நினைவுகள் அழிவதில்லை-தலைவர் தங்கர்(கம்பர்மலை)

நினைவுகள் அழிவதில்லை

அமரர் வடிவேலு தங்கராஜா

இது அமரராகிவிட்ட ஒருவரின் கண்ணீர் அஞ்சலியல்ல,

நினைவு அஞ்சலியும் அல்ல.


வாழ்வில் பல சாதனைகளை வெற்றியாக்கிப் பெருமை பெற்ற ஒரு சமூகத் தொண்டனின் நினைவுச் சிதறல்கள்!


சாதாரண ஒரு விவசாயியாக வாழ்க்கை முழுவதும் சீரியமுறையில் செயலாற்றி மறைந்த ஓர் ஊர்ப் பிரமுகரின் வாழ்வியல் குறிப்புகளென்று வேண்டுமானால் கொள்ளலாம்.
1957 ஆம் ஆண்டு கம்பர்மலைத் தோட்டங்களில் வெங்காய அறுவடை முடிந்துவிட்ட பங்குனிமாதம் என்று நினைவு இருக்கிறது. புகையிலைத் தோட்டங்களில் பசுமை வீற்றிருந்த ஒரு இனிமையான பிற்பகல், நேரம் சுமார் 3 மணி இருக்கும். என்றாலும் வெயில் கொளுத்தித் தள்ளியது. இளைஞரும் நடுத்தர வயதினருமாகிய சுமார் முப்பது முப்பத்தைந்து பேர், நெற்கொழு வைரவர் கோயில் வடக்கு வீதியில் வடபுறமாகக் கோயில் மடத்தை ஆக்கிரமித்த படி நாலா திசைகளிலும் கிளை பரப்பி மாதளிர்த்து நின்ற அந்தக குளிர்தரு ஆலமர நிழலில் சிரிப்பும் கும்மாளமுமாக அமர்ந்திருக்கின்றனர்.
கோயில் பிரதான வாயில் பக்கமாக தோழர் முத்துலிங்கத்தின் தலை தெரிகின்றது.
கையில் கனதியான இரண்டு C.R.கொப்பிகள். “எங்கேயப்பா மற்றவர்கள்?” என்று முத்துலிங்கத்திடம் ஏகோபித்த குரலில் பலர் கேட்கின்றனர்.
பின்னே வந்த இராஜகோபால், குகன், தம்பிப்பிள்ளை, இரத்தினசாமி முதலியோர் “எல்லோரும் வருகின்றார்கள். தோட்ட வேலைகளை விட்டுட்டுத்தானே வரவேண்டும்?” என்கின்றார்கள். “வைத்திலிங்கம் எங்கே?” என்ற அடுத்த கேள்வி. “வைத்தி, தங்கரையைக் கூட்டிக்கொண்டுவர கரந்தண்ணிப் பக்கம் போகிறான்”என்று இராஜகோபால் தன் திக்கு வாயால் பதில் அளிக்கின்றார்.
இது சொல்லி வாய்மூடவில்லை. நெற்கொழு வடக்கு வீதிப் பக்கமாகத் தலைவரும் வைத்தியும் தம்பையா வாத்தியும் கூட்டம் கூடும் இடத்தை வந்தடை கின்றார்கள்.
வைத்தி வந்தவர்களை எண்ணிப் பார்க்கின்றார். ஐம்பது பேருக்குக் குறையாது. தோளில் கிடந்த மண்வெட்டியை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, வியர்வையில் பளபளக்கும் தன் மொட்டம் தலையையும், கருமை நிற உடம்பில் வழியும் வியர்வையையும் தன் தோளில் கிடந்த சால்வையால் துடைத்தபடி தலைவர் தங்கர் உட்காருகின்றார்.
அவர் பக்கத்தில் நெஞ்சை நிமிர்த்தி மல்யுத்த வீரனைப் போல் நின்ற தோழர் வைத்தி “சரி. இனி கூட்டத்தைத் தொடங்கலாம்தானே தங்கண்ணை ?” என்று தலைவரை விளிக்கின்றார்.
ந.சந்திரன் எழுந்து நின்று தேவாரம் பாட மற்றவர்களும் மௌனமாக எழுந்து நிற்கின்றார்கள்.
கம்பர்மலைக் கிராம முன்னேற்றச் சங்கம் அன்று ஏகோபித்துத் தெரிவு செய்த தலைவர் வடிவேலு தங்கராஜா அமரராகும் வரை எங்களூர்த் தலைவராகவே நின்றார். தலைவரென்ற பெயரையும் அமரத்துவம் பெற வைத்துவிட்டார்.
ஆம், தங்கராஜா என்ற இயற்பெயர் தலைவரென்ற காரணப் பெயராய் நிலைத்துவிட்டது.
அந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. சனசமூக நிலையம், நூல்நிலையம், மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், பள்ளிக்கூடம், உப தபாற்கந்தோர். டிஸ்பென்சரி என்று கம்பர் மலையை ஒரு மாதிரிக் கிராம மாக்க எடுத்த முன் நடவடிக்கையே அது. எனினும் அன்றைய தீர்மானங்களில் பாடசாலை அமைத்தலே முக்கியமாயிற்று.
1956 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பொன். கந்தையா பருத்தித்துறை M.P.யாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இலங்கைத் தமிழ் மண்ணில் ஒரு கொம்யூனிஸ்ட் அபேட்சகர் பெற்ற முதல் வெற்றி அது!
அன்றிரவு தேர்தல் முடிவைச் சுமந்து வந்த வாகனங்கள் வன்னிச்சி கோயிலைத் தாண்டி பாரதி வீதியில் இறங்கியதும் “தோழர் பொன். கந்தையாவுக்கு ஜே! தலைவர் தங்கராஜாவுக்கு ஜே!” என்ற கோசங்களால் அதிர்ந்தது ஊர் துள்ளிக் குதித்தது! பட்டாசுகள் வெடித்தன.

அதற்கு முந்திய பொதுத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பெரும் தூணாக நின்று செயற்பட்ட தலைவர் தங்கராஜாவை இன்று கொம்யுனிஸ்ட் தோழர்களாக நின்ற இளைஞர்கள் தோளில் சுமந்து ஊர்வலம் வந்தனர்! “மார்க்சிஸ்டுக் கட்சியினால் மாண்பு பெற்ற தங்கரைத் தம்காழ்ப்பால் இகழ்ந்துரைக்கக் காத்திருந்தார் ஏர்க்காதினித் துவேசம் எல்லாரும் சமமென்ற போக்கால் புதுவுலகம் பூமியிலே கண்டிடுவோம்” – என்று ஆ.தம்பையா வாத்தியார் ஒரு பாட்டுக் கூடப் பாடினார். இவ்விடத்தில் ஒரு முக்கிய குறிப்பை எழுதவேண்டியுள்ளது.
சமூகத்தில் முழுவாழ்வியலையும் ஊடறுத்துள்ள அவலங்களையும் ஒடுக்குமுறைகளையும் நேரடியாக நிரூபிக்கும் சூட்சுமத்தை யாழ்ப்பாணச் சாதி அமைப்பில் காணலாம். இது சமூக விஞ்ஞானிகளின் கருத்து.
இந்து சமயத்தில் வர்ணாச்சிரம தர்மமும் கோட்பாடுகளும் இதற்குத் துணை நின்றன.

இவற்றைத் தாண்டி வர்க்கப் பிரிவினைக்குள் சாதியின் வேர்கள் ஆழமாகப் பதிந்துள்ளதை பொதுவுடமைவாதிகள் எடுத்துக்காட்டுகின்றனர். இன்று உலகெங்கும் பரந்து சென்று தங்கள் வாழ்விடங்களைத் தேடிக் கொண்டுள்ள யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்கள் உடலில் ஓடுகின்ற இரத்தத்தில் இந்த உணர்வை இன்னமும் தேக்கியே வைத்திருக்கிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
தமிழர் திருமண விளம்பரம் அதற்கு ஓர் உதாரணம். பருத்தித்துறை எம்.பியான பொன், கந்தையா அளித்த உறுதியில் எங்களூரில் ஒரு மகத்தான புரட்சியே நடந்தது.
அதற்கு அன்று பிரதமராக இருந்த பண்டாரநாயக்காவும் கல்வி அமைச்சராக இருந்த தகநாயக்காவும் அனுசரணையாக இருந்தனர்.
இதனால் சாதி அரக்கனின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு ஒப்பில்லாத சமுதாயம் ஒன்று இங்கே உருவானது.
ஆமாம், யாழ்ப்பாண மண்ணில் இன்றுவரை எங்குமே நடவாப் புதுமையாய் யா/கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை எழுந்தது.
சாதி, சமூக வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு இந்த ஊர்மக்கள் கலைக்கோயிலான பாடசாலையை அமைத்து வெற்றிகண்டனர்.
அமரர் வடிவேலு தங்கராஜா இம்மகத்தான முயற்சியின் சூத்திரதாரியாக தலைமை வகித்து நின்றார்.
இதேகாலத்தில் பொன். கந்தையாவின் உதவியுடன் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் வரணி, மந்துவில், மட்டுவில், சரசாலை, கைதடி, வெள்ளாம் பொக்கட்டி, குட்டியப்புலம், கோப்பாய், கட்டுவன்புலம், காங்கேசன்துறை, வசந்தபுரம், மானிப்பாய், சண்டிலிப்பாய், சுதுமலை, புலோலி, இமையாணன். புத்தூர் போன்ற இடங்களிலும் பாடசாலைகளை அமைத்தது. ஆனால், அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு சமூகப் பிள்ளைகளுக்கான பாடசாலையாகவே அமைந்தன. கம்பர்மலைப் பாடசாலை மட்டும் ஒப்பில்லாத பாடசாலை, ஊருக்கெல்லாம் புதுமை என்ற பெயரைத் தனதாக்கிக்கொண்டது.

20.01.1958 அன்று கம்பர்மலைப் பாடசாலை திறப்புவிழா.அது பெரிய விழா.பேரார்வம் கொண்ட மக்கள் திரண்டு நின்ற விழா. 57ஆம் ஆண்டு இறுதியில் தலைவர் தங்கராஜாவின் மனதில் தோழர் வைத்திலிங்கத்தின் உதவியுடன் உருப்பெற்ற இப்பாடசாலை, முதலில் “மாத்தரா வளவு” என்னும் காணியில் 60 அடி நீளக் கிடுகுக் கொட்டிலாக உருப்பெற்று,
பின்னர் கம்பர்மலைப் பெரியார் வே.வெங்காடசாலம் (கிட்ணர்) அன்பளிப் பாகத் தந்த விறாச்சியின் விசாலமான காணியில் கிடுகுக் கொட்டகைகளாக மாற்றம் பெற்று, முடிவில் அழகான இரண்டு கட்டடங்களாக மிளிர்ந்தது.
கல்லும் கலட்டியுமாக இருந்த நிலப்பரப்பை உடைத்து, கிண்டி, சீர் செய்து, பற்றை களை அகற்றி அழகு செய்த பெரும் முயற்சியில் ஊர் மக்கள் அளித்த சிரமதானத் தொண்டுகள் மறக்கமுடியாதவை. எவ்வேளைகளிலும் தலைவர் பிரசன்னமாயிருப்பார்.
20.01.58 உண்மையில் மறக்கமுடியாத ஒரு நாள். ஊர் மக்கள் குதூகலம் நிறைந்தவர்களாக இருந்த வேளை, பொன் கந்தையாவே பாடசாலையைத் திறந்து வைக்க வந்திருக்கின்றார். கல்வி அதிகாரிகளும் பொலிஸாரும் நிற்கின்றனர். தலைவர் மட்டும் அங்கும் இங்குமாக நடைபோடுகின்றார். இளைஞர் சிலர் பாடசாலையைச் சுற்றி ஓர் உசார் நிலையில் நிற்கின்றனர். பாடசாலை வாசலின் நேர் எதிரே வைக்கப்பட்ட மேசை அழகான கம்பள விரிப்பினால் ஜொலிக்கிறது. அதன் மேல் பூரணகும்பம். இரு மருங்கும் குத்துவிளக்குகள். தாம்பாளத்தில் சந்தனம், குங்குமம், கற்கண்டு, பன்னீர்ச் செம்பு, பழம், பாக்கு, வெற்றிலை, பலவித பூக்கள். திறப்புவிழா நேரம் நெருங்குகின்றது. பெண்கள் மத்தியில் ஒரு மூதாட்டி மெல்லப் பூரண கும்பத்தின் அருகே வருகின்றார். கண்மூடி விழிக்கும் நேரத்துள் கும்பமும் குத்துவிளக்குகளும் அப்பெண்ணால் தட்டி நிலத்தில் விழுத்தப்படுகின்றன.
பொலிஸாார் திடீரென முன்னே வருகின்றனர். கூடியிருந்த மக்கள் கொதித்தனர். தலைவர் சிரித்தபடி “இவ்வளவுதான். இதற்கு மேல் இங்கு ஒன்றுமே நடவாது.தயவு செய்து எல்லாரும் அமைதியாய் இருங்கள்” என்று கூற பூரண கும்பம் மீண்டும் வைக்கப்படுகின்றது. திறப்புவிழா திட்டமிட்படி மிக இனிதாக நடந்து முடிகின்றது.
ஒரு மணி நேரத்தின் பின்புதான் எதிரிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்ட யாழ். நகரைச் சேர்ந்த காடையர்கள் நால்வர் நமது இளைஞர்களிடம் கைதிகளாகப் பிடிபட்ட உண்மை தெரியவருகின்றது.
தலைவர் அக்காடையர்களுக்கு மன்னிப்பு மட்டுமல்ல, வழிச்செலவும் கொடுத்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். இரவு முழுவதம் போதை ஏற்றப்பட்ட அவர்கள் தலைகுனிந்தபடி தப்பிச் சென்றார்கள்.
சமூகவாதியான தலைவர் தங்கராஜா ஊரின் முன்னேற்றகரமான எல்லாப் பணிகளிலும் பொறுப்பான பதவிகளை மிகச் சிரத்தையோடு ஏற்று நடத்தியமைக்குப் பல சான்றுகள் உண்டு.
அதனால் பெரும் அரசியல்வாதிகளான பொன். கந்தையா, மு.சிவசிதம்பரம், க.ஜெயக்கொடி, கு.வன்னியசிங்கம், த.இராசலிங்கம், எஸ்.ஜெயசிங்கம் முதலிய பிரமுகர்களோடு மிக நெருக்கமான உறவுகளை என்றும் அழியாது வைத்தி ருந்தார்.
குறிப்பாக பொன். கந்தையாவோடு அவர் வைத்திருந்த குடும்ப உறவு மிகமிக உன்னதமானது.அந்த உறவு பின்னர் திருமதி கந்தையாவுடனும் அவரது மகள் Dr. ராதா, மருமகன் Dr.தம்பிராஜா என்று தொடர்ந்து நீடித்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இதுபோல் வ.பொன்னம்பலம், எழுத்தாளர் K.டானியல், வல்வை நகரசபைத் தலைவர் A.திருப்பதி, K.நவரெட்ணம் முதலியோர் தலைவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
ஊரில் நடந்த அடி தடிப் பிரச்சினைகளிலும் சரி, குடும்பப் பிரச்சினைகளிலும் சரி, கோஷ்டிச் சண்டைகளிலும் சரி அவர் பிறர் அழைப்பில்லாமலேயே தலையிட்டு சமாதானத்தை நிலைநாட்ட எப்போதும் பாடுபட்டார்.
எங்கள் ஊர்ச்சண்டியர்களை அடக்கும் மகுடி அவர் வார்த்தைகளில் வீற்றிருக்கும். கோஷ்டிச் சண்டைகளைத் தட்டி அடக்கி வைத்து – தணியவைக்கும்

வாத்சல்யமான அணுகுமுறை அவருக்கே உரித்தான சொத்து. கணவன் – மனைவி, அண்ணன் – தம்பி, தகப்பன் பிள்ளை என எவர் பிரச்சினையானாலும் சாமர்த்தியமாகத் தீர்த்து வைப்பார்.
நம்பி வந்தவர்களை நடுவழியில் விட்டுவிடாத பெரும் பண்பு அவருடன் பிறந்த குணம்.கம்பர்மலையில் ஒரு துர்ப்பாக்கியமான துயரமான கொலைச் சம்பவம் நிகழ்ந்தது. முன்யோசனை எதுவுமில்லாது ஒரு கணப்பொழுதில் நடந்த அநாவசிய வெறியாட்டம் தமிழ் மண்ணுக்கும் அப்பால், நீதி விசாரணைக்காக எடுத்துச் செல்லப்பட்ட அந்தக் கொலை வழக்கில், தன் இனம், தன் உறவு, தன் சமூகம் என்ற உணர்வுகளைத் தூக்கி வீசிவிட்டு பாதிப்புக்குள்ளான அச்சிறு பான்மையினருக்காக கண்டி வரை சென்று துணை புரிந்தவர் தலைவர்.
ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து, விவசாயியாகவே வாழ்ந்து, சமூகத்திற்கான எல்லாத் தொண்டுகளிலும் ஈடுபட்டு, கல்விமான்களினாலும், அரசியல் தலைவர்களினாலும், சட்ட நிபுணர்களினாலும் சமூகப் பெரியார்களினாலும், பொதுமக்களினாலும் “தலைவர்” என்று மதிக்கப்பட்ட அமரர் வடிவேலு தங்கராஜா அவர்கள் எல்லார் உள்ளங்களிலும் அழியா நினைவுகளோடு என்றும் அமரராய் நிற்பார்!

  • க.தங்கவடிவேல் ஓய்வுபெற்ற ஆசிரியர்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *