கூடி இருப்பின் மருந்து சிறப்பாக வேலைசெய்யும்.

“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து
போல் மருந்தாகி மன்னுவப்ப” – (கலித்தொகை)

மருத்துவன் நோயுற்றவரின் உடல் நிலைகளை நன்கு ஆராய்ந்து அவரது தடுப்பாற்றல் அல்லது திருந்திய யாக்கைத் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட மருந்து உண்மையான மருந்தாகி நோயைப் போக்க வேண்டும். அவ்விதம் அமைந்தால் மருத்துவரும்,நோயாளியும் மனம் மகிழ்வர்.

மருத்துவ அறம் என்ன?

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடா அது
மருதாய்ந்து கொடுத்த அறவோன் போல்” – (நற்றிணை)

என்ற வரிகள் மருத்துவன், நோயாளி , நோயின்தன்மை கால ம் ஆகியவைகளைக்
கணக்கெடுத்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
தலைக்குத்து மருந்து: மருத்துவன், தாமோதரனார் திருவள்ளுவ மாலையில் சிந்திற் சர்க்கரை,சுக்குப்பொடி, தேன் கலந்து மோந்தால் தலைவலி குணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இம்முறை,சித்த மருத்துவத்தில் ‘பொட்டணம்” எனப்படுகிறது.

பசிப்பிணி போக்கும் கருநாவல்: பன்னீராண்டு காலம் பசிவராமல் தடுக்கும் அரிய கருநாவற்கனி,
(மணிமேகலை – விருச்சக முனிவன் கதை) –

“பெருங்குலைப் பொன்னைக் கருங்கனியனைய
தோர் / இருங்கனி நாவற்பழம்”

உயிர் காக்கும் அற்புத அரிய மருந்துகள் (கம்பயுத்த காண்டம்) – இறந்தவர் பிழைக்க, ஒரு மருந்துபிளந்த உடலை ஓட்ட ஒரு மருந்து படைக்கல ஆயுதங்களை வெளிப்படுத்த, ஒரு மருந்து / உருவம்குலைந்தபோது மீண்டும் பழைய உருவினைக் கொடுக்க ஒரு மருந்து அது உண்மையான மருந்து.

“மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும் / உடல் வேறு வகிர்களாகக் / கீண்டாலும் பொருந்து விக்கும் ஒரு மருந்தும் / படைக்கலங்கள் கிளைப்ப தொன்றும் / மீண்டேயும் தம்முருவை அருளுவதோர் மெய்ம் மருந்து முள” என்றும், அடுத்த பாடலில் இவைகள் இன்ன ஆற்றலுடையன என்பத்தையும் விளக்குகிறது.

“சல்லியம் அகற்றுவது ஒன்று / சந்துகள் புல்லுறப்
பொருத்துவது ஒன்று / பயின் நல்லுயிர் நல்குவதும்
ஒன்று /. நன்னிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று”

அதாவது ஆயுதங்களை வெய்ப்படுத்துவது – சல்லிய கரணி

மாண்டாரை உய்விக்கும் மருந்து – சஞ்சீவ கரணி
உடம்பு பிளவை பொருத்துவது – சந்தான கரணி

உயிரை மீட்கும் மருந்து – மிருத சஞ்சீவினி

இம்மருந்தினால் கண்சிமிட்டும் நேரத்தில் உயிர் மீளும். “வீயும் உயிர் மீளும் மருந்து எனல் ஆகியது/ வாழி மணியாழி” (சுந்தர காண்டம்).

உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம்பதியர் ஊடலுக்கு மருந்து சஞ்சீவ கரணிபோல் இல்லையே என்று வருத்தம் தெரிவிக்கிறார். இம்மருந்துகள் பொருட்டொகை நிகண்டிலும் காணப்படுகிறது. சித்தர்கள் இம்மருந்துகள் கிடைக்கும் இடத்தைக் கூறுகின்றனர். அவைகள் கொங்கு நாடு, குடகு நாடு, சேரநாடு. மூலிகை வளரும் இடம் அட்டமங்கலம் என அவர்கள் பெயரிட்டுள்ளனர். இது மேற்குத் தொடர்ச்சிமலையாக இருக்கக்கூடும்.

அழகுக்கு மருந்து

கோவலனுடன் உலாவி வர ஒப்பனை செய்ய கலைச்செல்வி மாதவி பத்துவகை துவர், ஐந்து வகை விரை, முப்பத்திரண்டு வகை ஓமாலிகை என – 47 ஒத்த செயல்படும் கூட்டுப்பொருள்கள், ஊறிய நீரில் நீராடினாள். கூந்தலுக்கு அகில் புகை, நிறம் கொடுக்க, வளர – “மான் மதக் கொழுஞ் சேறூட்டி” அலங்கரித்தனர். இது கத்தூரி குழம்பு என்ற சவ்வாது ஆகும்.கூந்தல் வளர “கடுகு கலந்த கைப்பிடி எண்ணெய்” (தொல்காப்பியம்) உதவியது.

குரல் வளம் தரும் மருந்து

பஞ்ச மரபு நூல் இசைமேதை சேறை அறிவனார் எழுதியது. “திப்பிலி, தேன், மிளகு, சுக்கினோடிப்பூரல் / தும்பில்லா, ஆன்பால், தலைக்கடை – ஒப்பில்லா வெந்நீரும், வெண்ணெயும் / மெய்ச்சாந்தும் / பூசவிவை, மன்னூழி வாழும் மகிழ்ந்து”. திப்பிலி, தேன், மிளகு, சுக்கு, இம்பூரல், பசும்பால், தலைக்கடை மெய் சாந்து இவைகளை வெண்ணெய்விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்து பூசிவர குரலின் வளம் அதிகரிக்கும்.

நோய் வராது பாதுகாக்க மருத்துவம்:

தடுப்பு முறை ‘கோபம் முகத்தில் தோன்றும் நகையையும் உவகையையும் கொன்றுவிடும் ஏன் ஒருவனையே கொன்றுவிடும். ’

தடுப்புமுறை

உண்டபின் மெல்ல உலாவுதல் அவசியம். இதற்கு உணவு மண்டபத்துடன் நூறடி நீள நடை மண்டபம் இருந்துள்ளதை (சீவகசிந்தாமணி உரை) உரைக்கிறது. இக்கருத்தை ஒட்டியே வள்ளலார் உலாவுதலைக் குறிப்பிடுகிறார். நம்நாடு வெப்பநாடு “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” (மேலாடை இடையிடை) போதுமானது என்பதே நம் முன்னோர் கொள்கை. மன அழுத்தமே (stress) 70% நோய்க்கான காரணம். ஆகவே குடும்பம், அரசாட்சி, பணியாளர்கள், சமூகத்தில் வாழ்வோர், சான்றோர் ஆகியோர் நாம் விரும்பும்படியே அமையின் முதுமை என்னும் சிதைவு வராது நரைமுடி வராது என்கிறார் இப்பாடலாசிரியர் பிசிராந்தையார் என்னும் புலவர். இவர் இப்பாடலில் தெய்வத்தையோ கிருமியையோ அல்லது பேய் பிசாசுகளையோ அல்லது மருந்துகளையோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வுனவுதி ராயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்”

சமயலறை மருத்துவம்

நமது மருத்துவம் சமயலறையில் தொடங்குகிறது. அஞ்சறைபெட்டி பொருட்கள் (வீட்டு மருந்து) மருத்துவத்தின் மூலப்பொருள்கள் ஆகும். இது உணவாகவும் அமைந்தது. “கருங்கொடி மிளகின் காய்துணர் பசுங்கறி” (மலைபடுகடாம்) “இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்” உப்பு அளவாக இருக்க வேண்டும், நெல்லின் அளவிற்கு உப்பு விற்கப்பட்டது “உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது மிக்கற்றால் நீளவிடல்” இது காதலர் பொய் கோபத்திற்கு ஒப்புமை காட்டப்பட்டது. பொய்க்காதலும், கெடும் உணவும் கசந்துவிடும். உணவில் அறுசுவை அவசியம் (இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கைப்பு, புளிப்பு”“அறுசுவை உண்டி அமர் தில்லால் ஊட்ட” இது ஆற்றல், வீறு, வளம், தெளிவு மென்மை, இனிமை தரும்.

உணவுக்கான மருத்துவ நெறி

இவ்வுணவை காலம், இடம், உடல், வயதுக்கு ஏற்றவாறு திட திரவ உணவு என பிரித்து உண்டனர் தமிழர். அவை எட்டு வகைப்படும்.

மெய் தெரி வகையின் எண் வகை உணவின் செய்தியும் விரையார்” (தொல்காப்பியம்)எட்டு வகையை நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். பயறு, உளுந்து, கடுகு, கடலை,
எள்ளு, கொள்ளு, அவரை, துவரை என மற்றொரு உரையாசிரியர் சுட்டுகிறார். இதில் உள்ள சத்துக்கள் பொதுவாகவே உடலில் சர்க்கரையை மெதுவாக உயர்த்தும். ஆகவே இது நீரிழிவுக்குத் தடுப்பாகும் என்பது தமிழர்கள் கண்ட உணவு.

இறப்பைத் தள்ளிப்போட மருந்து

நெல்லிக்கனி குறித்த செய்தி அதியமான் – ஔவை வாழ்க்கையின் வரலாற்றுச் செய்தி ,
“சிறியிலை நெல்லித்தீங்கனி” (புறம்) “புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றனர்” (அகம்) நெல்லியில் கரு நெல்லிக்கனி மரணத்தை வெல்லும் இது காயகற்ப வகையைச் சார்ந்தது.

கள்ளும் உணவானது

கள் மயக்கம் தருவதற்கு அன்று நெல்லால் செய்யப்படும் (நறவு), பனங்கள், வெப்பமுடைய கள்,தேனாலாகிய கள் “இன் கடு ங்கள்” (குறு) எனப்பட்டது. போருக்குச் செல்லவும், குளிருக்கும் நறவு. வழிநடை வலிக்கும் கள். சித்தமருத்துவத்தில் அன்ன பேதி செந்தூரம் செய்ய – அனுபானமாக, “ கள் ”, பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்து இரத்தசோகைக்கு ஏற்றது.

நோய்த் தடுப்பு முறை:

மனதார வாழ்த்தும் மரபு தமிழர் மரபு. “நோயினை ஆகுமதி பெரும” / “நோயிலர் ஆகநின் புதல்வர்”.(புறம்) தனிமனித தூய்மை “புறந்தூய்மை நீரால் அமையும்” என போற்றப்பட்டது. மாதவிலக்கில் புணராதே. வீட்டைச் சாணமிட்டுப் பெருக்கி சுத்தம் செய் என்றனர். “பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்” (பெரும். பாண்) மனைகளில் வேம்பு: “தீங்கனி இரவமோடு வேம்பு மனை செரீஇ. ” சேமக்கலனை “அற்சிர வெய்ய வெப்பத்தண்ணீர்/சேமச் செப்பில் பெற் இயரோ நீயே” (குறுந்தொகை) என்ற பாடல்வரி சுட்டியுள்ளது. – இதுவே இன்றைய பிளாஸ்க் எனலாம்.

உடல் பருமனுக்கு உடற்பயிற்சி அவசியம்.

மன்னர் வாழும் தலைநகரில் பந்தாடும் இடத்தை “பற்தெறிந்து இளையராடு பூமியே” என்கிறது.சீவகசிந்தாமணி: பெண்களும் பந்தாடினர். கால் பந்து, கைபந்து, மேலே பந்தை வீசி பிடித்து விளையாடும் பழக்கமும் தமிழர்களிடம் (பாலகாண்டம்) இருந்தது. பரதவ மகளிர் பனை நுங்கின் நீரையும் கரும்புச்சாரையும் கலந்து மென்பானமாகப் பருகி கடலில் பாய்ந்து நீராடினர்(Health drink).போருக்கு உரிய மருந்தை உடன் எடுத்துச்சென்றனர்.

“அஞ்சனம், மனோசிலை, அணி அரிதாரம் / துத்தம் மாஞ்சி அத்தவத்திரவம் / திப்பிலி. இந்துப் பொப்பு முறையமைத்துத் / தாழி மேதை தவாத துவர்ச்சிகை / வண்ணிகை வங்கப்பாலையொடு இன்ன / மருந்துறுப்பெல்லாம் ஒருப்படுத்து அடங்கி”.அடிப்பட்ட வேதனை தீர்க்க இசை. யாழினால் பல்லிசை இசைத்தும் / ஆம்பல் என்னும் குழலை
ஊதியும், காஞ்சிப்பண்ணைப் பாடியும் மருத்துவம் புரிந்தனர். “யாழொடு பல்லியங் கறங்க

கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதாதி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சிபாடி” (புறம்)

அடிபட்டு கிடப்பவனுக்கு இசை போதுமா? என்ன மருத்துவம் செய்ய வேண்டும். குலசேகர ஆள்வார் – நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில்

“வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்” என்று கூறுகிறார்.

அதே கருத்தில் கம்பர் (யுத்த காண்டம் கும்பகர்ணன் வதை படலம்)

“உடலிடைத் தோன்றிற்றொன்றை அறுத்ததன்
உதிரம் மாற்றி சுடலுறச்சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்வர்”
 என்று செப்புகிறார்.

உள்ளே மாட்டிக் கொண்ட ஆயுதம் வெளியேற்ற பிளவுசெய்யாது கம்பர் காந்த சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார். (Magnet – மீட்சிப் படலம்)

“ஆயில்வேல் நீங்களது இப்பொழுதகன்றது
காந்தமாம் மணியின்று வாங்க”

இதுபோலவே மற்றொரு பாடலில் (மீட்சிப்படலம்) கைகேயி வரமானது கூறிய வேல் போல் குத்தியது தசரதனை – இராமன் தரசதன் மார்பகத்தைத் தழுவியதால் துன்பம் நீங்கியது. காந்தத்தால் வேலாயுதம் நீங்கியதுபோல் இது கம்பனின் உவமை

மரப்பொந்து புண் : எப்படி மருத்துவம் செய்யப்பட்டது! ஆழமான புண்ணில் நெய்
தோய்ந்ததுணி வைத்து நெய்பத்தலில் கிடத்தி, இரும்புத் துண்டை அகற்றி, எலி முடி ஆடைபோர்த்தி வீரர்களுக்குச் சிகிச்சை நடைபெற்றது. (சீவக)புண்ணில் பஞ்சு வைத்துக் கட்டப்பட்டது.

“கது வாய் போகிய நுதிவாய் எகமோடு / பஞ்சியும் களையாய் புண்ணர்” (புறம் P. T. சீனிவாசய்யங்கார் உலகில் பஞ்சைக் கண்டுபிடித்தது தமிழர் எனக் கூறுகிறார்.

இறந்தவரைத் தைலத்தோனியிட்டுப் பிணத்தைப் பத்திரப்படுத்தின

காப்பியத்தில் கம்பர் – தசரதன் இறந்த பிறகு அவனுக்கு இறுதிச் சடங்கு நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகிய பொழுது தைலத்தோணியிட்டு பாதுகாக்கப்பட்டது (தைலமாட்டுப்படலம்)என்பதை

“தையல் கடல் நின்றெடுத்து அவனை
தயிலக் கடலின் தலையுய்த்தான்”

எனச் சுட்டுகிறார்.

இக்காட்சி 12ஆம் நூற்றாண்டு அழகர் கோவிலில் ஓவியமாக உள்ளது. காப்பியத்தில் மற்றொரு இடத்தில் (யுத்த காண்டம்) இந்திரஜித்தின் மறைவு கேட்டு இராவணன் அவன் அழிவிற்குக் காரணமாக இருந்தவர்களை தான் அழிக்காவிடில் தன்னைத் தைலத்தோனியிடுமாறு சபதம் செய்கிறான்.

மருத்துவர்கள் தனி வீதிகளில் அமர்த்தப்பட்டனர். இது சிலம்பில் ஆயுர்வேதமருத்துவ வீதி எனப்பட்டது. அவர்கள் வசித்த ஊர் (திரு. குரங்காடுதுறை அருகில்) மருத்துவக்குடி எனப்பட்டது. “மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்” என மருத்துவர் புகழப்பட்டனர். மருத்துவருக்கு உதவி செய்பவர் பெண் தாதி, புறத்துறைமகளிர் என்றும்; திருமுக்கூடல் கல்வெட்டில் மருந்தாகும் பெண்டுகள் என்றும் சிலம்பு, மணிமேகலையில் செவிலி, காவற்பெண்டு, தாதி என்றும் குறிக்கப் பெறுகின்றனர். இந்த பொதுக் கருத்து மேலை நாட்டில் பிளாரன்ஸ் நெட்டிங்கேலினால் 1860இல் தலைதூக்கியது என்பது வரலாறு.

சங்க காலத்தில் பொருள் கொடுத்து மருந்து பெறவில்லை. ஏனெனில் பெரும்பாலும் மூலிகை மருந்து விலை கொடுத்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படும் என எண்ணினர்.

சங்க காலத்திற்குப் பிறகே அறுவை மருத்துவர்களுக்குச் சல்லிய விருத்தி, சல்லிய கிரியா போகம் என்றும், மருத்துவர்களுக்கு வைத்தியவிருத்தி, ஆதுலர் போகம் என்றும் விஷ விருத்தி விஷக்கடி மருத்துவர்களுக்கும் கொடையாக வழங்கப்பட்டது. ஆனால் 11 ஆம் நூற்றாண்டின் திருமுக்கூடல் கல்வெட்டின்படி மருத்துவர்களுக்கு நெல்லும், பொற்காசுகளும் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது அறியப்படுகிறது.

அறுவைக்கான கருவிகள் 26 இருந்ததை அகத்தியர் நயனவிதி 500 இல் குறிப்பிடப்படுகிறது. இவைகள் கத்தி, குறும்பி போன்றவையே ஆகும் . வயிற்றுருப்புகளை இவைகளை வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே ஆகும்.

அறுவை மருத்துவம் மேம்படாது இருந்ததற்கான
காரணம் என்ன?

மருத்துவம் மறைபொருளாகப் போதிக்கப்பட்டது. அறுவை மருத்துவம் கற்க அடித்தளம் பிணத்தை அறுத்து உடல் கூறை அறிந்து கொள்வது அவசியம். ஆனால் தமிழ்நாட்டில் சமய சம்பிரதாயப்படி இறந்தவர் உடல் எரிக்கப்பட்டதால் இது நடைபெறவில்லை. புத்தம், சமணம் ஆகியவை கொல்லாமை கொள்கையைப் போதித்தது. மேலும் மனுநீதியைக் கடைப்பிடிக்க எண்ணிய மேட்டுக்குடி மக்கள் அறுவைச் சிகிச்சையை நாடவில்லை. ஏனெனில் பிரேதத்தை தொட்ட ஒ ருவன் யதேச்சையாக தொட நேர்ந்தால் குறிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனது பரிசுத்தத்தைப் பெறுவான் என்று நம்பினர். வருணாசிரமம், இந்திய மண்ணில் தோன்றிய பின் கடுமையான எதிர்வினை கை, கால்களால் செய்யப்படும் உடல் உழைப்புக்கு ஏற்பட்டது. ஆகவே உடல் உழைப்பை மேட்டுக்குடி மக்கள் தவிர்த்தனர். இதனால் அறிவு ஜீவிகளுக்கும்
உடல் உழைப்பு செய்கிறவர்களுக்கும் ஒரு விரிவு ஏற்பட்டது. அதாவது தலைக்கும், கைக்கும் ஒரு விரிவு எனலாம். இது நிலப்பண்ணை முறை (Fedal mentality) கோட்பாடு வந்தபிறகு இது மேலும் தலை தூக்கியது. இதனால் தமிழகத்தில் 18 வகை தாழ்த்தப்பட்ட இனங்களுள் ஒன்றான நாவிதர்களிடம் அறுவை மருத்துவமும் , வண்ணா ர்களிடம் மகளிர் மருத்துவமும் சென்றடைந்தது. இதற்குச் சிறந்த (எ. கா) கொங்கு மண்டலச் சதகத்தில் இடம்பெறும் வயிற்றறுப்பு பிரசவம் செய்த நாவிதச்சி. இவள் கொங்கநாடு காந்தபுர மன்னனின் மகளுக்கு – குழந்தை குறுக்குவாட்டில் இருந்து வெளியே வராது இருந்ததினால் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைக் காப்பாற்றினாள் என்பது ஆகும்.

இதுபோல முதலாம் இராஜ ராஜ சோழனின் (கி. பி. 1016) கல்வெட்டின்படி
குந்தவை நாச்சியார் நிலம் வாங்கி அரையன் உத்தம சோழன் (ராஜேந்திர
சோழ பிரயோகத்திரையன்) ஆகிய அம்பட்டனுக்கு சல்லிய கிரியா
போகமாக (அறுவை மருத்துவ தொழில் விருத்தியடையச் செய்வதற்கான மானியம் )
வழங்கியிருப்பது தெரியவருகிறது.

“மூக்கிழந்தோர் மாற்று மூக்கு ஒட்டறுவை முறை , “ சமூகத்தினர் சற்று
அறுவறுப்புடன் நோக்கிய நாவிதர் கண்டுபிடிப்பே” என்கிறார் டி. டி, கோசாம்பி. மேல் குடிமக்களுக்கு அறுவை மருத்துவத்தில் பங்கு இல்லை. உடலை முதன்மைப் படுத்தியதால் தான் தந்திரர் இரசவாதம், இரசாயனம் போன்ற அறிவியலை வளர்க்க முடிந்தது. வைதீகர் தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின்மீது கவனம் செலுத்தவில்லை. ஆகையால் பிணங்களை வைத்து கீழ்சாதியினரே அறுத்து ஆராய்ந்தனர். ஆகையால் அறுத்தவனுக்கு ஊதியம் குறைவு, இது திருமுக்கூடல் கல்வெட்டு மற்றும் திருவரங்கம் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. நாவிதரே உலகெங்கும் அறுவையை ஆரம்பகட்டத்தில் செய்துள்ளனர் என்பது ஒரு கூடுதல் செய்தியாகும்.

மகப்பேறு மருத்துவம்

திருமந்திரத்தில் கருவில் தாய், தந்தை உயிர் அணுக்கள் எவ்வாறு கலந்து குழந்தை உண்டாகிறது என்பதை “புருடன் உடலில் பொருந்து மற்று, ஓரார் / திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது” உருவம் இரண்டாக ஓடி விழுந்தது” பெண்ணின் கருக்குழியில் ஆணின் ஜீவ அணுக்கள் ஓடி விழுந்து இரண்டாகும் என்பதை இன்றைய (Genetic) அறிவியலோடு ஒத்து நிற்பதை அறிய முடிகிறது.

அடுத்து “மோகத்தில் ஆங்கொரு முட்டை செய்தானே” என்ற வரிகள் இருவரது மயக்க
நிலையிலும் ஒரே ஒரு கருமுட்டையே வெல்லும் தன்மை கொண்டது என்பது இன்றைய மருத்துவ உண்மையைப் புலப்படுத்துகிறது.

கரு அதன் வளர்ச்சி பற்றி மாணிக்கவாசகர்

“மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்ததும்”

என்று 10 மாதம் கருப்பையில் ஏற்படும் கரு வளர்ச்சி நிலையை தம் போற்றி திருஅகவல்
பகுதியில் மிக நுட்பமாக விளக்குகிறார்.

பாரம்பரியக் கூறுகள்

“மெய்யோடிடையினும் உயிரியல் திரியா” (தொல்காப்பியம்)

இதில் உட்கருத்தாக உயிர் தத்தம் உடம்போடு இணைந்தாலும் அவ்வுயிரின் தன்மையில் இருந்து திரியாது. அதாவது உயிரின் பாரம்பரியக் கூறுகள் மாறாது (Hereditary Character) மற்றொரு இடத்தில்“ தந்தையர் ஒப்பமக்கள் ” எனப்படுகிறது. இது மரபு வழி பண்பு (Genetic Character) ஆகும்.

பாரம்பரிய பண்பியல்: சாயல் பிறக்கும் குழந்தையிடம் பதிந்துவிடும். பெற்றோர் + தாத்தா +முப்பாட்டனார் + மூதாதையர், என்பதை “ஏயம் கலந்த இருவர்தம் சாயத்துப் பாயும் கருவும் உருவும் எனப்பல . காயம் கலந்தது காணப்பதித்தபின்” என்று திருமூலர் கூறியுள்ளார்.

கருவளர்ச்சியில் ஆரம்பத்தில் மசக்கை கருவுற்ற தாய்க்கு ஏற்படும். இம்மாற்றம் “வாயா நோய்” என்று குறிப்பிடப்படுகிறது. இது முதல் மூன்று மாதங்களில் தோன்றும் மசக்கை ஆகும். இப்போது அப்பெண் மண், புளியைத் தேடுவர் (Picca). இது “பசும் புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்” (குறுந்தொகை)

“வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே”

என்றும் கூறப்பட்டுள்ளது.

கருச்சிதைவிற்கு ஊக்கமளிக்கக்கூடாது என்று சங்க காலத்தில் வற்புறுத்தப்பட்டது. மீறினால் அறம் அவர்களைத் தண்டித்துவிடும் என நம்பப்பட்டது. “மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் / உய்தி இல்லென அறம் பாடிற்றே” (புறம்)பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் குறைபாடு இன்றி பிறப்பதில்லை. கவை மகன் என்னும் ஒரவகை பிறவிக்குறைபாடு 10 இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும். இது வியப்பான பிறவியான சாயிமிய இரட்டையர்கள் ஆகும். “கவை மக நஞ்சு உண்டா அங்கு / அஞ்சுவல் பெரு / என் நெஞ்சத்தானே” (குறுந்தொகை)

பிரசவத்திற்குப் பிறகு எல்லோருடனும் உறங்கக் கூடாது. மகப்பேற்றுக்குப் பிறகு மகளிர் சிலநாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர். இதைத் தொல்காப்பியர் “புனிறு தீர் பொழுதின்” எனக்குறிப்பிடுவார்.

கருவியல் ‘ஆண் பெண் தோற்றம்’ பாலினக் கீற்றுகளும், பண்பினக்கீற்றுகளும் சேரும்போதுஆணா? பெண்ணா? என்று நிர்ணயிக்க முடியும். இதில் தவறு நேர்ந்தால் அலியாகிவிடும்.

“ஆண்மிகில் ஆணாகியும் பெண்மிகில்
பெண்ணாகவும் பூண் இரண்டும் ஒத்துப் பொருந்தில்
அலியாகும். ”

மருத்துவ மனைகள்: உள்ளத்திற்கும் உடலுக்கும் மருத்துவம் பெற மருத்துவமனை தேவை. சக்கரவாளக் கோட்டம். துயரங்களைத் துடைப்பதையே தொழிலாகக் கொண்ட துறவிகள் வாழ்ந்த இடம். இங்கு மன உளைச்சல் நீக்கப்பட்டன. இது “துக்கம் துடைக்கும் துகளரு மாதவர் / சக்கர வாளக் கோட்டம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு பொது இடம், உலக அறவி என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு அழைக்கப்பட்ட மடாலயங்களில் அன்னதானம் அபயதானம், ஓளடததானம், சாத்திர தானம் என தானங்கள் வழங்கப்பட்டன. இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது மருந்து இலவசமாக வழங்கப்பட்டது என்பது ஆகும்.

தஞ்சை மருத்துவமனைகள்:

தஞ்சை (சுந்தர சோழ விண்ணாக ஆதுலசாலை) கும்பகோணம் திருவிசலுர்,வேம்பத்தூர் –திருப்புகலுர் ஆகிய ஊர்களில் மருத்துவமனைகள் இருந்துள்ளன. இராசேந்திரன் கல்வெட்டின்படிநோயாளி ஓய்வெடுக்க சத்திரமும், அங்கு சத்துணவும் இலவசமாக வழங்கப்பட்டதும் அறியப்படுகிறது. மருத்துவமனைக்கு ஓர் எடுத்துக்காட்டாக திருமுக்கூடலில் ஓர் மருத்துவமனை இருந்துள்ளதை 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டின்படி அறிய முடிகிறது. 15 படுக்கைகள், ஒரு மருத்துவர், ஒரு அருத்துவர், இரு உதவியாளர், இரு பெண் பணியாளர், ஒரு நாவிதர், ஒரு நீர் கொணர்வோர் என்று அம்மருத்துவமனையில் பணிபுரிந்ததை அறிய முடிகிறது.

சித்த மருத்துவத்தின் சிறப்பு என்ன?

நாடி பிடித்துப் பார்த்து நோய் இன்னது என அறியும் முறை சித்த மருத்துவத்திற்கே உரியது.தனித்தனி உலோக வகைகளை மாற்றும் இராசாயன முறை இம்மருந்திற்கு மட்டும் உரியது. இதுபோல 1. உப்பு, 2. உலோகம், 3. பாதரசம் ஆகியவைகளை மருந்தாக்கும் முறைகளைக் கூறுவது சித்த மருத்துவம்.

சித்தர்களின் கொள்கை மக்கள் சாகாமல் நீண்டகாலம் வாழலாம் என்பதே. இதற்கான
பயிற்சியும், காயகற்பமும் நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

சித்தமருத்துவம்: மணி, மந்திரம் மருந்து ஆகியவைகளை உள்ளடக்கியது. மணியை
இரசமணி(பாதரசம்) என்று கூறுவர். மாந்தீரிகம், கோரக்கர் மாந்தீரிகம், கருவூரார் அஷ்டமாசித்து போன்ற நூற்களில் காணப்படுகிறது.

மருந்து உடலுக்கும் ‘மந்திரம் மனதுக்கும்’ மணி ஆன்ம நலத்திற்கும் பயன்படும். இம்மூன்றும் இணைந்து செயல்படுவதே மரணமில்லாப் பெருவாழ்வு. இவற்றில் மணி, மந்திரம் ஆகியன இக்காலத்தில் மறைந்து கிடக்கின்றன. மணி, மந்திரம், மருந்து பக்தி இலக்கிய காலத்தில் இருந்துள்ளதை அப்பரடிகளால் அறிய முடிகிறது.

“மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி
தீராத நோய் தீர்த்தருள வல்லான் தன்னை”

என்ற வரிகள்மூலம் அறியலாம்.

இக்காலகட்டத்தில் இறைவனே எல்லாம் என்பதனால் – சித்தர் மரபு காக்கப்படாமல்
போயிற்று.சித்தர்கள் தாழ்ந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக்க முடியும் என கூறி அதற்கான மறைமொழியையும் கூறியுள்ளனர். இதில் ஒன்று – “சிவாய நம எனில் செம்பு பொன்னாகும்” என்பது. இவர்கள் யோகம் மூலம் மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தவும் அறிந்திருந்தனர்.

தமிழர் மருத்துவ மாண்பை அறிந்த மன்னர் சரபோஜி “சரபேந்திரர் ரத்னாவளி” எனும் நூலை 5000 மருத்துவக்குறிப்புகளுடன் புலவர்கள் உதவியுடன் எழுதியுள்ளார். ஐரோப்பியர்களும்இதேபோன்ற செயல்களைப் பலவிதங்களில் செய்திருப்பது வியப்பை அளிக்கிறது. (எ. கா. )வீரமாமுனிவர் நசகாண்டம், ரண வாகடம், அனுபோக வைத்திய சிந்தாமணி என்ற நூல்களைஎழுதியுள்ளார். இது வாகடத்திரட்டு என்று ஒரு நூலாக 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தரங்கையில் பணிபுரிந்த பாதிரியார் கிரண்லர், அகஸ்தியர் 200 எனும் நூலை ஜெர்மானியில் மொழிபெயர்த்து ‘தமிழ் மருத்துவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். இதுபோலவே தியோடர் லுட்விச் அகஸ்தியர் சுவடிகளை மொழிபெயர்த்துள்ளார். இதை போலவே ஒயிட்லா அன்சிலியும் அகஸ்தியர் வைத்தியம் 500 எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூலை அன்றைய காலனி அரசு 1813இல் வெளியிட்டுள்ளது.

வள்ளலார் 485 மூலிகைக் குறிப்புகளை எந்தெந்த உலோகத்துடன் கலந்து மருந்து தயாரிக்க வேண்டும் என்று சஞ்சீவ மூலிகை என்ற உரைநடை நூலில் விளக்குகிறார்.மேற்கண்ட குறிப்புகளின் மூலம் கொடிகட்டி பறந்த தமிழனின் மருத்துவ மரபுச் செல்வங்களை அறிய முடிகிறது என்றால் அது மிகையில்லை.

காக்கை சிறகினிலெ இலக்கிய மாத சஞ்சிகையிலிருந்து….

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *