சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 7

எலியும் பூனையுமாக சண்டைப்பிடித்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி சாத்தனும், பெரிய கணக்குப்பிள்ளை மகாலிங்கமும் இப்போது நண்பர்களாகி விட்டனர்.

தங்களுக்குள் அடிக்கடி நேரும் சர்ச்சைகளை மறந்து, சின்னச்சின்ன தகராறுகளை விட்டுக்கொடுத்து, ஒன்றாக இருக்க பழகிவிட்டார்கள்.

துரை போப் கொலையுண்டதால் இந்த அதிசயம் நிகழ்ந்தது எல்லாம் வல்லவர் என்று தாம் நினைத்துக் கொண்டிருந்தவர்க்கே இந்த கதி என்றால் தம்முடைய நிலை என்னவாகும் என்பதில் ஏற்பட்ட அச்சம்.

தன்னுடைய தொழிலைப் பற்றிய அச்சம் சாத்தன் கங்காணிக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது.

நடேசய்யர் இலங்கை சட்ட சபையில் பெரிய கங்காணிகளைப் பற்றி அவர்களின் ராஜ்யங்களைப் பற்றி ஒரு கருப்பு ஓவியமே தீட்டி விட்டிருந்தார்.

பெரியகங்காணிகளின் கீழுள்ள தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் பெயர்களை துரை பிரட்டுக்கு மாற்றுவதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் துரை பிரட்டுக்கு மாறத் தொடங்கினர்.

ஆனைமலையிலும் ஒரே நாளில் தோட்டபிரட்டுக்கு முந்நூறு தொழிலாளர்கள் மாறுவதற்கு பெயர் கொடுத்தனர். அன்று தான் தொழிலாளர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்த சங்கதி வெளியானது.

பெரிய கங்காணியும் அவருக்கு வேண்டிய பத்து குடும்பத்தினரும் அதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. பெரிய கணக்கப்பிள்ளை தோட்டப்பிரட்டு ஆட்கள் மாறுவதை இரகசியமாக ஆதரித்தார். கீரியும்

பாம்புமாக இருந்த சாத்தனும் மகாலிங்கமும் இப்போது ஒன்றாக இணைந்து செயல்படவேண்டிய நிர்பந்தம் உண்டானது.

தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து தேயிலைத் தோட்டத்துக்கு முதன்முதலாக வந்த விவசாய மக்கள், தம்மை அழைத்து வந்த கங்காணிமாரைக் கடவுளுக்குச் சமமாகக் கருதினர்.

அடுத்த வேளைக் கஞ்சிக்கு ஆளாய் பறந்த தமது ஊரை விட்டு, தேயிலை தோட்டத்துக்கு அழைத்து வந்து மூன்று வேளையும் வயிற்றுப் பசியை போக்கிய அவரை எப்படி மறக்க இயலும்? அவரின் பிரட்டிலிருப்பதை தொழிலாளர்கள் பெருமையாக நினைத்தனர். அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாகவுமிருந்தது.

நான் பெரிய கங்காணியின் ஆள் என்று கூறிக் கொள்வது அந்த ஏழைமக்களுக்கு ஒரு வசதியை உண்டு பண்ணியது. தங்களுடைய ஒவ்வொரு நாள் உடல் உழைப்புக்கும், தோட்ட நிர்வாகம் நான்கு சதம் பென்ஷ் காசாக வசூலித்து, கங்காணிக்கு கொடுக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அப்படி அறிந்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஆமைகளாக அடங்கிப் போனார்கள்.

நடேசய்யரின் பணி அப்போதுதான் தொடங்கியது, அய்யருக்கு பணம் சம்பாதிக்கும் ஆசையிருந்தது.

பத்திரிகைகள் நடத்தினார், நூல்கள் வெளியிட்டார், பணம் என்ற பெயரிலே தபால் கல்வி போதித்தார், போதனா சாலைகளில் சேர்ந்து போதனா ஆசிரியராக இருந்தார்.

எல்லா முயற்சிகளும் கை நழுவிப் போயின.

ஆனால் தோட்டப் பகுதிகளில் இந்திய மக்களைக் கொண்டே இந்திய வம்சத்து பெரியகங்காணிகள் லட்சம் லட்சமாகப் பணம் குவிப்பதைப் பார்த்தார்.

அவரால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை.

அவர் பெற்ற கல்விக்கு என்ன அர்த்தம் இருக்கமுடியும், சட்ட சபை உறுப்பினராக தாமிருப்பதால் யாருக்குப் பிரயோசனம்? துரை பிரட்டை தோட்டங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவருக்கு யோசனை பிறந்தது இப்படிதான்.

இது நாள்வரை கங்காணியுடன்தான் வேறு தோட்டங்களுக்குச் சென்று பெயர் பதிய வேண்டும், கங்காணி விலகும் போது தாமும் தோட்டம் விட்டுச் செல்லவேண்டும் என்ற நிர்ப்பந்த மிருந்தது. இப்போது தம்மைப் பிடித்திருந்த அந்த விலங்குகள் அகற்றப் பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பம் எத்தனைப் பொன்னானது?

தமது பிரட்டைவிட்டு முந்நூறு தொழிலாளர்களும் துரை பிரட்டுக்குப் போன செய்தி அறிந்து சாத்தன் கங்காணி மயங்கி விழுந்தார்.

கணக்கப்பிள்ளையின் கைங்கர்யம் இதில் ஏதுமிருக்குமோ என்று ஆரம்பத்தில் அவருடன் மோதியது அதனால்தான். இதற்கெல்லாம் காரணம் வீராசாமியும் வேலாயுதமும் என்று அறிந்த போது அவரால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை.

இதை அவர்கள் ஏன் செய்ய வேண்டும்?

வீராசாமி இருபத்திரண்டு வயது நிரம்பியவன். இளைஞன். வாலிய வயதில் வாய்துடுக்கு மிகுந்தவன். விஷய ஞானம் உள்ளவன்.

நல்லது கெட்டது பார்த்து பழகத் தெரிந்தவன். சகதொழிலாளர்கள் மீது பிரியங்கொண்டவன்.

நான் தான் அவனையும் வேலாயுதத்தையும் ஸ்டோரில் வேலைக்குச் சேர்த்தேன். பெரிய டீமேக்கர் காசிமுடன் கீழ்படிந்து நன்றாக வேலை செய்தவர்கள். நாளாவட்டத்தில் அவர்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படத் தொடங்கின.

மூன்று மாதங்களுக்கு முன்னர் பெரிய – மேக்கர் காசிம்புடன் ஏற்பட்ட தகராறை நான் தான் தீர்த்து வைத்தேன்.

‘மகாலிங்கம் நீங்க போயிட்டு ஒரு நோட்டம் விட்டு வாங்கள்.’ போப் துரை கொலை செய்யப்பட்டதால் ஏற்படப்போகும் பிரச்னையில் நாம் ஒதுங்கியிருக்க முடியாது.

பெரிய கங்காணி சாத்தன் பேசிமுடித்தார்.

“சரிங்க ஐயா.” கூறிவிட்டு மகாலிங்கம் சனங்களின் குடியிருப்புகளிருக்கும் லயத்துப்பக்கம் நகர்ந்தார்.

சாத்தன் கங்காணியின் முப்பது வருட சர்வீசில் இப்படி ஓர் அசம்பாவிதம் இதுவரையில் நடந்ததில்லை.

வீராசாமியும் வேலாயுதமும் என்ன ஆனார்கள்? எங்கு போனார்கள்?

அதை அறியும் தீவிரமுயற்சியில் இறங்கினார்.

ஸ்டோர் காவற்காரன்தான் துரையை கடைசியாக உயிரோடு பார்த்தவன்.

காரில் பங்களாவுக்குத் திரும்பி வரும்போது அவன்தான் கேட்டை திறந்து மூடியவன்.

அரைமணி நேரங்கழித்து அவன்தான் அவரை, அடிபட்டு உயிர் போகும் நிலையில், ரோடில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டிருக்கிறாள்.

பாய் இனத்தைச் சேர்ந்த அந்த காவற்காரன் உயிர்கொலைக்கு அஞ்சாத சாதியைச் சேர்ந்தவன்.

எந்த இரவு நேரத்திலும் தன்னந்தனியனாக தோட்டம் முழுக்க சுற்றிவரும் வல்லமை அவர்களுக்குண்டு, கையில் ஒரு லாந்தரும், தோளில் ஒரு கோடரி கம்புமாக அவர்கள் மணக்காவலில் ஈடுபடுவதுண்டு.

ஆப்கானிஸ்தியர்களான அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் முதலாம் உலகயுத்தத்துக்குப் பின்னர் தேயிலைத் தோட்டங்களில் காவல் வேலைகளுக்கு அதிக அளவில் சேர்க்கப்பட்டனர்.

தோட்ட மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்தை அவர்கள் தான் ஏற்படுத்தினர். தோட்டங்களில் தொழில் கிடைக்காத மற்றைய பாய்கள் நகர்ப்புறங்களில் வட்டிக்குப் பணம் கொடுப்பதை நடத்தினர்.

சம்பளத்தினத்தன்று சம்பளவாசலில் பாய்மார்களைக் காணலாம். சம்பள வாசலில் வைத்தே தமக்குரிய வட்டிப் பணத்தை தொழிலாளர்களிடமிருந்து பிடித்து எடுத்துக் கொள்ளும் திறமை அவர்களுக்கிருந்தது.

பெரிய கங்காணி சாதுர்யமாக தமக்குரிய பென்ஸ் காசை செக்ரோல் மூலம் எடுத்துக் கொள்வார். பாய்மார்கள் லாகவமாக சம்பளத்து வாசலில் நின்று கொக்கு போல பிடுங்கி எடுத்துக் கொள்வர்.

இரண்டு பணவிழுங்கி கழுகுகளிடமிருந்து தோட்டத்து மக்களுக்கு விமோசனம் எப்போது வரும்?

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொடுமையை எதிர்ப்பதற்கு இந்த மக்களுக்கு இன்னும் வழிபிறக்கவில்லை. தொழிற்சாலை காவல் காரனால் நடந்ததை முழுமையாகக் கூற முடியவில்லை – விளக்க அவனால் முடியவில்லை. தொழிலாளர்களின் யூனியன் சம்பந்தமான விஷயங்களில் அவனுக்கு ஈடுபாடு இருத்ததில்லை.

அரை மணி நேரத்துக்குள் நடந்து முடிந்துவிட்ட நாடகத்தின் கொடூரம் அவனைப் பொறுத்தமட்டில் ஒருசினிமாவைப் போல்தானிருந்தது.

சாத்தன் கங்காணியார் கடந்த சில மாதங்களாகவே குழம்பிப் போயிருந்தார் என்றாலும் கலங்கிப் போகவில்லை. அவரது முப்பது வருட சேர்வீசில் ஒரே தோட்டத்தில் தான் தொழில் பார்க்கிறார். இந்தக் காலத்தில் அவருக்கு வந்து குவிந்த பென்சு காசு கொஞ்ச நஞ்சமல்ல. பல வட்சம் சேரும்.

ஆனைமலை தோட்டத்திலேயே தொடர்ந்து இருந்த காரணத்தால் புசல்லாவை டவுனில் சில கடைகளை வாங்கிப்போட்டிருக்கிறார். ஒரு புடவை கடை, ஒரு அடைவு கடை, இரண்டு சில்லறை சாமான்கள் கடை.

தோட்டத்திலேயே ஒரு ஏக்கர் நிலத்தை தன் சொந்தப் பெயரில் பதிவு செய்யும் பொருட்டு போப் துரையிடம் கேட்க நினைத்திருந்தார். அதற்குள்ளாக நேற்றிரவு இப்படி நடந்துவிட்டது. இச்சம்பவம் நானிருக்கும் போது தோட்டத்தில் எப்படி நடந்தது என்று அவருக்கே விளங்கவில்லை.

பின்வேறு யார் நம்புவார்கள்?

தன் மீது போலிசாருக்கு சந்தேகம் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்.

வீராசாமி, வேலாயுதம், அய்யம் பெருமாள், ராகவன், சாத்தய்யா, மெய்யன் ஆகிய ஆறு பேரின் நேற்றைய நடவடிக்கைகளை துலாவலானார்.

மகாலிங்கம் கணக்கப்பிள்ளை வேண்டிய தகவல்களைத் திரட்டிக்கொண்டு வந்தார்.

டோபி லயம் என்ற பெயர் சூட்டப்பட்ட லயம் தான் ஸ்டோருக்கருகே அமைந்துள்ளது. வேலாயுதத்துக்கு அந்தலயத்தில் தான் காம்பரா ஒதுக்கப்பட்டிருந்தது.

வேலாயுதத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஒருவர் அறிந்திருக்காவிட்டாலும் அவனைச் சந்திப்பதற்கு அங்கு வருபவர்களை யார் யாரென்று கண்டுகொள்ள முடியும்.

அப்படி பார்க்கையில் அவனுடைய நெருங்கிய நண்பர்களென்று மெய்யன், அய்யாசாமி, வீராசாமி என்று சிலரைத் தான் கூறமுடியும்.

அவர்கள் தான் அனுதினமும் அந்தி வேளையில் அங்கு கூடி கதைப்பார்கள், இரவு நேரங்களில் ஒன்றாக வெளியே செல்வார்கள். ஞாயிற்றுக் கிழமையானதும் பக்கத்துடவுனுக்குப் படம்பார்க்க போவார்கள்.

நேற்று வழக்கத்துக்கு மாறாக மாலை வேளையில் அவன் வீடு பூட்டியேகிடந்தது. பின்னர் அந்திக் கருக்கலில் அவன் காம்பராவில் பேச்சு சத்தம் கேட்டது. |

வழமையாக வீட்டிலிருக்கும் போது வேலாயுதத்துக்கு அடுத்தக் காம்பராவிலிருக்கும் ஜெபமாலை அப்பு பியானோ வாசிப்பார், அவர் வாசிப்பதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இருந்திருந்து அங்கிருந்து புல்லாங்குழல் இசைக்கும் தோட்டத்தில் பியானோ வாசிக்கவும் புல்லாங்குழல் இசைக்கவும் பங்களாவிலிருக்கும் சிலருக்குத் தான் முடிந்திருக்கிறது. தோட்டத்து வாலிபர்கள் அதை லயித்துக் கேட்பார்கள். துரைபங்களாவிலிருந்து நேரத்துடனேயே, லயத்துக்கு வந்த ஜெபமாலை நேற்று இரவு ஏழு மணிக்கே வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.

விசாரித்ததில் துரை அடுத்த தோட்டத்துப் பங்களாவுக்கு இரவு தீனிக்கு போய்விட்டார் என்ற சங்கதி வெளியானது. விடிந்து வெகுநேரமாகியும் வேலாயுதத்தின் வீடு பூட்டியே கிடந்தது. காம்பரா பூட்டு பூட்டபட்டே கிடந்தததை யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை.

போலீஸ் வந்துதிறந்து பார்த்த போது தான் அந்த பூட்டு திறந்து கொண்டது.

மூன்று காம்பராக்கள் தள்ளியிருந்த காம்பராவிலிருந்த புவனேஸ்வரியும், அவளது அண்ணன் மெய்யனும் போலிஸ் தமது லயத்துக்கு வருவதைப் பார்த்தார்கள்.

வேலாயுதத்தின் வீட்டை போலிசார் திறப்பதைக் கண்டார்கள்.

அவர்களிருவரின் முகமும் பேயறைந்தாற் போல் மாறிற்று.

ஏதோ வில்லங்கம் நடந்திருப்பதை விளங்கிக் கொள்வதற்கு அவர்களால் முடிந்தது.

மெய்யனின் நெஞ்சுக்குள் மௌன யுத்தமே நடந்தது.

சில நாட்களாகவே இப்படி ஏதோ வழமைக்கு மாறான ஒன்று நடக்கப்போகிறது என்ற சந்தேகம் அவளுக்குள் இருந்தது. அது இப்படி கொலையில் முடியும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

கதிர்காமத்துக்குப் போய் வந்த தினத்திலிருந்தே வேலாயுதம் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முரண்டு பிடிப்பதை புவனேசுவரி அவதானித்து வந்தாள்.

மச்சான், இன்னும் மூணுமாசம் இருக்கிறது நம் கலியாணம் நடப்பதற்கு துரையோடு சண்டை போடுவதை விட்டு விடுங்கள் என்று அவள் அவனுக்கு அறிவுரைப்பகர,

“அதன் பிறகு உன்னோடு சண்டை பிடிக்கட்டா”

“இல்லே மச்சான், மத்தவங்களைப் போல நாமும் இருந்து விட்டுப் போவமே நமக்கென்ன வந்தது.”

இல்லே புவனேஸ் என்னால் அப்படி இருக்க முடியாது என்று அவளைப் பார்த்து கூறியவன்.

“நம்முடைய மக்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் நமக்கு வேளாவேளைக்கு உண்பதற்குக் கஞ்சி இல்லை என்பது உண்மைதான். இலங்கையில் குடிப்பதற்குக் கஞ்சியைக் கொடுத்து. உடுத்துவதற்குக் கந்தையைத் தருகிறார்கள். அதற்குள் நம்முடைய உணர்வுகள் அத்தனையையும் மிதிச்சு நசுக்கி விடுகிறார்கள். நமக்கு நடக்கும் கொடுமைகள் ஒன்றா இரண்டா? இதைவிட செத்துப் போகலாம் புவனேசு.

“மச்சான் ஒரே அடியாக அப்படிச் சொல்லாதீர்கள்.”

“இல்லை புவனேசு, மாடசாமிப்பெரியவரு வாஞ்சி நாதனைப் பற்றி கூறியதைக் கேட்பதற்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது. நெனச்சதை செய்து முடிக்க அவனைப்போல நமக்கு மனசு வேணும். நாமும் அப்படி

ஆகணும். இல்லாட்டி நாம பொறந்ததுல யாருக்கும் பிரயோசனமில்ல.”

“என்ன செய்யணுங்கிறீங்க”

“’என்ன செய்யனுமுன்னு என்னால் சொல்ல முடியலை. ஆனால் என்னவாவதுசெய்ய வேண்டும்.”

அவளின் தீர்க்கமான சிந்தனைகளும், தீர்மானமான முடிவுகளும் இப்படி பல சமயங்களில் வெளிவந்திருக்கின்றன.

ஒருமுறை இப்படிதான் மலையிலே கொழுந்துக் காட்டில் சில்லறைக் கங்காணி ஒருவன் புவனேசுவரியிடம் சில்மிசப்பேச்சை அவிழ்த்து விட.

பொறுமையாக எல்லாவற்றையும் சகித்து வந்த அவள் வேலாயுதத்திடம் முறையிட.

இப்படி பேசுவதையே நமது தோட்டமக்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேறு என்ன செய்வார்கள்? அதிலேயே ஊறிப் போய்விட்டார்கள். அப்படி பேசுவதிலேயே அவர்கள் இன்பம் காணுகிறார்கள். அளவோடு அவர்களை தூரவே வைத்துக்கொள் என்று அவருக்குப் புத்திமதி கூறினான்.

ஆரவாரமாக பேசுவதிலும் ஆர்ப்பாட்டம் செய்வதிலும் அவனுக்கு பிடிப்பு இருந்ததில்லை. அவைகளை அங்கீகரிப்பதும் இல்லை. தொழிலாளர்களிடையே தொழில் செய்யும் நேரங்களில் பாடப்படும் பாடல்களைக் கேட்டவர்களுக்கு அதில் கலந்தொலிக்கும் பாலுணர்ச்சி பட்டெனப் புலப்படும். கேட்பவர்களிடையே சிருங்கார ரசனையை உண்டு பண்ணும், அதில் இன்பம் கண்டு தொழிலில் உண்டாகும் சிரமத்தை மறந்து விடுவார்கள். கங்காணிமார்களின் கதையும் இப்படிதான்? என்று வேலாயுதம் கூறி சமாதானம் சொல்வான்.

ஏனைய தோட்டப் பெண்களைப்போல புவனேசுவரியும் மூன்றாம் வகுப்பு வரை தோட்டப் பள்ளியிலே படித்தவர்தான். அவருக்கு வயசை மீறிய அறிவு வளர்ச்சி இருந்தது. அவள் செய்யும் காரியங்களில் அவை தெரிந்தன.

காத்தவராயன் கதையும், மதுரைவீரன் கதையும் அவளுக்கு தண்ணி பட்டபாடு, தனக்கு புருஷனாக வரப்போகிறவன் அவர்களைப் போல நினைச்சதை முடிக்கும் திறமையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நித்தமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தாள்.

வேலாயுதத்தோடு அவள் நெருங்கி பழக ஆரம்பித்தப்போது மெய்யன் அதை அங்கீகரித்தான்.

தோட்டத்து பெரிய கங்காணியாரும் பெரிய டீ மேக்கரும் வேலாயுதத்துக்கு ஆதரவாக இருந்த நாட்களை நினைத்து அவள் பரவசம் அடைந்தாள்.

கதிர்காமத்துக்கு ஒருமுறையும் சிவனொளி பாதமலைக்கு ஒரு முறையும் அவள் சென்றிருக்கிறாள்.

வீராசாமி, வேலாயுதன், மெய்யன் என்று ஒரே குடும்பமாகச் சென்றார்கள்.

சிகரத்தின் உச்சியில் நின்று தனக்கு அமையப்போகும் வாழ்க்கையை கற்பனை செய்து பார்த்தாள்.

நிர்மலமான வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் அவளுக்கு ஆசை காட்டின, தன்னுடைய வாழ்க்கையும் அப்படி ஜொலிக்கப் போவதை எண்ணி சந்தோஷப்பட்டாள்.

இரண்டு வருடத்துக்கு முன் ஒருநாள் இப்படித்தான் ஐந்து அன்னாசி பழ குருத்துக்களை கொண்டு வந்து தோட்டத்தில் நட்டாள்.

நம்முடைய தோட்டப் பகுதிகளில் இவைகளை உண்டாக்கிப் பார்க்க வேண்டும். கொழும்பு போன்ற இலங்கையின் மேல் பகுதிகளில் இந்த பழங்கள் நன்கு வளர்கின்றன என்றாள். அவை பெருகி இப்போது தோட்டத்தில் அரைவாசியை அடைத்துக் கொண்டிருக்கிறது. தேயிலைத் தோட்டத்துக்கு மத்தியில் அன்னாசிதோட்டம். புதிது புதிதாக நாளுக்கு நாள் தான் அறிந்தவற்றை பிறரிடம் பகிர்ந்து கொள்வதிலும், அவர்கள் மத்தியில் அவற்றைப் பரப்புவதிலும் அவன் ஈடுபாடு காட்டினாள்.

தொடரும்…

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *