இயற்கை – நிலம் – இசை : 06 – T.சௌந்தர்.

நிலமும் ஓவியமும் :

Landscape [ நிலப்பரப்பு ] என்ற சொல்லை வழங்கிய ஓவியர்கள்!

30,000 ஆண்டுகளுக்கு முன்னர்

புள்ளிகளாலும்,கோடுகளாலும் குகைகளில் கீறியதன் மூலம் மனிதன் தனது படைப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றான். பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள குகைகளில் வரையப்பட்ட வனவிலங்கு உருவங்களின் நேர்த்தி என்பது கண்ணால் பார்ப்பதை கோடுகளால் மிக எளிமைப்படுத்தி வரைந்து ஆவணப்படுத்தும் கலைக்கு முன்னோடியாகும்.

ஆரம்பகால மனிதர்கள் ஓசைப் புலன்சார்ந்த ஒலிகளை குகைகளில் தாம் வரையும் உருவங்கள் மூலம் வெளிப்படுத்தலாம் என நம்பியதாகவும், மொழிக்கான முந்தைய வளர்ச்சித்திறனை இது உருவாக்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வரையும் அல்லது கீறும் ஆற்றலே பின்னாளில் மொழிகளின் உருவாக்கத்திற்கு முன்னர் குறியீடுகளை படைக்கும் திறனை உருவாக்கியது.

மனித மொழி என்பது ஒரு சுருக்கமான பாறைக்கலை குறியீட்டு அமைப்புடன் உருவாகி பின் பல்வேறு நிகழுவுகளினூடே வளர்ந்திருக்கலாம் என்பார் சாவோ பல்கலைக்கழகத்தின் மொழியியலாளர் Vitor Nobrega.

குறியீடுகளாக ஆதிகாலத்து மனிதர்கள் கீறிய கோடுகளே மொழி உருவாக்கத்தின் அடிப்படையாக உள்ளன.

விஞ்ஞானரீதியான இயற்கையறிதலில் கலையும் [ Art ] [ ஓவியம்,சிற்பம், இலக்கியம் ] ஓர் அறிவியல் கருவியாகப் பயன்பட்டுவந்துள்ளது. இயற்கைத் தத்துவம், விஞ்ஞானம், அறிவியல் போன்ற துறைகளிலெல்லாம் கவனம் செலுத்திய அரிஸ்டோட்டல் , லியனார்டோ டாவின்சி போன்ற மேதைகள் கலைகளையும் முக்கியமானதாகக் கருதினார்கள்.

குறிப்பாக லியனார்டோ டாவின்சி வரைந்த மனித உடலுறுப்புகள் மற்றும் நீரின் அசைவுகள் பற்றிய நுணுக்க கோட்டோவிய வரைதல்கள் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. விஞ்ஞானரீதியான ஆய்வுநெறிகளில் பெறும் அவதானங்களை வரைபடங்களாக [ diagrams ] வரைவது மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது.

இயற்கை, நிலம் குறித்து தொன்மங்களும், இதிகாசங்களும் எவ்விதம் கவிதை, இலக்கியம் போன்றவற்றில் பிரதிபலித்தனவோ, அதைப்போன்று காட்சிக்கலையான ஓவியத்திலும் அவை பிரதிபலித்தன. சொற்களை அடுக்கி அடுக்கி மனங்களை அசைக்க இலக்கியத்தால் முடியுமென்றால் அசையாத ஓவியங்களில் கோடுகளாலும், வண்ணங்களாலும் மனதை அசைக்க முடியும் என்பதை ஓவியர்கள் நிரூபித்தார்கள்.

கோடுகளைப்போலவே நிறமும், இசையும் அதனதன் தனித்துவங்களுடனும், ரசச் சேர்க்கைகளுடன் தங்கள் செல்வாக்கைச் மனிதர்கள் மீது செலுத்துகின்றன. அவை கற்பனைகளைத் தூண்டுவதுடன் பிற மனஆற்றல்களையும் தூண்டி மன மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன.

ஓவியம்,சிற்பம்,கட்டிடம், இயந்திரவியல் மற்றும் நவீன தொழில் துறைசார்ந்த உற்பத்திகளிலும் அவற்றின் அவசியமான அடிப்படையாக வரைதலே [ Drawings] மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பழங்காலக் கவிஞர்கள் இயற்கை, நிலம் சார்ந்த வர்ணனைகளை தமது கவிதைகளில் எழுதினார்கள் என்றால் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் அவற்றை வெளிப்படுத்தினார்கள்.

ஓவியர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும் இயற்கைக்காட்சிகள் ஈர்ப்பைத் தருவனவாக உள்ளன. சில ஓவியர்கள் இயற்கை காட்சிகளை வரைவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர். அவை அவர்களுக்கு புத்துணர்ச்சி தருவதுடன் இயற்கையில் மனிதனது நிலை பற்றிய புரிதலையும் வழங்குகிறது.

கவிதை போலவே மலைகள், பள்ளத்தாக்குகள், மரங்கள், நதிகள், காடுகள், பூக்கள், விலங்குகள் போன்றவை ஓவியங்களிலும் பிரதிபலித்தன. ஓவியங்களுக்கு முன்னோடியாக எகிப்து ஓவியங்கள் உள்ளன. அந்த ஓவியங்களில் இயற்கைசார்ந்த காட்சிகளும், புல், பூக்கள், தாவரங்கள், பறவைகள், மிருகங்கள் போன்றவற்றையும் காணமுடியும்.

கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாம் கண்டவற்றை பழங்காலத்து ஓவியர்கள் பதிவு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து இத்தாலிய ஓவியர்கள் வரைந்த நிலக்காட்சி ஓவியமரபு, அதன் நீட்சி ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் தொடர்ந்தது. குறிப்பாக Romantic காலத்தில் அது உச்சம் பெற்றது.

கவிதையில், உரைநடையில் இயற்கை பற்றிய விவரணைகளை படிக்கும் போது இயல்பாகவே மனதில் காட்சிகள் புலப்படுவதை உணர்ந்து கொள்வோம். ஆனால் இயற்கை சார்ந்த ஓவியங்களைக் காணும் போது அவற்றை நிஜமாகவே காணுவது போன்ற அழகுணர்ச்சியும், கலையுணர்ச்சியும் மட்டுமல்ல ஒளியூட்டத்தையும் பெறுகிறோம்.

பருவகாலங்களில் உண்டாகும் நிறபேதங்களையும், ஒளியின் ஜாலங்களையும், காட்சியில் வெளிப்படும் வானிலையின் ஈரப்பதம், வெம்மையின் தகிப்பு, வீசியடிக்கும் மழையின் வேகத்தையும், உடலை உறையவைக்கும் குளிர், பனி, புயலின் வீச்சு என பல அற்புதங்களைத் தங்கள் தூரிகைத் தும்புகளின் வீச்சுகளால் வெளிப்படுத்தி அதிசயிக்க வைத்தவர்கள் ஓவியர்கள்! Frederic Edwin Church என்ற ஓவியரின்

Morning in the Tropics

Morning in the Tropics என்ற ஓவியமும், Albert Cuyp என்ற ஓவியரின் A View of Dordrecht என்ற ஓவியமும், J.M.W. Turner என்ற ஓவியரின் Snowstorm என்ற ஓவியமும் இந்தவகை ஓவியங்களுக்கு உதாரணங்களாகும்.

இயற்கையில் அமர்ந்து அதை வரைவதை மேலைத்தேய ஓவியர்கள் ஒரு தவம் போல செய்தனர். நிலம்சார் ஓவியங்கள் மட்டுமல்ல கடல் சார்ந்த ஓவியங்களும் தீட்டப்பட்டன. 17ம் நூற்றாண்டில் கடல் வணிகத்தில் சிறந்த மாலுமிகளாக இருந்த டச்சுகாரர்கள் தங்கள் சாகசங்கள் நிறைந்த பயணங்களில் கண்ட கடல் பிரமிப்பூட்டும் பரப்பையும் , ஆகாயத்தையும், கடலை ஊடறுத்துப் பாயும் தங்கள் கப்பலைகளையும் ஓவியங்களாகத் தீட்டினர். SImon Vlieger என்ற ஓவியர் இவ்வகை ஓவியங்களை வரைவதில் புகழ் பெற்றவராக இருந்தார்.

உண்மையில் இயற்கை குறித்த, நிலம் சார்ந்த நிலப்பரப்பு Landscape என்ற சொல்லை ஐரோப்பிய ஓவியர்கள், குறிப்பாக சொல்லல வேண்டுமானால் Holland ஓவியர்கள் தான் வழங்கினார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தச் சொல்லை சுவீகரித்துக் கொண்டனர்.ஐரோப்பிய செவ்வியல் காலம் [ Classical Period ] என்று கருதப்படுகின்ற 17 ,18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களில், குறிப்பாக ஓவியத்துறையில் பாரம்பரிய தொன்மைக் கதைகளை சித்திரிக்கும் ஓவியங்களின் பின்னணியில் இயற்கையை அமைக்கும் பாங்கு புதிய போக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த புதிய போக்கின் முன்னணி நில மைப்பு ஓவியர்களின் ஒல்லாந்ததை சேர்ந்த ஓவியர்கள் முன்னணியில் இருந்தனர்.

ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான நிலம்சார் ஓவியங்களை வரைந்தவர் ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்த ஓவியர்களே! அந்த வகையில் 17ம் நூற்றாண்டு என்பது ஓவியத்தின் பொற்காலம் என்று இன்றும் வர்ணிக்கப்படுகிறது. ஆற்றல்மிக்க ஓவியர்கள் ஹொலண்ட் நாட்டில் இக்காலத்தில் தங்கள் தடங்களை பதித்துச் சென்றுள்ளனர். நிலம்சார் ஓவியங்களை வரைந்தவர்களில் முக்கியமானவர்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

Jacob van Ruisdael [1628 – 1682 ] The Windmill of Wijk bij Duurstede

Peter Paul Rubens – [1577 – 1640 ] The Rainbow Landscape

Meindert Hobbema – [1638 – 1709 ] The Avenue at Middelharnis

Rembrandt van Rijn – [1606 – 1669 ] Landscape with a Stone Bridge

Jan van Goyen – [1596 – 1656] The Square Watch-Tower

Johannes Vermeer – [1632 – 1675 ] Johannes Vermeer

Caspar David Friedrich [1774-1840 ] Moonrise above the Sea, 1822.

இவர்கள் ஓவியங்களில் இயற்கையை மனித அனுபவத்தின் மையமாக வைத்துக்காட்டினார்கள்.

வண்ண ஓவியங்களைவிட கருப்பு வெள்ளையில் வரையப்பட்ட நிலம்சார் ஓவியங்கள் அதிக விலைக்கு விற்கும் அளவுக்கு அவற்றிற்கான வரவேற்பும், சந்தையும் அக்காலத்தில் உருவானது. செல்வந்த கனவான்களுக்கென பிரத்தியேகமாக அமர்ந்து வரையப்பட்ட நிலைமாறி, கண்காட்சிகள் மூலம் காட்சிக்கு வைக்கப்பட்டு, ஓவியங்கள் விற்கும் நிலையும் அக்காலத்தில் நிலவியதால், வாங்கும் தகுதிக்கு ஏற்ப எல்லா சமூகத்தர மக்களிடமும் அவை சென்றும் சேர்ந்தன.

நிலப்பரப்பை மனிதர்களின் செயல்பாடுகளின் பின்னணியாக வைத்து வரையப்பட்ட காலத்தில், அவற்றைப் பின்னணியாக அல்லாமல் இயற்கையின் தனித்தன்மைமிக்க திறனை வெளிப்படுத்தும் பாங்கில், மனிதர்களற்ற தனிக்காட்சிகளாகவே வரைந்து காட்டியவர் பீட்டர் போல் ரூபன்ஸ். அந்த வகையில் landscape என்ற புதிய சொல் உருவாகியது.

இவர்களுக்கு முன் மத்திய காலத்து ஓவியர்களான ராபெயல், அஞ்சலிகோ , லியர்னார்டோ டாவின்சி போன்றோரின் ஓவியங்களில், ஐரோப்பாவுக்கே உரித்தான அமைதியான நில அமைப்பைக் காண்பித்திருப்பார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் வியந்து பார்க்க வைக்கும் நிலக்காட்சி ஓவியங்களை மேலைநாட்டு ஓவியர்கள் தந்திருக்கிறார்கள். அவர்களில் Titian,Pieter Bruegel, Rembrandt, Claude Lorrain, Jan Van Goyen, John Robert, Caspar David Friedrich போன்றவர்களை குறிப்பிட்டு சொல்வதுடன் இன்னும் பல பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

செல்லும் இடங்களிலெல்லாம் தமது குறிப்பேடுகளில், தாம் காண்பவற்றைப் பதிவு செய்யும் ஐரோப்பியர்கள் ஏராளமான செய்திகளை பதிவு செய்து வரலாற்று ஆவணங்களாக்கியுள்ளனர். ஆசிய, ஆபிரிக்க நாடுகளை பொறுத்தவரையில் ஐரோப்பியர்களின் குறிப்புகளைப்பின்பற்றியே பெரும்பாலான வரலாற்று ஆவணங்களை பதிவு செய்யும் ஒரு மரபு உருவாக்கப்பட்டது.

அந்தவகையில் இயற்கையுடன் இசைந்த அம்சங்களை தமது கலைகளில் பிரதிபலித்த இந்தியக்கலைமரபு, கவிதையில் நிலை நிறுத்தியதை போல ஓவியங்களில் நிறுத்தவில்லை. இரண்டுவிதமான வெளிப்பாட்டுத் துறையாக ஓவியமும், கவிதையும் இருப்பதும், காண்பியல் ஊடகத்தின் செல்வாக்கு குறைந்த சமூகமாக இந்திய, தமிழ் சமூகம் ஆக்கப்பட்டதின் விளைவுகளே இவை என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். கேட்பதில் இருக்கும் ஆர்வம் அதிகரித்தமையும், காண்பியல் கலை பற்றிய விழிப்புணர்வில்லாமையும் இதற்கு காரணம் எனலாம். அதனாலேயே காண்பியல் கலையான சினிமாவில் கூட வசனத்தை குவித்து அதை கேட்பியல் சினிமாவாக மாற்றியுள்ளனர். தமிழ் சினிமாவை பார்க்க தேவையில்லை ; கதை வசனத்தை வைத்தே நிறைவு செய்ய முடியும் என்பதில் இன்றுவரை அதிக மாற்றமில்லை. ஆனால் பழைய சிற்ப, ஓவியங்களில் ஓரளவேனும் இயற்கை பற்றிய சித்தரிப்புகளை காண முடிகிறது.

இந்திய சிற்ப மரபிலும் இயற்கை குறிப்பாக பறவைகள், தாவரங்கள், பூக்கள் போன்றவை மனிதர்களோடு இரண்டறக்கலந்துள்ள வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அஜந்தா, எல்லோராக குகைகளிலும், சித்தன்னவாசல் குகைகளிலும், சிகிரியா குகைகளிலும் உள்ள ஓவியங்கள் இதற்கு சான்றாக உள்ளன. ஆனால் நிலம் பற்றிய காட்சிச் சித்தரிப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

17ம் நூற்றாண்டில் இந்தியாவில் கால்பதித்த ஐரோப்பிய ஓவியர்கள் இந்திய நிலப்பரப்பை ஓவியங்களாக்கினர். இந்தியாவுக்கு வருகை தந்த ஓவியர்கள் Warren Hastings என்பவர் தலைமையில் இயங்கினர்.

William Daniel,, Thomas Daniel போன்றோர்கள் முக்கியமான இந்திய நிலவியல் ஓவியர்களாக விளங்கினர். இந்த ஓவியசெயல்பாடுகள் இந்திய பிராந்தியங்களின் பிரிட்டிஷ்சாரின் ஆழமான பொருளாதார நலன்களையும் சார்ந்திருந்தது. 1770 களில் James Hook நடாத்திய பயணங்களில் சென்ற ஓவியக் கலைஞர்கள் நிலம்சார்ந்த ஓவியங்களை மிக சிறந்த முறையில் வரைந்தனர்.

கவிதையை ரசிப்பவர்கள் கூட, அதனை ஓவியங்களுடன் இணைத்துப் பேசுவதை நாம் காண்கிறோம். இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலில் பேரா.கைலாசபதி இது குறித்து பின்பருமாறு விளக்குகிறார்.

///…இன்னுமொன்று கவிதையைப்பற்றி நாம் உரையாடும் பொழுது அதனை சில வேளைகளில் ஓவியத்துடன் இணைத்து கருத்துத் தெரிவிக்கிறோம்.” சொல்லோவியம் “, “சொற்சித்திரம்”, என்று சில கவிதைகளை குறிப்பிடுகிறோம்.” அக்காட்சியை அழியா ஓவியமாகக் கவிஞன் தீட்டியுள்ளான் ” என்கிறோம். புதுமைப்பித்தன் தனது சிறுகதை ஒன்றிற்கு ” மனக்குகை ஓவியங்கள் ” எனப்பெயரிட்டிருக்கிறார்.

பி.ஸ்ரீ. கம்பரராமாயணக் காட்சிகளைக் ” கம்பசித்திரம் ” ,” சித்திர ராமாயணம்” என்ற தலைப்புகளில் எடுத்து விளக்கியிருக்கிறார். இவற்றை விட ஜனரஞ்சகமான முறையில் கி.வா.ஜகந்நாதன் ” சங்க நூற் காட்சிகள் ” என்னும் பெயரில் வரிசையாக பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார். இவையெல்லாம் வெவ்வேறு அளவில் அணுகறணக் கொள்கைவழி நின்று இலக்கியத்தை அணுகியதன் விளைவுகளே. “குறிஞ்சிக் கலி வழித்துணை விளக்கம்” என்னும் நூலிலே மார்க்க பந்து சர்மா விரிவாகக் கவிதைகள் பற்றிக் குறிப்பிடுகையில் “சொல்லால் இயன்ற சித்திரங்கள் ” சிலவற்றைக் காட்டியுள்ளனர். // மறைமலையடிகள் தமிழ் ஆசிரியராக இருந்து பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பித்த போது முல்லை பாட்டுக்கு ஆராய்ச்சியுரை ஒன்றை இயற்றினார்.அந்நூலில் ” பழந்தமிழ் பாட்டின் சிறப்பியல்பு ” என்னும் பகுதியில் அவர் , பழந் தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் உலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பிருந்தா தைத்துப் தம் நினைவினை ” இயற்கை திறம் பிறழாமல் பாட்டு பாடினார் என்று பொதுவாகக் கூறிவிட்டு குறுந்தொகை பாடலை உதாரணம் கூறி விளக்குகிறார் /// [இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலில் பேரா.கைலாசபதி]

இயற்கையை ரசிப்பதுமட்டுமல்ல கலைகளுக்கிடையேயான கலைத்துவமிக்க அழகுகளை ஒன்றோடிணைத்து, ஒப்பிட்டு பேசுவதையும் காண்கிறோம்.

///தனிநாயகம் அடிகளார் கிரேக்க – தமிழ் – லத்தீன் இயற்கை கவிதைகளை ஒப்பிட்டு ” இயற்கைப்பாட்டு ” என்ற நூலை எழுதினார்.

இங்கனம் இயற்கையும் அதனோடிசைந்த காட்சியும், தாவரங்களும், பூக்களும் கவிதையில் இடம்பெறுவதை போல பின்னாளில் உருவான நாவல்களிலும் அவை அதிமுக்கியத்துவம் பெற்று நிற்கின்றன.

நாவல்களில் இயற்கை வர்ணனைகள்:

உணர்ச்சி சார்ந்தும் அறிவுசார்ந்தும் எழுதப்படும் வர்ணனைகள், எழுதும் எழுத்தாளர்களின் ஆற்றலைக் காட்டுகின்றன. தமிழில் மட்டுமல்ல, மொழி பெயர்ப்பு இலக்கியங்களிலும் அவற்றின் அழகிய வர்ணனைகளைக் காண்கிறோம். குறிப்பாக ரஷ்ய எழுத்தாளர்களின் இடம் சார்ந்த வர்ணனைகள் , உயிரோட்டமான பாத்திரப்படைப்புகளின் வர்ணனைகள் என்பவை நம்மை அவர்களது எழுத்தில் ஒன்றை வைத்துவிடும் ஆற்றல் மிக்கவை.

எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமது கற்பனை வளத்திற்கு ஏற்ப தமக்கேயுரிய பாங்கில் நிகழ்வுகளை வர்ணனையாக தருவர். வர்ணனைகள் இலக்கியத்திற்கு ருசி தருபவை. அதன்வழியே படிப்பவர்களை ஈர்த்துச் செல்லும் உத்தியாகவும் பயன்படுகிறது. சிலர் வர்ணனைகளை தேவைக்கு அதிகமாக எழுதி கெடுத்துவிடுவதும் உண்டு. அதை கிலாகிக்கும் ஒரு கூட்டமும் இல்லாமில்லை.

கிராமமக்களின் எளிய வாழ்வை தனது கதைகளில் மிகச்சசுவையாக கையாண்ட எழுத்தாளுமை கி.ராஜநாராயணன், இயற்கையோடு இசைந்து விலங்குகள், பறவைகள் போன்றவற்றையும் குறியீடாக்கி மனித வாழ்வை பிரதிபலித்தார். அதே போல யாழ்ப்பாணத்து அடித்தட்டு மக்களின் வாழ்வைத் தனது கதைகளிலே பிரதிபலித்த எழுத்தாளர் கே.டானியல் யாழ்ப்பாணத்து கிராமங்களை தனது வர்ணனைகளால் மனக்கண் நிறுத்திக்காட்டினார்.

தமிழில், எழுத்தாளர் தி.ஜானகிராமன் வர்ணனைகளை மிக திறம்படக் கையாண்டவர்களில் முக்கியமானவர்.கதை நிகழும்இயற்கையையும், சூழலையும், காதாமாந்தர்களின் உணர்வுகளையும் மிகத்திறமையாக வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்ல கதையின் போக்கில் இசையையும் இணைத்து எழுதுவதில் கைதேர்ந்தவர். இதுவே பலரிடம் இல்லாத தகமையாகவும் அவருக்கு வாய்த்தது

இயற்கையை ரசிப்பதுமட்டுமல்ல கலைகளுக்கிடையேயான கலைத்துவமிக்க அழகுகளை ஒன்றோடிணைத்து, ஒப்பிட்டு பேசுவதையும் காண்கிறோம்.

இயற்கை, இயற்கை என்று இங்கே நாம் பேசுவது பெரும்பாலும் மனிதனால் திருத்தியமைத்து மாற்றப்பட்ட கட்டிடங்களோ அல்லது நகரங்களையோ குறிப்பதல்ல! இயற்கை என்பது மனிதர்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளையே குறிப்பதாகவும், இயற்கையழகு மிக்க பகுதிகளுமே பெரும்பாலான மக்கள் மனதில் நிலைத்திருப்பதையும் கூறலாம்.

இயற்கையால் உந்தப்படும் அகஎழுச்சியை கவிதை, இலக்கியம், ஓவியம், சிற்பம், கட்டிடம் போன்ற கலைகளில் காவியம், கவிதை, நாடகம் போன்றவை இசையுடன் தொடர்பு கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இசையுடன் இக்கலைகள் இணையும் போது அக்கருத்துக்கள் சிறந்த முறையில் வெளிப்படுவதுடன் ஏனைய கலைகள் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் இசை மிக லாவகமாக வெளிப்படுத்தும் வல்லமை மிக்கது.

அதுமட்டுமல்லாமல் இசை, அக்கலைகள் கூறும் உணர்வுகளுக்கப்பால், சம்பந்தமற்ற வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடியது!

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *