மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-  மு. நித்தியானந்தன்-பாகம் 2

மு. நித்தியானந்தன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்திற்கான ஆய்வுகளுடன் கூடிய முன்னுரையை தொடராக பதிவிடுவதில் பெருமை கொள்கிறோம்.

பாகம் 2

போப் துரை கொலைவழக்கில் நீதவானாகவிருந்த சோயர்ஸ் (Justice Soertsz) ஜூரிமார்களுக்கான சட்ட வழிகாட்டல்களை விபரிக்கும்போது, பின்வருமாறு குறிக்கிறார்:
‘தலைவர் என்ற வார்த்தையே அசாதாரணமான ஒரு போதையைத் தருகிறது. ஜெர்மனியில் ‘பியூரர்’ (Fuerher) என்று சொன்னாலென்ன, இத்தாலியமொழியில் ‘இயு டூச்சே’ (Il Duce) என்று சொன்னாலென்ன அல்லது தொழிலாளர்களில் ஒருவனைப் பிடித்து, அவனைத் தொழிலாளர்களின் தலைவன் என்று சொன்னாலென்ன, இந்த மமதை ஏற்பட்டுவிடுகிறது. மத்தியகுழு உறுப்பினர் என்ற உயர்பதவி ஏற்றமானது எப்படியோ மெய்யப்பனின் தலைக்குள்ளும் ஒரு திமிரை ஏற்படுத்திவிட்டது’ என்கிறார் சோயர்ஸ்.
மெய்யப்பன் தொழிற்சங்கத் தலைவராகவிருப்பதை ஹிட்லரோடும் முசோலினியோடும் ஒப்பிட்டுநோக்கும் பாங்கினை இங்கு பார்க்கலாம். அடிமை குடிமைகள்போலிருந்த சனசமூகக் கூட்டத்திலிருந்து உரிமைக்குரல்கள் எழும்போது அதிகாரத்தைத் தக்கவைக்கும் கும்பல் அதனை எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.
நீதித்துறைசார்ந்த வோல்டர் தல்கொடப்பிட்டியகூட தனது எழுத்தில் பின்வருமாறு குறிக்கிறார்:
‘முதல் தடவையாக புதிய சுதந்திரத்தின் பூரிப்பை அனுபவித்த தொழிலாளர்கள் முன்போல் பணிந்துபோபவர்களாக இல்லாமல், மூர்க்கமானவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்டளையையும் எதிர்ப்பவர்களாகவும், எந்தத் தலையீட்டையும் நிராகரிப்பவர்களாகவும், வம்பிற்கிழுக்கும் திமிரான மனோபாவத்துடன் திரிகிறார்கள்.’
தங்களுக்கு கொடுக்கப்படுகிற சம்பளம் போதாது என்று கேட்கிற வாய்ப்புத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைக்கூட, அதனால், அவர்களுக்குத் திமிர் கூடிவிட்டது  என்று புரிந்துகொள்ளும் மனோபாவம் அன்றைய நீதவான்களின் மத்தியிலும்கூட வேரூன்றிப்போய்க் கிடக்கிறது.
மெய்யப்பன் தனது மனைவியுடனும் நண்பர்களுடனும் நடைப்பயணமாகவே கதிர்காமத்திற்குப் போயிருக்கிறார்கள். திரும்பும் வழியில்தான், அவரது மனைவியின் காற்புண் காரணமாக அவரால் நடக்கமுடியாததால், கம்பளையிலிருந்து ஒரு காரை அமர்த்திக்கொண்டு  ஸ்டெலென்பேர்க் தோட்டத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள். நீண்ட பயணத்தின் பின் அவர்கள் மிகவும் களைத்துப்போயிருப்பார்கள். தங்கள் தோட்டத்துப் பாதையில் தங்கள் லயம்வரை காரில் செல்வதையே  சகித்துக்கொள்ள முடியாமல், அவர்களைத் திமிர்த்தனமாக இறங்கச்சொல்லி ‘நடந்து போ’ என்று கட்டளையிடும் போப் துரையின் அகங்காரம் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை.

போப் துரை காரை உள்ளே அனுமதிக்க மறுத்ததற்கு, கார் அடிக்கடி வந்துபோனால் ரோட்டிற்கு சேதாரம் அல்லது தேய்மானம் ஏற்பட்டுவிடலாம் என்பதும், வாகனங்கள் வருவதால் தோட்டத்தில் திருட்டுகள் நடப்பது அதிகரித்துவிடலாம் என்றும் போப் துரை கருதியிருக்கலாம் என்று, நீதவான்கள் இந்த வழக்கு மன்றத்தில் வாதம் வைத்திருக்கிறார்கள். தோட்டத்தொழிலாளர்கள் மிகமிக அரிதாகத்தான், மிக அபூர்வமாகவே காரைப் பயன்படுத்துபவர்கள்.  இதற்கெல்லாம் அப்பால் அந்த ரோட்டையும் பாலத்தையும் தோட்டமலையையும் தங்கள் வியர்வையால், ரத்தத்தால் உருவாக்கியவர்களே இந்தத் தொழிலாளர்கள்தான். அதுமட்டுமல்ல, காரிலிருந்து இறங்கி நடந்துபோவது ஒன்றும் இந்தக் கூலிகளுக்கு பெரிய பிரச்சினை கிடையாது என்றும் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. என்னமாதிரியெல்லாம் தொழிலாளர்களை இழிவாக, மனித ஜந்துகளாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை இந்த வழக்கில் அவதானிக்கமுடிகிறது.
இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரலாக வாதங்களைவைத்த ஈ.ஜி.பி.ஜெயதிலக (பின்னாளில் சேர். எட்வர்ட் ஜெயதிலக என்று கௌரவிக்கப்பட்டவர்) ஒரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
‘இந்த லேபரர்ஸ் எந்த வர்க்கத்திலிருந்து வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை மிக எளிதாக உற்சாகப்படுத்திக் கிளப்பிவிடலாம். அவர்கள் கிளம்பினால் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.’
காலாகாலமாக அவர்களை அடிமைச் சிறைக்கூடத்திற்குள்வைத்தே சுகம் கண்டவர்களுக்கு, அவர்கள் மத்தியில் எழும் சிறுமுனகல்கூடக் காட்டுத்தீயாகத் தெரிகிறது.

போப் துரை கொலைவழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ரா.வீராசாமி, மெய்யப்பனின் நம்பிக்கைக்குரிய நண்பர். மெய்யப்பன் மலைக்காட்டில் புல்லுவெட்டுக் கங்காணியாக வேலைபார்க்கையில் வீராசாமி ஸ்டோரில் வேலைபார்த்துவந்தார்.
1940 ஒக்டோபர் மாதம் ஸ்டோரில் வேலைபார்க்கும் வீராசாமிக்கு எதிராக டீமேக்கரும், உதவி டீமேக்கரும் கொடுத்த புகாரின்பேரில் போப் துரை வீராசாமியை வேலைநீக்கம் செய்து, பற்றுச்சீட்டுக் கொடுக்கிறார். வீராசாமி வேலைநீக்க அறிவித்தலை ஏற்க மறுத்து, அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தில் முறையீடுசெய்கிறார். போப் துரையின் முன்னாலேயே பிரதம கிளார்க்கும், கங்காணியும் தன்னை அடித்துத் தாக்கியிருக்கிறார்கள் என்று வீராசாமி புகார்செய்ய, தொழிற்சங்கம் தலையிட்டு, வேலைநீக்க அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு, வீராசாமி மீண்டும் வேலையில் அமர்த்தப்படுகிறார். ஆனால், வீராசாமி ஸ்டோர் வேலையிலிருந்து மலைவேலைக்கு மாற்றப்படுகிறார்.
போப் துரையின் கட்டளையை எதிர்த்து, வீராசாமியை மீண்டும் வேலையில் சேர்க்கப்பண்ணியது, தானே என்று மெய்யப்பன் தோட்டத்தில் மார்தட்டிக்கொண்டு திரிந்தார் என்றும், அதனைக் கேள்வியுற்ற போப் துரை, மெய்யப்பன்மீது கடும் எரிச்சலில் இருந்தார் என்றும் தெரிகிறது.
1941 ஜனவரி 2ஆம் திகதி மெய்யப்பன் வேலைபார்ப்பதில் திருப்தி இல்லை என்று கூறி, போப் துரை மெய்யப்பனை வேலையிலிருந்து நீக்கி நோட்டீஸ் கொடுக்கிறார். மெய்யப்பன் தொழிற்சங்கத்தில் முறையிட, அன்றே போப் துரை அந்த நோட்டீசை வாபஸ் பெறவேண்டுமென்றும் தொழிற்சங்கத்திலிருந்து போப் துரைக்கு கடிதம் போகிறது. அதற்கு போப் துரை பதில் எழுதுகிறார். அந்தக் கடிதத்திற்கு தொழிற்சங்கம் பதில் அனுப்புகிறது. தொழிலாளியை வேலையிலிருந்து துரைமார் நீக்கியதும், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்குப் போய், நீதி கேட்பதென்பதே சட்டம் போதிக்கும் வக்கீல்களுக்கே பொறுப்பதில்லை.
போப் துரை கொலைவழக்கில் அட்டர்னி ஜெனரல் தனது இறுதித் தொகுப்புரையில் தெரிவிக்கும் கருத்துகள் தொழிற்சங்கம் அனுப்பும் கடிதங்களை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் துலாம்பரப்படுத்துகிறது. 
அட்டர்னி ஜெனரல் ஈ.ஜி.பி.ஜெயதிலக கூறுகிறார்:


‘மெய்யப்பனைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறு துரை நோட்டீஸ் கொடுக்கிறார். மெய்யப்பன் என்ன செய்கிறான்? அன்றையதினமே கண்டிக்குப் போய், தொழிற்சங்கதிற்கூடாகத் துரைக்கு, அன்றைக்கே கடிதம் அனுப்புகிறார்கள். என்ன தொனியில் அந்தக் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்று பரிசீலனை பண்ணிப் பாருங்கள். என்ன திமிர்த்தனத்தில் சங்கம் கடிதம் அனுப்பிருக்கிறது என்று பாருங்கள். நோட்டீசை வாபஸ் பெற்றுக்கொண்டு, அவருக்கு வேலையைத் திருப்பிக் கொடுங்கள்’ என்று தோட்டத்துரையைக் கேட்கிறார்கள். தோட்டத்துரை என்ன செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கம் துரைக்குக் கட்டளை பிறப்பிப்பதைப் பாருங்கள்’ என்று ஆத்திரப்படுகிறார் அட்டர்னி ஜெனரல். அவர் மேலும் கூறுகிறார்:

‘பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்காதுபோனால், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்’ என்று தொழிற்சங்கம் தோட்டத்துரைக்கு எழுதுகிறது. என்ன விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமாம்? அநேகமாக வேலைநிறுத்தத்தைச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது எதுவாகவும் இருக்கலாம், கனவான்களே! அடி உதையாகவும் இருக்கலாம். எப்படியோ இது துரைக்கு ஓர் அச்சுறுத்தல்.’
தோட்டத்துரைத்தனத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு  இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கமே முன்னின்று தொழிற்திணைக்களத்தை ஏற்படுத்தி, தொழில் ஆணையாளர்களை நியமனம் செய்து, தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகையில், சட்டம் பயின்றவர்கள், சமூக நீதிக்கு விளக்கம் தர வேண்டியவர்கள் எந்தளவு இருட்டிற்குள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது.
‘வீராசாமியை மீண்டும் வேலையில் சேர்த்ததற்கு தானே முழுப்பொறுப்பு என்று மெய்யப்பன் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு திரிவதாக நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிக அற்பமான குற்றச்சாட்டு. உங்கள் தோட்டத்தில் அமைந்திருக்கும் எங்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் அவர். வீராசாமியை மீண்டும் வேலையில் சேர்ப்பதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அத்தகைய முயற்சியில் தான் இறங்கியது குறித்து அவர் ஏனைய தொழிலாளர்களிடம் சொன்னால் அதனைத் தவறான நடத்தையாக நாங்கள் கருதவில்லை. மெய்யப்பனை வேலையிலிருந்து நீக்கியது அவர் தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறார் என்ற காரணத்திற்காகமட்டுமே. மற்றபடி அவர் தொழிலில் திருப்தியில்லை என்பதெல்லாம் வெறும் சாட்டுக்காகச் சொல்லப்பட்டது’ என்று தொழிற்சங்கம் எழுதிய கடிதத்தால் போப் துரை பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டார் என்றெல்லாம் நீதிமன்றில் வாதிட்டிருக்கிறார்கள். உடனே அவரை அத்துமீறித் தோட்டத்தில் நுழைந்திருப்பதாக பிடிவிறாந்து அனுப்பி, பொலிஸாரை அனுப்பி, அவரைக் கைதுபண்ணுவதற்கு துரைத்தனம் முயன்றிருக்கிறது என்றால், நிர்க்கதியான தொழிலாளிக்கு யார் ஆதரவு தருவது? ஒரு பலமுமில்லாத தொழிலாளரை வஞ்சிப்பதில், அடக்கி ஆள்வதில் ஒட்டுமொத்தக் கூட்டமுமே கைகோர்த்து நின்றிருக்கிறது.

போப் துரையின் எதேச்சதிகாரமான போக்கும், தொழிற்சங்கத் தலைவர்களைப் பழிவாங்க எண்ணும் சிந்தனையும் ஸ்டெலென்பேர்க் தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்தோட்டத்தின் பெரும்பாலான தொழிலாளர்கள் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் ஆவர். தோட்டத் துரைக்குச் சரியான பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் மத்தியில் ஆத்திரம் கனன்றுகொண்டிருந்த நேரத்தில், அந்தத் தருணம் வெகு சீக்கிரத்திலேயே வந்துசேர்ந்தது.

தொடரும்..

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *